ஒருமுனைக் காந்தம்

காந்தம் என்பது வடமுனை-தென்முனை ஆகிய இரண்டும் சேர்ந்தே இருப்பது. ஆனால் மின்சாரத்தில் நேர்மின்மம், எதிர்மின்மம் என்று தனித்தனியாக இருப்பது போல காந்தத்திலும் ஒருமுனையான காந்தத் துகள் அல்லது இயக்கம் தனியாக இருக்குமா எனப் பல பத்தாண்டுகளாக அறிவியலாளர் தேடி வந்துள்ளனர். 1931 ஆம் ஆண்டில் பால் டிராக் (Paul Dirac) என்னும் புகழ்பெற்ற இயற்பியலாளர் அப்படிப்பட்ட தனியான ஒருமுனைக் காந்தம் கருத்தியலாக இருக்கக்கூடும் என்று கணித்து நிறுவியுள்ளார். ஆனால் முதன்முதலாக ஓர் இயல்பொருளில் ஒருமுனைக் காந்தம் இருப்பதாக செப்டம்பர் 4, 2009 ஆம் நாளன்று வெளியான சயன்சு (Science) என்னும் ஆய்விதழில் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளார்கள்[1][2]. . செருமனியில் உள்ள பொருளறிவியல், ஆற்றல் பற்றிய ஆய்வுக்கான பெர்லின் எல்மோட்ஃசு நடுவகம் (Helmholtz-Zentrum Berlin für Materialien und Energie (HZB)) என்னும் நிறுவனத்தைச் சேர்ந்த யோனதன் மோரிசு (Jonathan Morris), ஆலன் டென்னன்ட் (Alan Tennant) என்பவர்கள் மற்ற ஆய்வக ஆய்வாளர்களுடன் சேர்ந்து ஒருமுனைக் காந்தத்தை டிசுப்புரோசியம் டைட்டனேட் (Dysprosium Titanate) என்னும் படிகப்பொருளில் கண்டுபிடித்துள்ளார்கள். இப்பொருளானது ஒருப்படாமல் முரணுறும் காந்தத்தன்மை கொண்ட பொருளின் மீது வைத்த சுழனிய உறைபனி (spin ice)என்னும் வகையான பொருளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பயனாய் மின்சாரம், மின்னோட்டம் என்பது போல காந்தமம், காந்தவோட்டம் முதலான புதுத் துறைகள் வளர வாய்ப்புள்ளது. ஆங்கிலத்தில் மின்சாரத்தைக் குறிக்கும் எலக்ட்ரிசிட்டி (electricity) என்பது போல மாக்னட்ரிசிட்டி (magnetricity) என்னும் ஒரு புதுச்சொல்லும் உருவாகி உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Magnetic Monopoles Detected In A Real Magnet For The First Time". Science Daily. 2009-09-04. பார்க்கப்பட்ட நாள் 2009-09-04.
  2. D.J.P. Morris, D.A. Tennant, S.A. Grigera, B. Klemke, C. Castelnovo, R. Moessner, C. Czter-nasty, M. Meissner, K.C. Rule, J.-U. Hoffmann, K. Kiefer, S. Gerischer, D. Slobinsky, and R.S. Perry (2009-09-03). "Dirac Strings and Magnetic Monopoles in Spin Ice Dy2Ti2O7". Science, DOI: 10.1126/science.1178868. பார்க்கப்பட்ட நாள் 2009-09-04. {{cite web}}: Unknown parameter |submitted= ignored (help)CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருமுனைக்_காந்தம்&oldid=4154078" இலிருந்து மீள்விக்கப்பட்டது