எல் அலி விண்கல்
எல் அலி விண்கல் (El Ali meteorite) 15.2 டன் (16,800 கிலோ) எடையுள்ள ஒரு விண்கல்லாகும். சோமாலியாவில் உள்ள உள்ளூர் மக்களால் பல தலைமுறைகளாக அறியப்பட்டிருந்தாலும் முதலில் 2020 ஆம் ஆண்டில் அறிவியல் பூர்வமாக அடையாளம் காணப்பட்டது. கிழக்கு ஆப்பிரிக்காவின் சோமாலிய நாட்டு கிராமப்புற பகுதியான எல் அலியில் கண்டுபிடிக்கப்பட்டதால் விண்கல்லுக்கு, எல் அலி விண்கல் எனப் பெயர் வைத்தனர்.[1]
வரலாறு
தொகுஎல் அலிக்கு வடக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுண்ணாம்புப் பள்ளத்தாக்கில் 4°17.281'வடக்கு, 44°53.893'கிழக்கு என்ற உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்புத் திட்டப் பகுதியில் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[2][3] உள்ளூர் மக்கள் ஐந்து முதல் ஏழு தலைமுறைகளுக்கு இடையில் இப்பாறையைப் பற்றி அறிந்திருக்கின்றனர். அந்நாட்டு பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள், நடனங்கள் மற்றும் கவிதைகளில் இக்கல் இடம்பெற்றுள்ளது.[2] குரேம் சுரங்கம் மற்றும் ராக்சு நிறுவனத்தின் பணியாளர்கள் இந்த விண்கல்லை பன்னாட்டுச் சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். சோமாலியா அரசாங்கம் தலையிடுவதற்கு முன்பு அவர்கள் பாறையை அடையாளம் கண்டு மொகடிசு நகரத்திற்கு நகர்த்தத் தொடங்கினர்.[2]
ஒட்டுமொத்த கலவையின்படி எல் அலி விண்கல்லானது இரும்பு வகை விண்கற்களின் ஒரு குழுவாகும்.[2]
கனிமங்கள் கண்டுபிடிப்பு
தொகு2022 ஆம் ஆண்டில், கனடா நாட்டைச் சேர்ந்த ஆல்பர்ட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 70 கிராம் எடையுள்ள விண்கல்லில் எலாலைட்டு மற்றும் எல்கின்சுடன்டோனைட்டு என்ற இரு கனிமங்களைக் கண்டறிந்தனர்.[4] ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தின் மின்னணு நுண்ணுழைகோல் ஆய்வகத்தின் தலைவரான ஆண்ட்ரூ உலோகாக்கு என்பவரால் கனிமங்கள் அடையாளம் காணப்பட்டன.[5] எலாலைட்டு என்ற கல்லின் பெயரானது அந்த கல் விழுந்த கிராமத்தின் பெயரான எல் அலியின் பெயரை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்பட்டது. இரண்டாவது கனிமத்தின் பெயரானது நாசா விஞ்ஞானி இலிண்டி எல்கின்சு-டாண்டனின் பெயரை அடிப்படையாகக் கொண்டு எல்கின்சுடன்டோனைட்டு என்று பெயரிடப்பட்டது.
இரண்டு கனிமங்களின் செயற்கைப் பதிப்புகளும் 1980 ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டன. ஆனால் இயற்கையில் காணப்படும் வரை அவை கனிமமாக வகைப்படுத்தப்படவில்லை.[5]
விற்பனை
தொகுவிண்கல்லின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது, ஏனெனில் விண்கல் சீனாவிற்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "விண்கல்லில் இருந்த புதிய தாதுக்கள்". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=3183753. பார்த்த நாள்: 3 December 2022.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Meteoritical Bulletin: Entry for El Ali". www.lpi.usra.edu. பார்க்கப்பட்ட நாள் 2022-11-30.
- ↑ "U of A scientists help identify two new minerals found in 'curious' meteorite". edmontonjournal (in கனடிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-30.
- ↑ "Somalia meteorite: Joy as scientists find two new minerals" (in en-GB). BBC News. 2022-11-29. https://www.bbc.com/news/world-africa-63800879.
- ↑ 5.0 5.1 "In meteorite, Alberta researchers discover 2 minerals never before seen on Earth | Globalnews.ca". Global News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-29.
- ↑ University of Alberta(2022-11-28). "New minerals discovered in massive meteorite may reveal clues to asteroid formation". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2022-11-30.
புற இணைப்புகள்
தொகு- Entry for El Ali in the Meteoritical Bulletin
- J.T. Wasson and G. W Kalleymeyn, the IAB iron-meteorite complex: A group, five subgroups, numerous grouplets, closely related, mainly formed by crystal segregation in rapidly cooling melts, Geochimica et Cosmochimica Acta, Volume 66, Issue 13, 1 July 2002, Pages 2445-2473