எழூஉப்பன்றி நாகன் குமரனார்

எழூஉப்பன்றி நாகன் குமரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல்களாக சங்கநூல் தொகுப்பில் இரண்டு பாடல்கள் உள்ளன. அவை இரண்டும் அகநானூற்றில் 138, 240 எண்ணிட்ட பாடல்களாக அமைந்துள்ளன.

பெருங்கோழியூர், குறுங்கோழியூர் ஆகிய ஊரின் பெயர்கள் கோழியின் பெயர் கொண்டு அமைந்திருந்தன. அதுபோலப் பன்றியின் பெயர்கொண்டு அமைந்த ஊர் பன்றியூர். எழூஉ என்னும் சொல் கோட்டைக் கதவை அடைக்கும் தாழ்ப்பாளையும், உழும் கலப்பையிலுள்ள மேழியையும் குறிக்கும். பன்றியின் பல் கலப்பையில் உள்ள எழூஉவைப் போல இருக்கும். இந்த வகையில் இந்தப் புலவரது ஊரின் பெயர் அமைந்துள்ளது.

மலையைக் குறிக்கும் சொற்களில் ஒன்று நாகம். இந்த வகையில் நாகன் என்னும் பெயர் மலைவாழ் மகனைக் குறிக்கும். குமரனார் என்பது புலவர் பெயர். இது முருகக் கடவுள் பெயர்களில் ஒன்று என்பதை நுனைவுகூரலாம்.

பாடல் தரும் செய்திகள்

தொகு

அகநானூறு 138

தொகு

அவன் அவளுக்காக வீட்டுக்கு வெளிப்புறத்தில் காத்திருக்கிறான். அவள் தன் தோழியிம் சொல்வது போல அவன் கேட்கும்படி தன் வீட்டு நிலைமையைப் பேசுகிறாள். அவள் அவனை நினைத்தாளாம். கண்ணில் பனி படர்ந்ததாம். அதைப் பார்த்துவிட்ட அவளது தாய் குறி சொல்லிப் பேயோட்டும் வேலனிடம் சென்று முருகாற்றுப்படுத்த ஏற்பாடு செய்தாளாம். இவளோ அவன் வரும் வழியிலுள்ள இடர்பாடுகளையே எண்ணிக் கலங்கிக்கொண்டிருக்கிறாளாம். ( அவன் திருமணம் செய்துகொண்டு தன்னை அடையவேண்டும் என்பது அவள் இதனால் வெளிப்படுத்தும் கருத்து)

முருகாற்றுப்படுத்துதல்; (சாமியாடும் வேலனை முருகன் என்றனர்) தாய் மேளதாளத்துடன் சென்று, முரகனை வணங்கு, அவனை மனைக்குக் கொண்டுவந்தாள். அவன் முருகனின் கடம்பமரத்தையும், அவன் ஏறும் களிற்றையும் பாடினான். இலையோடு தொடுத்த பூமாலையை அணிந்துகொண்டு நாள்தோறும் என்முன் ஆடினான்.

(குற்றாலம்) தென்னன் என்னும் பாண்டியனின் பொதியமலையின் உச்சியிலிருந்து வீழும் அருவி முழங்குவது போலப் பெருமுழக்கத்துடன் சென்று தாய் முருகனை மனைக்கு அழைத்துவந்தாள். நாள்தோறும் மனையில் அந்த அருவி போல இனிய இசை முழங்கிற்று. (இங்குக் கூறப்படும் அருவி குற்றாலம் ஆகும். மதுரைக்காஞ்சியிலும் குற்றாலம் பேசப்படுகிறது.)

அகநானூறு 240

தொகு

அவள் மீனவர் மகள். அவளை அடைய அவன் இரவில் வந்தான். தோழி அவனை நாளைக்குப் பகலில் வா என்கிறாள். மீனவ மகளின் தந்தை விடியலிலேயே மீன் பிடிக்கச் சென்றுவிடுவானாம். தாய் மீன்பிடிக்கச் சென்றவன் நலமுடன் மீளவேண்டும் என்று பனித்துறையில் இருக்கும் தெய்வத்தைப் பேணச் சென்றுவிடுவாளாம். அது தன் தலைவி தனிமையில் இருக்கும் நேரம் என்கிறாள் தோழி.