ஏழாம் பத்து (பதிற்றுப்பத்து)

சங்க நூலான பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்து தொகுப்பில் பத்து பாடல்கள் உள்ளன. இப்பாடலகளைப் பாடியவர் கபிலர்; பாடப்பட்ட அரசன் செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை. இவனைப் பற்றிய செய்திகளை புகழூர் தாமிழி (பிராமி) கல்வெட்டும் கூறுகிறது. பாடல்களை பாடி கபில பெற்ற பரிசில் - 1,00,000 காணம் காசு சிறுபுறம். அத்துடன் 'நன்றா' என்னும் குன்றின்மேல் அரசனும் புலவரும் ஏறிநின்று அவர்களின் கண்ணுக்குத் தெரியும் நாட்டையெல்லாம் அரசன் அவருக்கு கொடுத்தான். வாழியாதனின் தந்தை; அந்துவன். தாய்; பொறையன் பெருந்தேவி.[1]

பாடல் 61 - புலாஅம் பாசறை

தொகு

(கோவே!) பாரி வாரா உலகம் சென்றுவிட்டான் என்று உன்னை நாடி வரவில்லை. உன் கொடையைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். நீ வழங்கிய கொடையை எண்ணி வருந்துவது இல்லையாம். இன்னும் வழங்கும்போது மகிழ்வதும் இல்லையாம். கொடைச்செயலில் உனக்கு மகிழ்வும் இல்லையாம், வருத்தமும் இல்லையாம். புலவு நாறும் பாசறையில் வேலை உயர்த்திக்கொண்டும், முழவை முழக்கிக்கொண்டும் பாடினி ஆடும் 'வெண்கை விழா'வில் மட்டும் நீ மகிழ்கின்றாயாம். அதனைக் காண வந்தேன். - புலவர் கூற்று.

பாடல் 62 - வரைபோல் இஞ்சி

தொகு

மழை போல் படை நடத்தி மடங்கல் போல் முழங்கிக்கொண்டு சென்று வலிமை மிக்க கோட்டைகளை வென்றவன் நீ. உன்னைப் பணிந்து இறை தந்தால் உன் பகைவர்கள் அவர்களது நாட்டில் ஆனிரைகளை அச்சமின்றி மேய்த்துக்கொண்டு, ஆற்றில் பூத்த ஆம்பலைத் தலையில் சூடிக்கொண்டு, காஞ்சி நிழலில் அமர்ந்து, அரியல் என்னும் பழச்சாற்றை அருந்தி மகிழலாம்.

பாடல் 63 - அருவியாம்பல்

தொகு

செல்வக் கோவே! சேரலர் மருக!
நின் பணிவு பார்ப்பார்க்கல்லது இல்லை
நின் கண்ணோட்டம் நண்பர்களுக்கு அல்லது இல்லை.
நின் வணக்கம் மகளிர்க்கு அல்லது இல்லை.
நீ சொன்ன சொல் தவறுவது நிலவுலகமே மாறினால்ம் இல்லை.
ஒருபுறம் நீ தண்டமிழைப் பாதுகாத்தாய் தண்டமிழ் செறித்து மற்றொரு புறம் ஒரே முற்றுகையில் இருவரை ஓட்டிவிட்டாய்.
வெற்றியும் தோல்வியும் கண்ட அரசர்கள் உன்னைக் கண்டதே போதும் என மகிழ்ந்தனர்.
சேரலர் மருக! நீ 'ஆம்பல் ஆயிர வெள்ளம்' ஆண்டு வாழிய!
(தமிழ் | எண் - அல்பெயர் எண்)

பாடல் 64 - உரைசால் வேள்வி

தொகு

செல்வக் கடுங்கோ, அறம் சொல்லும் அந்தணரின் உரைசால் வேள்வி செய்து முடித்தான். அங்கு வரும் வயிரியர்களுக்குத் தேரை அணி செய்து அதில் குதிரைகள் பூட்டிப் பரிசிலாகத் தந்தான். வென்றாளும் அரசர்கள் வானத்து மீன்கள் என்றால் செல்வக் கடுங்கோ ஞாயிறு போன்றவன். கழியில் பூத்த நெய்தல் பூவைப் போல் பாசறையில் இருந்துகொண்டு தன் ஒக்கல் (சுற்றம்) பசித்திருக்கும்போதும் வரும் பரிசிலர்களுக்கு மழை போல வழங்கினான்.

பாடல் 65 - நாள் மகிழ் இருக்கை

தொகு

பகைவர்களை வெல்வது காஞ்சி. செல்வக் கடுங்கோ காஞ்சி வயவர்களுக்குத் தலைவன். வில்லாளிகளுக்குக் கவசம். கடவுளைக் காட்டிலும் மேம்பட்ட கற்பரசியின் கணவன். பாணர்களுக்குப் பாதுகாவலன். பரிசிலர் அள்ளிக்கொள்ளும் செல்வம். நாள் என்னும் காலம் இவனது அவையில் மகிழ்து விளையாடும். பண்ணிசை பாடுவதும், பாடுபவர்களுக்கு மாரி போல் வழங்குவதும்தான் அந்த அவையில் நடக்கும் விழா.

பாடல் 66 - ப்தல் சூழ் பறவை

தொகு

யாழிசைத்துப் பாடிக்கொண்டே முதுவாய் இரவலன்[1] செல்கிறான். அவனுக்குப் போர்க்களத்தில் திறையாகப் பெற்ற களிறும், குதிர் குதிராக நெல்லும் செல்வக் கடுங்கோ வழங்குவான் என்கிறார்கள். தோல், வாள், எஃகம் போன்றவற்றை வைத்துக்கொண்டு மள்ளர் விழாக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் பனைமடல் மாலையையும், வாகைப்பூ மாலையையும் தலையில் சூடியுள்ளனர். அது முல்லைப்பூப் புதரில் சுற்றித் திரிந்த பறவை பறந்து சென்று காட்டிலுள்ள பிடவம்பூக் கொத்துகளுக்கு இடையே அமர்வது போல் இருக்கும்.

[1] முதுமொழி வாயர்

பாடல் 67 - வெண்போழ்க் கண்ணி

தொகு

செல்வக் கடுங்கோ நேரிமலை நாட்டை வென்றான். காந்தள் மலரில் தேனுண்ட வண்டு நேரிமலையின் உச்சியிலுள்ள சூர முள்ளில் அமர விரும்பிப் பறக்கும்போது அதன் சிறகு அழியும்.
செல்வக்கடுங்கோ பல போர்களில் வெற்றி கண்டவன். அவனது சான்றோர் வெண்கொன்றை மாலை அணிந்திருப்பர். வாள் வெட்டிய காயத் தழும்பு உடையவர். மருப்பு, மூரிப்பறை, சங்கு ஆகியவற்றைக் கொண்டுசெல்பவர்.
கொடுமணம் என்னும் ஊரில் வாழ்ந்த பாணர் பந்தர் என்னும் பெயருடன் புகழ் பெற்று விளங்கிய ஊரில் சான்றோர் மெய்ம்மறையாய்ப், போருக்குப் பின் தங்கியிருந்த இருப்பிடத்தை நாடிச் சென்றனர். சென்றவர்கள் முத்தும், பொன்னணிகளும் பெறுவார்கள் என்கிறார் புலவர்.

பாடல் 68 - ஏம வாழ்க்கை

தொகு

செல்வக் கடுங்கோவின் படைமறவர், பகைவர் உறையும் இடங்களை தமதாக்கிக்கொண்டு, பகைவரின் யானைத் தந்தங்களைத் தம் ஊரிலுள்ள கடைத்தெருவில் கள்ளுக்கு விற்று, குடித்துவிட்டு, அச்சமே இல்லாமல் அமைதியாக வாழ்ந்தனர். (வடபுலம் என்று போற்றப்படுவது வானுலகம்) மறவர் இந்த வடபுல வாழ்க்கையை மண்ணுலகில் துய்த்தனர். யாருடன்?
கணவர் பிரிந்திருந்த நாட்களைச் சுவரில் கோடு போட்டு எண்ணிக்கொண்டிருந்த மனைவிமாரோடு சேர்ந்து துய்த்தனர்.

பாடல் 69 - மண் கெழு ஞாலம்

தொகு

(செல்வக் கடுங்கோவே!) நாற்படை நடத்திப் பகைவரை வென்றாய். அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டினாய். நீ அசையாத கொள்கை உடையவன். உன் முன்னோரும் அத்தகையர். அப்போதும் நல்லமழை பெய்து நாடு மண்வளம் மிக்கதாய் விளங்கியதால் ஆட்சித்தேர் அமைதியாக ஓடிற்று.
கோள்நிலை

பாடல் 70 - பறைக் குரல் அருவி

தொகு

பனந்தோடு கொண்டு தலையில் அணியும் மாலை எப்படிச் செய்யப்பட்டது என்பது இப்பாடலில் விளக்கப்படுகிறது. பனைமரத்து மடலைப் பூ மொட்டு போல் ஊசியால் குத்திச் சுருட்டி மாலையாகக் கோத்துச் செய்தார்கள்.
போருக்குச் செல்லும்போது சுனையில் பூத்த பூக்களையும் அத்துடன் சேர்த்து அணிந்துகொள்வார்கள்.
இத்தகைய வயவர் பெரும! நீ புறஞ்சொல் கேளாத நுண்ணறிவாளன். பெண்ணலம் மிக்க கற்பரசியின் கணவன். கடவுளுக்கு வேள்வி செய்தவன். ஐயரை இன்புறுத்தியவன். தன் இரண்டு மகன்களையும் முதியவர்களுக்குப் பணிவிடை செய்யுமாறு பணித்தவன். மேலோர் உலகமும் கேட்கும்படி பறைக்குரல் அருவி பாயும் அயிரைமலை போல் உன் வாழ்நாள் செழிப்பதாகுக - என்பது புலவர் வாழ்த்து.

குறிப்புகள்

தொகு
  1. பொறையன் பெருந்தேவி தந்தையின் பெயர் 'ஒருதந்தை'