ஒலியன்

(ஒலியனெழுத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒரு மொழியின் அடித்தளம் ஒலியன் ஆகும். மனிதர்கள் பேசும் மொழியில் ஒலியன் என்பது, கோட்பாட்டு அடிப்படையில் குறிப்பிட்ட ஓர் ஒலியைக் குறிக்கும் ஒன்றாகும். சொற்களும், உருபன்களும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவதற்குக் காரணமாயிருப்பன ஒலியன்களே ஆகும். ஒரு சொல்லிலுள்ள ஓர் ஒலியனை இன்னொரு ஒலியனாக மாற்றினால் அச்சொல்லின் பொருள் மாறிவிடும் அல்லது, அது பொருளற்ற ஒன்றாகிவிடும்.

ஒரு மொழியில் வழங்கும் அடிப்படை ஒலிகளை ஒலியன் என்கிறோம். பல்வேறு நுட்பங்களைக்கொண்ட பேச்சு மொழியில் ஒலி வேறுபாடுகளுக்கு இடையில் மாறாகவும், அடிப்படையானதுமான ஒலியை ஒலியன் என்கின்றனர். இவ்வொலியன் என்பது பேச்சொலியின் சிறு பகுதியாக அமைகிறது. அதே நேரத்தில் பொருள் மாற்றம் செய்யக்கூடிய தனி ஒலியாகவும் விளங்குவதை ஒலியன் என்கிறோம்.

புளுமின் என்னும் அறிஞர் மொழிக்கான பொருள் தொடர்பு ஏற்படுத்தும் தகுதிப்பாடு உடைய மிகச்சிறிய கூறு ஒலியன் என்கிறார்.

ஒலியன்களைக் கண்டறியும் விதம்

தொகு

ஒலியன்களைத் தொகுக்க மொழியியலாளர்கள் ஐந்து கொள்கைகளை வரையறுக்கின்றனர்.

  1. வேற்று நிலைக் கொள்கை
  2. துணை நிலைக் கொள்கை
  3. உறழ்ச்சி (அ) ஊசலாட்டம்
  4. அழகமைப்புக்கொள்கை
  5. சிக்கனக் கொள்கை

வேற்று நிலைக்கொள்கை :

தொகு

(வீ) கடம், உடம், மடம், படம், இவை நான்கும் வெவ்வேறு பொருள் தரும் சொற்கள். முற்றிலும் ‘டம்’ என்ற ஒலி அமைப்பு உள்ளது. இவற்றின் இடையே உள்ள முதலொலி க, உ, ம, ப, வேறுபட்டு பொருள் மாற்றம் செய்கிறது. இவ்வாறு பொருள் மாற்றம் பெறத்துணைபுரியும் ஒலிகளை குறையொலி என்பர். வேறுபட்ட நிலையால் பொருள் வேறுபடும் நிலையை, வேற்று நிலைக்கொள்கை என்பர்.

துணை நிலைக் கொள்கை

தொகு

இது வேற்று நிலைக் கொள்கையிலிருந்து வேறுபட்டது. கடல், தங்கம், அகம், இச்சொற்களில் ஒரே ககர ஒலி இல்லாமல் மூன்று ககர ஒலிகளை ரி. நி. பி காணமுடிகிறது. மொழி முதலில் ரி ஒலி வடிவமும் மெல்லினத்தை அடுத்து நி என்ற ஒலி வடிவமும், இரண்டு உயிர் ஒலிக்கிடையில் ‘பி’ என்ற ஒலி வடிவத்தையும் காண்கிறோம் இவைகளும் ஒன்று ஒலியனகவும் மற்றவை மாற்று ஒலியாகவும் இருக்கின்றன.

உறழ்ச்சி (அ) ஊசலாட்டம்

தொகு

சிலச்சொற்கள் பொருள் மாறுபாடு தோற்றுவிக்காமல் அதே நேரத்தில் குறை ஒலி இணைகளாக அமைவதை காண்கிறோம். இவ்வியல்பை உறழ்ச்சி அல்லது ஊசலாட்டம் என்கிறோம். எ.கா.பழம் - பளம் இரண்டும் குறைஒலி இணையாகஅமைந்திருக்கின்றன ழ ள வெவ்வேறு ஒலிகளாக இருந்தாலும் பொருள் வேறுபடு தரவில்லை. இவ்வாறு உறழ்ந்து வருவதனை உறழ்ச்சி அல்லது ஊசலாட்டம் எனலாம்.

அழகமைப்பு கொள்கை

தொகு

க, ச, ட, த, ப, ற - வல்லினம் ங, ஞ, ந, ம, ன - மெல்லினம் ஏதோ ஒன்று குறைவதாக உள்ளது அந்த குறைவு ‘ண’ வாகும் மெல்லின எழுத்தில் ‘ண’ இருந்தால் தான் அது அழகமைப்பு கொள்கையாக அமையும் மன்-நிலைபெற்றுஇருத்தல்.

சிக்கனக்கொள்கை

தொகு

ஒரு மொழியில் ஒரு வகையில் ஒலியன்களை தொகுக்கின்றபோது ஒரு எண்ணிக்கையும் மற்றொரு வகையில் தொகுக்கின்றபோது அதைவிடக் குறைவாக வருகின்றது. இவ்வாறு குறைவாக வருகின்றதையே எடுத்துக்கொண்டால் அதுவே சிக்கனக் கொள்கை என்கிறோம்.

ஒலியனியல்

தொகு

ஒலிகளைப் பற்றி ஆராய்வதே ஒலியனியலாகும். குறைந்த வேற்றுமை உடைய இருசொற்களில் அமைந்து அவற்றின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் ஒலிகள் ஒலியன்கள் எனப்படும். எ-டு. உடல் - ஊடல். இவற்றில் ட்அல் எனும் மூன்று ஒலிகளும் இருசொற்களுக்கும் பொதுவானவை. உ-ஊ என்பவையே சொற்களின் பொருள் மாற்றத்திற்குக் காரணமானவை. ஆகவே இவை தனித்தனி ஒலியன்கள் ஆகும். தமிழில் நாம் பயன்படுத்தும் அத்தனை பேச்சொலிகளுக்கும் (Speech sounds - phones) தமிழில் வரிவடிவம் (graphemes - scripts) கிடையாது. ஒலியன்களுக்கு மட்டுமே வரிவடிவம் உண்டு.[1]

தமிழில் குறில்களும் நெடில்களும் தனித்தனி ஒலியன்களாகும். தமிழிலக்கண நூலாரும் மொழிநூலாரும் ஒலிகளை உயிரொலிகள் (vowels), மெய்யொலிகள் (Consonants) என இரண்டாகப் பிரித்துள்ளனர்.

உயிரொலிகள்

தொகு

உயிரொலிகளின் பிறப்பு

பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மிடற்றின்கண் பிறந்த காற்றால் ஒலிக்கும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். மொழியியலார் இக்கருத்தை உடன்படுகின்றனர். மொழியியலார் ஆபர்கிராம்பி, உயிர் எழுத்துகளின் தன்மையைக் குறிப்பிடும்போது, “இவை உள்ளே இருந்து மிடற்று வழியாக வரும் காற்று, எந்த விதமான தடையுமின்றி வாயின் வழியாக வெளிப்படுவதால் பிறக்கின்ற தன்மையைக் கொண்டவை” என்கிறார்.[2]

இக்கால மொழி நூலார் தமிழில் உள்ள உயிரொலிகளை அவற்றின் ஒலிப்புமுறை நோக்கி மூவகையாகப் பிரித்துள்ளனர்.

இ, ஈ, எ, ஏ - முன் உயிர் (Front Vowels)

அ, ஆ - நடு உயிர் (Central Vowels)

உ, ஊ, ஒ, ஓ - பின் உயிர் (Back Vowels)

இப்பாகுபாடு இவ்வெழுத்துகள் பிறக்கும்போது நாக்கு முறையே முன்னும், நடுவிலும், பின்னும் இருக்கும் நிலையை ஒட்டிச் செய்யப்பட்டது. (ஐ, ஔ என்பன கூட்டொலிகள் ஆதலால் அவற்றை மொழி நூலார் குறிப்பிடவில்லை). தொல்காப்பியரும் மிகப் பழங்காலத்தில் உயிரொலிகளை மூவகையாகப் பிரித்துப் பிறப்பிலக்கணம் கூறியுள்ளார். அ, ஆ : வாயை அங்காந்து கூறும் முயற்சியால் பிறக்கும். இ,ஈ,எ,ஏ,ஐ : வாயை அங்காந்து கூறும் முயற்சியோடன்றி, மேல்வாய்ப் பல்லின் அடியை நாவிளிம்பு பொருந்தப் பிறக்கும். உ, ஊ, ஒ, ஓ, ஔ : இதழ் குவி முயற்சியால் பிறக்கும். இப்பாகுபாடு ஒலியுறுப்புகளின் முயற்சி அடிப்படையில் செய்யப்பட்டது.

அ இ உ எ ஒ எனும் ஐந்தும் குறில் உயிர்கள், ஆ ஈ ஊ ஏ ஓ எனும் ஐந்தும் நெடில் உயிர்கள், ஐ, ஔ எனும் இரண்டும் கூட்டொலிகள் ஆகும். எல்லா உயிர்களும் மொழியின் முதலிலும் இடையிலும் வருகின்றன. மொழியின் இறுதியில் ஈ, எ, ஒ ஆகிய மூன்று உயிர்கள் வரவில்லை. பிற உயிர்கள் வருகின்றன. ஐ, ஔ ஆகிய கூட்டொலிகளுள் ஐயன், ஐம்பது போன்ற சொற்களில் மொழி முதலிலும் அந்தை, வெள்ளறை, பிடந்தை போன்ற சொற்களில் இறுதியிலும் ஐகாரம் வந்துள்ளது. ஆனால் ஔகாரம் குகைக் கல்வெட்டுத் தமிழில் காணப்படவில்லை.

உயிர்மயக்கம்

சொல்லின் இடையிலோ இறுதியிலோ அடுத்தடுத்து இரண்டு உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது உயிர் மயக்கம் எனப்படும். குகைக் கல்வெட்டுகளில் உயிர் மயக்கங்கள் அதிகம் காணப்படுகின்றன.

(எ-டு) பளிஇ, பிணஊ, பணஅன், கொடி ஓர்

இச்சொற்களில் இஇ, அஊ, அஅ, இஓ என இரண்டு உயிர்கள் சேர்ந்து வந்துள்ளன. சொற்களில் இரண்டு உயிர்கள் அடுத்தடுத்து நிற்பதைத் தமிழ் இலக்கணம் ஏற்பதில்லை. இரண்டு உயிர்களுக்கும் நடுவே யகரம் அல்லது வகரம் உடம்படுமெய்யாக வரும். பளி+ய்+இ = பளியி, பிண+வ்+ஊ = பிணவூ என அவை வரவேண்டும். உடம்படு மெய் இல்லாமல் இரண்டு உயிர்களைச் சேர்த்து எழுதியிருப்பது குகைக் கல்வெட்டுத் தமிழில் காணப்படும் இதனைக் குறிப்பிடத்தக்க தனி இயல்பு என்று கூறலாம் .

மெய்யொலிகள்

தொகு

எழுத்தை உச்சரிக்கும்போது ஒலி உறுப்புகளில் உரசுதல், தடுத்து வெளியிடுதல் போன்றவை நிகழ்ந்தால் அது மெய்யொலி எனப்படும். தொல்காப்பியர் மெய்யொலிகளை வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என்று மூவகையாகப் பகுத்துள்ளார். மொழிநூலார் தடையொலி, மூக்கொலி, வருடொலி, மருங்கொலி, உரசொலி என்று வகைப்படுத்துவர்.[3]

ஒலிப்பு வேறுபாடுகள்

தமிழில் பேசும்போது குறிப்பிட்ட சில இடங்களில் ஒலிப்பில் அழுத்தம் தருவது உண்டு. இது ஒலியழுத்தம் எனப்படுகிறது. ஒரு வாக்கியத்தில் ஒலியழுத்தத்தில் திரிபு ஏற்பட்டால் பொருளும் மாறிவிடும். இப்படி ஒலி அழுத்தத்தில் ஏற்படும் திரிபை இசைத்திரிபு என்பர். ஒரு முழு வாக்கியத்தை ஒலிக்கும்போது ஒலிப்பில் ஏற்ற இறக்கங்களையும், சமநிலையையும் உணருகிறோம். சில வேளைகளில் இந்த ஏற்ற இறக்கங்களே தொடர்ப் பொருளில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுவதுண்டு. இதைத் தொடரிசை என்பர். தமிழ் ஒலியியல் ஆய்வில் ஒலியழுத்தம், இசைத்திரிபு, தொடரிசை முதலானவற்றுக்கும் தகுந்த முறையில் இடம் தரப்படுகிறது. மெய்யொலிகள் மொத்தம் பதினெட்டு, இவை அனைத்தும் குகைக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. ங, ஞ ஆகிய இரண்டு தவிரப் பிற மெய்யொலிகள் ஒலியன்களாக வருகின்றன. ஆய்த எழுத்துக் குகைக் கல்வெட்டுகளில் காணப்படவில்லை.

குகைக் கல்வெட்டுகளில் காணப்படும் மெய்யொலிகள்

தொகு

வெடிப்பொலிகள் (வல்லினம்)

க, ச, ட, த, ப, ற

மூக்கொலிகள் (மெல்லினம்)

ங, ஞ, ண, ந, ம, ன

இடையின ஒலிகள்

ய, ர, ல, வ, ழ, ள

மொழிமுதல்

க, ச, த, ப - ஆகிய நான்கு வெடிப்பொலிகளும் ந, ம - ஆகிய இரண்டு மூக்கொலிகளும், ய, வ - ஆகிய இரண்டு இடையின ஒலிகளும் மொழிக்கு முதலில் வருகின்றன. சகர மெய் அ, ஐ, ஔ என்னும் மூன்று உயிர்களோடு கூடி மொழி முதலாகாது ; பிற ஒன்பது உயிர்களோடு மட்டுமே கூடி முதலாகும் என்பர் அரிட்டாபட்டியில் உள்ள குகைக் கல்வெட்டுகளில் சடிகன், சந்தரிதன் போன்ற சொற்களில் சகர மெய் அகர உயிரோடு கூடி மொழி முதலாவதைக் காணலாம். யகர மெய் ஆகார உயிரோடு மட்டுமே சேர்ந்து மொழி முதலாகும் என்பர் தொல்காப்பியர். இவ்விதிக்கு ஏற்ப, புகழூர் என்னும் இடத்தில் உள்ள கல்வெட்டில் யாற்றூர் என்ற சொல் காணப்படுகிறது. (யாற்றூர் - ஆற்றூர்). தனிமெய் மொழி முதலில் வாராது; உயிரோடு சேர்ந்து உயிர்மெய்யாகவே வரும். குகைக் கல்வெட்டுகளில் இந்த விதி மீறப்படவில்லை. குகைக் கல்வெட்டுகளில் வடமொழிக்கே சிறப்பாக உள்ள ஒலிகளில் ஒன்றாகிய ஸ என்ற மெய்யொலி மட்டும் அதற்குரிய வரிவடிவத்தோடு பல சொற்களில் காணப்படுகிறது. அரிட்டாபட்டிக் கல்வெட்டுகளில் ஸிரிய், ஸுதன், ஸாலகன் என்னும் சொற்கள் காணப்படுகின்றன.

மொழி இறுதி

குகைக் கல்வெட்டுத் தமிழில் க, ச, ட, த, ப, ற - என்னும் ஆறு வெடிப்பொலிகளும் மொழிக்கு இறுதியில் மெய எழுத்தாக வரவில்லை. மூக்கொலிகளைப் பொறுத்த வரை ண, ம, ன - ஆகிய மூன்று மெய் ஒலிகள் மொழி இறுதியில் வருகின்றன. இடையின ஒலிகளில் ய, ர, ல, ள - ஆகிய நான்கு ஒலிகள் மொழி இறுதியில் வருகின்றன.

மொழி இடை

மொழி இடையில் ஒன்றிற்கு மேற்பட்ட மெய்கள் சேர்ந்து வருவது மெய் மயக்கம் எனப்படும். இது இரு வகைப்படும். ஒரு மெய் தன்னோடு தானே மயங்கி வருவது. அதாவது ஒரு மெய்க்கு அடுத்து அம்மெய்யே வருவது முதலாவது வகை. இதனை உடனிலை மெய்ம்மயக்கம் என்று கூறுவர். ஒரு மெய் மற்றொரு மெய்யொடு மயங்கி வருவது இரண்டாவது வகை. இதனை வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்று கூறுவர். குகைக் கல்வெட்டுத் தமிழில் இவ்விருவகை மெய்ம்மயக்கங்களும் காணப்படுகின்றன.

(எ-டு)

வழுத்தி - த்த் - உடனிலை மெய்ம்மயக்கம் குடும்பிகன் - ம்ப் - வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

ஒலி மாற்றங்கள்

குகைக் கல்வெட்டுகள் பெரும்பாலும் பேச்சுத் தமிழ் நடையிலேயே எழுதப்பட்டுள்ளன. ஒலி மாற்றங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

மொழி இறுதி மூக்கொலி இழப்பு

மொழி இறுதியில் வரும் மூக்கொலி அதற்கு முன் நெடில் உயிர் வருமாயின் ஒலிக்கப்படாமல் விடப்படுகிறது.

(எ.டு) செய்தான் - செய்தா

இங்கு இறுதியில் ன என்ற மூக்கொலி, அதற்கு முன்னர் ஆ என்னும் நெடில் உயிர் வருவதால் மறைந்துபோனது. இக்காலப் பேச்சுத் தமிழிலும் இந்த ஒலி மாற்றம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

வெடிப்பொலியின் முன் மூக்கொலி

அடைமொழியினை அடுத்து வெடிப்பொலி வரும்போது அதன் முன் இன மூக்கொலி தோன்றுகிறது.

(எ-டு) நெடு + சழியன் - நெடுஞ்சழியன் ச் என்பதன் இனமூக்கொலி ஞ் வந்தது இள + சடிகன் - இளஞ்சடிகன் நெடு+சாதன் - நெடுசாதன்,மூக்கொலி வராமையும் உண்டு.

மெய் இரட்டித்து வாராமை

இரட்டை மெய் வர வேண்டிய இடங்களில் ஒற்றை மெய் மட்டுமே எழுதப்பட்டது.

(எ-டு) எருக்கோட்டூர் - எருகோடூர், கொட்டுபித்த - கொடுபித, சாத்தன் - சாதன்

கர உயிரின் பின் யகர மெய் வருதல்

இகர ஈற்று மொழிக்கண் இகரத்தோடு யகரமும் விரவி வருகிறது. குகைக் கல்வெட்டுகளில் இதை மிகுதியாகக் காணப்படுகிறது .

(எ-டு) கணிய், பளிய், வழுத்திய்

தொனி

தொகு

தொனி (Tone) என்பது ஒரு சொல்லின் பொருளை மாற்றுவதற்காக வெவ்வேறு சுருதிகளுடன் உச்சரிப்பதை குறிக்கும்.[4] பல மொழிகளிலும், உயிரொலிகளையும் மெய்யொலிகளையும் மாற்றினால் ஒரு சொல்லின் பொருளை மாற்றலாம். மேலும், பல மொழிகளில் ஒரு சொற்றொடரை உச்சரிக்கும்பொழுது தொனியை மாற்றி மன உணர்வு, வலியுறுத்தல் போன்ற தகவல்களை காட்டலாம். ஆனால், தொனி கொண்ட மொழிகளில் ஒரு சொல்லை உச்சரிக்கும்பொழுது உயிரொலிகள், மெய்யொலிகளை மாற்றாமல் தொனியை மட்டும் மாற்றி, அதன் பொருளையே மாற்றமுடியும்.

ஒரு சொல்லை அல்லது சொற்தொடரை உச்சரிக்கும் முறை அல்லது தொனி அதன் பொருளை உணர்த்த மிக முக்கியமானதாக அமைகிறது. சீன மொழியில் நான்கு தொனிகள் உள்ளன.

சீரான அல்லது மட்டமான தொனி

ஏறும் தொனி

ஏறும் இறங்கும் தொனி

இறங்கும் தொனி

எடுத்துக்காட்டு

ம - மட்டமான தொனி - அம்மா,

ம - ஏறும் தொனி - நார்ச்செடி,

ம - ஏறும் இறங்கும் தொனி - குதிரை,

ம - இறங்கும் தொனி - திட்டு,

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.tamilvu.org/courses/degree/a051/a0512/html/a0512113.htm
  2. Abercrombie, Elements of General Phonetics, p. 39.
  3. http://www.tamilvu.org/courses/degree/a051/a0511/html/a05116l2.htm
  4. Yip, Moira (2002). Tone. Cambridge University Press. பக். 1–3, 12–14
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலியன்&oldid=3833615" இலிருந்து மீள்விக்கப்பட்டது