ஐந்தாம் சேனன்

ஐந்தாம் சேனன் என்பவன், அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களில் ஒருவன். நான்காம் மகிந்தனுக்குப் பின்னர் அரசனான இவன், கி.பி. 972 தொடக்கம் கி.பி. 982 வரை ஆட்சியில் இருந்தான்.

சேனன் அரியணை ஏறும்போது அவனுக்கு வயது 12. இவன் நான்காம் மகிந்தனுக்கும், கலிங்க அரசிக்கும் பிறந்த மூத்த மகன். இவன் தனது தம்பி உதயனை துணையரசன் ஆக்கினான். நான்காம் மகிந்தன் காலத்தில் படைத்தலைவனாக இருந்தவனே தொடர்ந்தும் படைத்தலைவனாக இருந்து வந்தான்.

படைத்தலைவனோடு முரண்பாடு தொகு

ஒருமுறை படைத் தலைவன் கலவரம் ஒன்றை அடக்கச் சென்றிருந்தவேளை படைத்தலைவனின் தம்பியைக் கொலை செய்ததுடன், படைத்தலைவனை நீக்கிவிட்டு தனக்குக் கீழ்ப்படிந்த நடப்பவனான அமைச்சன் ஒருவனைப் படைத்தலைவன் ஆக்கினான். கோபத்துடன் திரும்பிவரும் படைத்தலைவனுக்குப் பயந்த ஐந்தாம் சேனன் அனுராதபுரத்தை விட்டு ரோகணத்துக்குத் தப்பியோடினான். படைத்தலைவன்மீது கோபப்படாத கலிங்கத்து அரசி அவனை அழைத்துப் பேசினாள். அவளுடைய சம்மதத்துடன், படைத்தலைவன் அங்குள்ள தமிழர்களைக் கூட்டி நாட்டை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டுப் புலத்தி நகரம் எனப்பட்ட பொலநறுவைக்குச் சென்றுவிட்டான். ஐந்தாம் சேனன் தனது படைகளைப் படைத்தலைவனுடன் போரிட அனுப்பினான் ஆனால் படுதோல்வி அடைந்தான். நாட்டைப் பெற்றுக்கொண்ட தமிழர் மக்களுக்குத் துன்பம் விளைவித்ததாகவும் மக்கள் ஐந்தாம் சேனனிடம் முறையிட்டதாகவும் மகாவம்சம் கூறுகிறது. அமைச்சர்களின் ஆலோசனைப்படி, தான் புதிதாக நியமித்திருந்த படைத்தலைவனைத் துரத்திவிட்டுப் படைத்தலைவனுடன் சமாதானம் செய்துகொண்ட அரசன், அவனது மகளையும் மணம்புரிந்து கசபன் என்னும் ஒரு மகனையும் பெற்றான்.[1]

இறப்பு தொகு

கூடாச் சேர்க்கையினால் அரசன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இளம் வயதிலேயே தனது பத்தாவது ஆட்சியாண்டில் உயிர்நீத்தான். அவனுக்குப் பின்னர் அவனது தம்பி மகிந்தன் அரசனானான்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. The Mahavansa, translated in to Eglish by L. G. Wijesinha, Part II, Asian Educational Services, New Delhi, 1996 (First Published 1889), p. 88
  2. The Mahavansa, 1996, p. 89

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தாம்_சேனன்&oldid=2175071" இலிருந்து மீள்விக்கப்பட்டது