ஒரு பிரிவுரை: தவிர்க்கப்பட்ட துக்கம்

ஒரு பிரிவுரை: தவிர்க்கப்பட்ட துக்கம் (A Valediction: Forbidding Mourning) என்பது கவிஞர் ஜான் டான்னே (John Donne) ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நுண்புலக் கவிதை. 1611 அல்லது 1612 ஆம் ஆண்டுவாக்கில் அவர் தனது மனைவி ஆன்னைப் பிரிந்து ஐரோப்பியக் கண்டத்திற்குச் சுற்றுப்பயணம் செய்தபோது எழுதியதாகக் கருதப்படுகிறது. "ஒரு பிரிவுரை" என்பது 36 வரிகளைக் கொண்ட ஒரு காதல் கவிதை. டான்னே இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 1633 ஆம் ஆண்டில் "பாடல்களும் செய்யுட்களும்" (Songs and Sonnets) என்ற தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பாக வெளியிடப்பட்டது. இந்தக் கவிதையில் காதலர் இருவர் நீண்ட காலம் பிரிய நேர்ந்தபோது, அவர்களிடையே வெளிப்படும் உணர்ச்சிகளை அழகாகத் தனது கவிதை நடையில் கூறியிருப்பார். விமர்சகரிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரின் மற்ற படைப்புகளான ஒரு பிரிவுரை: சாளரத்தில் எனது பெயர், தியானம் III, புனித விளக்கங்கள் மற்றும் அழுகையின் பிரிவுரை ஆகியவையும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

ஒரு பிரிவுரை: தவிர்க்கப்பட்ட துக்கம்
"ஒரு பிரிவுரை: தவிர்க்கப்பட்ட துக்கம்" எழுதிய ஜான் டான்னே
நூலாசிரியர்ஜான் டான்னே
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்

டான்னே தனது கவிதையில் விடுவித்துக் கொள்ள முடியாத இரு முனைகளைக் கொண்ட வரையும் கவராயத்துடன் காதலர்களை ஒப்பிடுகிறார். இவ்வொப்புமையானது அவரது கலை நுணுக்கத் திறணுக்கு எடுத்துக்காட்டு எனப் புகழப்படுகிறது.[1] இது மிகையான நுண்புலக் கவிதைக்கு எடுத்துக்கட்டு என்றும் விமர்சிக்கப்படுகிறது. இருப்பினும் ஆங்கில கவிதைகளில் "நன்கு அறியப்பட்ட கவிதையாக" உள்ளது. [2] இலக்கிய விமர்சகர்களிடத்தில் அறியப்படும் மிகவும் பிரபலமான எடுத்துக்காட்டு மேற்கோள், "டான்னே ஒரு நுட்பமான மற்றும் துல்லியமான வார்த்தைகளை குறிப்பாக "ஒரு பிரிவுரை" என்பதுடன் இணைத்து, கவிதையின் கருப்பொருளை அந்த வார்த்தைகளுடன் பொருந்துமாறு சரியாக பயன்படுத்துகிறார்" என்பதாகும்.

பின்னணி தொகு

ஜான் டான்னே 21 சனவரி 1572 ஆம் ஆண்டில் ஒரு செல்வச் செழிப்பான இரும்புக் கருவிகள் விற்கும் வியாபாரியின் மகனாக பிறந்தார். அவரது தந்தை இரும்பு வியாபாரம் செய்யும் சக வியாபாரிகளின் கூட்டமைப்பிற்கு பாதுகாவலராகவும் இருந்தார். ஜான் டான்னேயின் தாய் மனைவி எலிசபத் ஆவார்.[3] ஜான் டான்னேயின் தந்தை இறந்தபோது இவருக்கு நான்கு வயதுதான் ஆகியிருந்தது. அவரது குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தாமல் அவரது அம்மா எலிசபத் அவரை நன்கு படிக்க வைத்தார். அவரது தந்தை விட்டுச் சென்ற பணத்தின் மூலம் டான்னேவிற்கு தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களைக் கொண்டு இலக்கணம், கலை, கணிதம், வரலாறு மற்றும் வேற்று மொழிகள் கற்றுக் கொடுத்தார். மேலும் இவரின் கல்வி கற்றலுக்கு பொருளாதார ரீதியாக எந்த தடங்கலும் இருக்கக் கூடாது என்பதற்காக எலிசபத் ஒரு வசதியான மருத்துவர் ஒருவரை இரண்டாவதாக மணந்து கொண்டார். டான்னே தன்னை ஓர் எளிமையான கவிஞர் மற்றும் மனிதர் என்று மட்டும் பிறரிடம் காட்டிக்கொண்டார்.[4] ஹார்ட் ஹால், ஆக்ஸ்போர்டில் படித்து முடித்தபின், டான்னே லிங்கன் இன்னில் தனிப்பட்ட கல்வி பயில ஆரம்பித்தார். அங்கு அவர் வரலாறு, கவிதை, இறையியல் மற்றும் "மனிதாபிமான கற்றல் மற்றும் மொழிகள்" ஆகியவற்றில் தனது முழு கவனத்தையும் செழுத்தினார்.[5] லிங்கன் இன்னில் தான் இவர் கவிதை எழுத ஆரம்பித்தார்.[6]

நவம்பர் 1597 ஆம் ஆண்டில் தோமஸ் ஈகர்டனின் முதன்மைச் செயலாளராக டான்னே பணி புரிந்தார். மேலும் சிறிது நாட்களிலேயே ஈகர்டனின் மகள் (ஈகர்டனுடன் பிறந்தவரின் மகள்) ஆனி மூர்ரை சந்தித்தார்.[7] 1599 ஆம் ஆண்டு சந்திப்பிற்குப் பிறகு 1600 ஆம் ஆண்டில் இருவரும் காதலிக்க தொடங்கினர். அவர்களிடையே கடிதங்களைப் பரிமாறிக் கொண்டனர். அந்தக் கடிதங்களின் வாயிலாக, ஆனின் தந்தை சர் ஜார்ஜ் மூர் சந்தேகம் கொள்ளத் தொடங்கியதையும், டான்னே தனது ஆதரவாளரான ஈகர்டனின் உதவியுடன் ஆன்னைத் தேர்ந்தெடுப்பதற்கு உறுதி எடுத்துக் கொண்டதையும் அறிய முடிகிறது.[8] அவர்கள் இருவரும் இரகசிய மணம் புரிந்தனர். இதை மூர் 1602 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். பின் டான்னேவை நியதிச் சட்டத்தை மீறினார் என்று கடற்படை சிறைக்கு அனுப்பினார். அநேக கோரிக்கைகளுக்குப் பிறகு, டான்னே பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஈகர்டன் ஒப்புக் கொண்டார். டான்னே ஈகர்டனுக்கு கடிதம் எழுதிய பிறகு, அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார், மேலும் நீதிமன்ற விசாரணையில் அவரது திருமணம் சரியானதாக ஒப்புக்ககொள்ளப்பட்டு, டான்னே எந்த நியதி சட்ட மீறல்களிலும் ஈடுபடவில்லை என்று தண்டனையில் இருந்து விலக்களிக்கப்பட்டது.[9] 1611 அல்லது 1612 ஆம் ஆண்டில் சர் ராபர்ட் ட்ரூரி உடன் ஐரோப்பா கண்டத்திற்குப் பயணம் செய்யத் தயாரானபோது, கர்ப்பமாக இருந்த அவரது மனைவி ஆனிக்கு "ஒரு பிரிவுரை" எனும் இக்கவிதை டான்னேயால் எழுதப்பட்டது.[10][11] டான்னே மறைந்த பின்னர் 1633 ஆம் ஆண்டில், "பாடல்கள் மற்றும் செய்யுட்கள்" என்ற தொகுப்பின் ஒரு பகுதியாக இந்தக் கவிதை வெளியிடப்பட்டது. [12]

மேற்கோள்கள் தொகு

  1. Ousby 1993, ப. 198.
  2. Harpham 2009, ப. 54.
  3. Carey 2008, ப. 15.
  4. Stubbs 2007, ப. xvii.
  5. Stubbs 2007, ப. 5.
  6. Stubbs 2007, ப. 28.
  7. Colclough 2003, ப. 51.
  8. Colclough 2003, ப. 54.
  9. Colclough 2003, ப. 61.
  10. Brown 1995, ப. 134.
  11. Redpath 1967, ப. xxvii.
  12. Redpath 1967, ப. 261.

வெளியிணைப்புகள் தொகு