ஒட்டுப்பலகை

மெல்லியதாகச் சீவி எடுக்கப்படுகின்ற மரத்தகடுகளை உரிய வகையில் ஒன்றின் மேலொன்று அடுக்கடுக்காக ஒட்டி உருவாக்கப்படுவதே ஒட்டுப்பலகை ஆகும். இது ஒருவகைக் கூட்டு மரப் (composite wood) பலகை. உலகில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட கூட்டு மரப் பலகை இதுவே எனலாம்.

ஒட்டுப்பலகை வகைகள்

தொகு

பல்வேறு பயன்பாட்டுத் தேவைகளைக் கருத்திற் கொண்டு பலவகையான ஒட்டுப்பலகைகள் தயாரிக்கப்படுகின்றன. மென்மர (Softwood) ஒட்டுப்பலகைகள் பொதுவாக, டக்ளஸ் பர் (Douglas fir), ஸ்புரூஸ், பைன் (pine), பர் (fir) போன்ற மரவகைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது. இவ்வகை ஒட்டுப்பலகை, கட்டுமானம் மற்றும் தொழிற்துறைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது. அலங்கார ஒட்டுப்பலகைகள் பொதுவாக மேற்பரப்பில் வன்மர (hardwood) மென்தகடுகள் ஒட்டப்பட்டுத் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக சிவப்பு ஓக், பர்ச், மேப்பல், மகோகனி போன்ற பலவகையான வன்மர வகைகள் பயன்படுகின்றன.

பொதுவான ஒட்டுப்பலகை விலை குறைந்த பீனோல் போமல்டிகைட்டுப் பசையினால் ஒட்டப்பட்டுத் தயாரிக்கப்படுகின்றது. நீர்ப்பற்றுள்ள இடங்களில் நிலைத்து நிற்கும் தன்மை இதற்குக் கிடையாது இதனால் இவ்வகை ஒட்டுப்பலகை கட்டிடங்களுள் உலர்வான பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்படக்கூடியது. நீர்ப்பற்றான இடங்களில் பயன்படக்கூடிய ஒட்டுப்பலகைகளும் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் நீர்ப்பற்றைத் தாக்குப்பிடிக்கக்கூடிய பசைகள் பயன்படுகின்றன. இவ்வகைப் பசைகள், நீப்பற்றினால் ஒட்டு விலகுவதைத் தடுப்பதுடன், உயர்ந்த ஈரப்பதன் கொண்ட சூழலில் ஒட்டுப்பலகையின் வலு குறையாமலும் பாதுகாக்கின்றது.

உற்பத்தி

தொகு

ஒட்டுப்பலகை உற்பத்திக்கு அளவிற் பெரிய நேரானதும், ஒழுங்கானதுமான வடிவம் கொண்ட மரக்குற்றிகள் பயன்படுகின்றன. இவற்றை இயந்திரங்களிலிட்டுக் கூரான கத்திமுனைகளுக்கு முன் சுழற்றுவதன் மூலம் அல்லது வேறு முறையில் மரத்தகடுகளாக உரித்து எடுக்கப்படுகின்றன. இது தேவையான அளவுகளில் வெட்டப்பட்டு, ஒன்றுடனொன்று ஒட்டி ஒட்டுப்பலகைகள் உற்பத்திசெய்யப்படுகின்றன. ஒட்டும்போது அடுத்தடுத்துள்ள தகடுகள் அவற்றின் இழையின் திசைகள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்குமாறு வைக்கப்படும்.

ஒட்டுப்பலகைகளை உருவாக்கும் மரமென்தகடுகள் பொதுவாக 1/8 அங்குலங்கள் தடிப்புக் கொண்டவை. ஒட்டுப்பலகைகள் மூன்று, ஐந்து, ஏழு என ஒற்றை எண்ணிக்கை கொண்ட தகடுகளை ஒட்டித் தயாரிக்கப்படுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டுப்பலகை&oldid=1674515" இலிருந்து மீள்விக்கப்பட்டது