ஓதுவார்
ஓதுவார் அல்லது ஓதுவாமூர்த்திகள் என்போர் சைவ சமய ஆலயங்களில் தேவார,திருவாசக திருமுறைகளை பண்ணோடு பாட தங்களை அற்பணித்துக்கொண்ட முதல் தொண்டர்கள் ஆவர். பழங்காலம் முதலே மன்னர்கள் பலரும் இவர்களுக்கு நிபதங்கள்,மானியம் கொடுத்து பதிகம் பாடச்செய்த செய்தி கல்வெட்டுகளில் காணப்படுகிறது.திருக்கோயில் பூஜை முறைகளை பொறுத்து இறைவன் முன்பு பன்னிரு திருமுறை,பஞ்ச புராணம், திருப்புகழ் போன்ற பாடல்களை பண்முறையோடு பாடும் தொண்டர்கள் இவர்கள். கி்.பி 3 ஆம் நூற்றாண்டு காரைக்கால் அம்மையார் காலம் இவர்களின் பண்ணிசை மரபுக்கு ஆணிவேர் எனலாம். அதனைத் தொடர்ந்து 6,7,8,9 ஆம் நூற்றாண்டுகளில் சைவ சமய ஆச்சாரியார்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் உள்ளிட்ட அருளாளர்கள் பாடியருளிய பதிகங்களை அவர்கள் காலம்முதலே கர்ணபரம்பரையாக கேட்டு ஓதுவார்கள் பாடி வந்துள்ளனர். மாமன்னர் ராஜராஜ சோழன் தில்லைத் தலத்தில் தேவாரத்தை மீட்டு நம்பியாண்டார் நம்பிகள் உதவியுடன் திருமுறைகளாக வகைப்படுத்தினார் என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. அன்பின் இறைவன் அரசீரிபடி எருக்கத்தம்புலியூர் என்ற ஊரில் பாணர் மரபில் வந்த பெண்ணின் துணைகொண்டு மூவர் பாடிய அதே பண்களை வகைப்படுத்தி பண்ணடைவு செய்வித்தார் மாமன்னர் இராஜராஜ சோழன். மேலும் பல காலத்தாற் முற்பட்ட பனுவல்கள்,பிற்கால அருள் நூல்கள் போன்றவையும் சேர்த்து திருமுறைகள் 12 ஆக பிற்காலத்தில் முழுமைபெற்றது. இறைவனுக்கு பூஜையின் போது வேதம்,ஆகமம் போன்ற உபசாரங்களை தொடர்ந்து செந்தமிழ் வேதமாக திகழும் திருமுறைகளை ஓதுவாமூர்த்திகள் பாடிய பிறகே பூஜை முழுமை பெறுகிறது. இறைவனின் அபிஷேக நேரங்கள், கால பூஜைகள்,உற்சவ நாட்களில் வீதி பாராயணம்,கும்பாபிஷேகங்கள், மேலும் பல சமய நிகழ்வுகளிலும் திருமுறைகளை பாடும் உரிமை பெற்றவர்கள் ஓதுவாமூர்த்திகள். திருக்கோயில்களில் விடியற்காலை திருப்பள்ளியெழுச்சி முதல், இரவு அர்த்தஜாம பூஜை பொன்னூசல் வரை இந்த ஓதுவார்கள் இறைவன் புகழை பண்ணிசையோடு பாடி ,உலகநன்மை நீடிக்க பிராத்திக்கின்றனர். இவர்களின் பாடல்களில் மனம்மகிழ்ந்த இறைவன் அந்நாள் முழுவதும் உலக உயிர்களின் இடர்களை தீர்த்து இன்பம் தருகிறான் என கூறப்படுகிறது.