ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மை
ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மை என்பது, நடைமுறைக்கு ஏற்றதும், சூழல் உணர்வுடன் கூடியதுமான ஒரு தீங்குயிர் மேலாண்மை அணுகுமுறை ஆகும். இது பல வகையான இயல்பறிவு சார்ந்த செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மை, தீங்குயிர்களின் வாழ்க்கை வட்டங்கள், அவை சூழலோடு கொண்டுள்ள இடைவினைகள் என்பன தொடர்பான நடைமுறையில் உள்ளதும், விரிவானதுமான தகவல்களைப் பயன்படுத்துகின்றது. இத்தகவல்களையும், பயன்பாட்டில் உள்ள தீங்குயிர் கட்டுப்பாட்டு முறைகளையும் பயன்படுத்தி, தீங்குயிர்களினால் ஏற்படும் இழப்புக்களைச் சிக்கனமான முறையில் குறைப்பதோடு, இந்நடைமுறைகளால் மக்களுக்கும், சொத்துக்களுக்கும், சூழலுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கூடிய அளவு குறைப்பதும் ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மையின் நோக்கமாகும்.
இம் முறை, வேளாண்மைப் பகுதிகள், வீடுகள், கட்டிடங்கள், அவற்றின் சுற்றாடல்கள் போன்ற பல்வேறு இடங்களிலும், தீங்குயிர்களினால் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத விளைவுகளைக் குறைப்பதற்குப் பயன்படுகின்றது. ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மை முறையில், தீங்குயிர்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பொருத்தமான எந்த வழிமுறைகளையும் பயன்படுத்துவர். செயற்கை வேதிப்பொருட்களாலான தீங்குயிர்க்கொல்லிகளையும் உரிய அளவிலும், முறையிலும் பயன்படுத்துவதை இம்முறை தவிர்ப்பதில்லை.