ஒத்தாழிசைக் கலிப்பா

ஒத்தாழிசைக் கலிப்பா என்பது தமிழ்ச் செய்யுள் வகைகளுள் ஒன்றான கலிப்பாவின் ஒரு வகையாகும். இது அடிப்படையாகப் பின்வருமாறு உறுப்புக்களைப் பெற்று அமைந்திருக்கும்:

தரவு - 1
தாழிசை - 3
தனிச்சொல் - 1
சுரிதகம் - 1

இவை காரணப் பெயர்கள் எனல்[1] தொகு

  • தரவு - பாடல் செய்திக்கு முன்னுரை தருவது
  • தாழிசை - அளவு ஒத்து ஆழ்ந்து நிற்பது
  • தனிச்சொல் - தனித்து நிற்பது.
  • சுரிதகம் - நீர்ச்சுழி போலக் கருத்து சுழன்று நிற்பது[2]

3 வகை தொகு

இக் கலிப்பாவகை மூன்று துணைவகைகளாகக் காணப்படுகின்றன. இவை பின்வருமாறு:

  1. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
  2. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
  3. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா மேற்கூறிய அடிப்படையான உறுப்புக்களை மட்டுமே கொண்டிருக்க, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா கலிப்பாவுக்கு உரிய அம்போதரங்கம் என்னும் உறுப்பையும் கொண்டிருக்கும். வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவில் அராகம் என்னும் இன்னொரு உறுப்பும் சேர, கலிப்பாவுக்கு உரிய ஆறு உறுப்புக்களையும் அது கொண்டிருக்கும்.

எடுத்துக்காட்டு தொகு

தரவு

வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து
தோணெடுந்தன் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப்
பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ?

தாழிசை

சூருடைய நெடுங்கடங்கள் சொலற்கரிய என்பவால்
பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே? (1)

சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவால்
நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நலமிலரே? (2)

சிலம்படைந்த வெங்கானம் செலற்கரிய என்பவால்
புலம்படைந்த நலந்தொலையப் போவாரோ பொருளிலரே? (3)

தனிச்சொல்

எனவாங்கு

சுரிதகம்

அருளெனும் இலராய்ப் பொருள்வயிற் பிரிவோர்
பன்னெடுங் காலம் வாழியர்
பொன்னெடுந் தேரொடு தானையிற் பொலிந்தே!

(ஆசிரியச் சுரிதகத்தால் இயன்ற நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா)

பார்வை தொகு

மேற்கோள் தொகு

  1. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - 230
  2. தந்து முன் நிற்றலின் தரவே, தாழிசை
    ஒத்து ஆழத்தினது ஒத்தாழிசையே,
    தனிதர நிற்றலின் தனிநிலை குனி திரை
    நீர்ச்சுழி போல நின்று சுரிந்து இறுதலின்
    சோர்ச்சியில் புலவர் சுரிதகம் என்ப

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒத்தாழிசைக்_கலிப்பா&oldid=3454144" இலிருந்து மீள்விக்கப்பட்டது