ஓமான் தமிழ் பிராமி பொறித்த மட்பாண்டம்

ஓமான் தமிழ் பிராமி எழுத்துகள் பொறித்த மட்பாண்டம் என்பது ஓமான் நாட்டில் உள்ள கோர் ரோரி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பொறித்த மட்பாண்டத் துண்டு ஒன்றைக் குறிக்கிறது. இது கி.பி. முதலாம் நூற்றாண்டை அதாவது ஓமான் பகுதியில் இஸ்லாம் பரவுவதற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புள்ள காலகட்டத்தைச் சேர்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது கண்டுபிடிக்கப்பட்ட பகுதி ஓமானின் பண்டைய நகரமான சும்குராம் இருந்த பகுதியாகும். இதனால் இக்கண்டுபிடிப்பு இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கு இடையேயான கடல்வழி வணிகம் பற்றி அறிந்துகொள்வதில் முக்கியமானது என்று கருதப்படுகிறது.[1]

கண்டுபிடிப்பு தொகு

அலெஸ்சாண்ட்ரா அவான்சினி என்லைபவர் தலைமையிலான ஒரு இத்தாலிய ஆய்வுக்குழு 2006ஆம் ஆண்டில் மேற்கொண்ட அகழ்வாய்வு ஒன்றின்போது இந்த மட்பாண்டத் துண்டு கண்டெடுக்கப்பட்டது.

ஆனாலும் 2012ஆம் ஆண்டில் தான் இது தற்செயலாக தமிழ்ப் பிராமி ஆய்வாளர்களின் கவனத்துக்கு வந்தது. 2012ஆம் ஆண்டு செப்டம்பரில் "இந்தியப் பெருங்கடல் வணிகமும் கேரளாவின் பட்டணம் என்கிற துறைமுகத்தில் தொழில்நுட்பத் தொல்லியலும்" என்னும் பொருளில் கேரளாவில் ஒரு பன்னாட்டுச் செயலரங்கு ஒன்று இடம்பெற்றது. இதில் பல்வேறு இந்தியப் பெருங்கடல் நாடுகளைச் சேர்ந்த மட்பாண்டங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இக்கண்காட்சியில் ஓமானில் அகழ்வாய்வுகளை மேற்கொண்ட குழுவின் ஒரு உறுப்பினரான அலெக்சியா பவன் என்பவர் காட்சிக்கு வைத்திருந்த மட்பாண்டப் பொருட்களில் இதுவும் அடங்கியிருந்தது.

இக்கண்காட்சியிலேயே தமிழகத் தொல்லியலாளர்களான க. இராஜன், டி. தயாளன், வி. செல்வகுமார் ஆகியோரின் கவனத்துக்கு இது வந்தது.[2]

வாசிப்பு தொகு

இந்தப் பொறிப்பின் முற்பகுதி காணப்படவில்லை.

மட்பாண்டத்துண்டின் பிற்பகுதியில் ஆறு எழுத்துக்கள் மட்டுமே காணப்படுகின்றன.

இவ்வெழுத்துக்களை "...ணந்தைகீரன்" என வாசித்துள்ளனர்.

இதில் உள்ள அந்தை என்னும் பகுதி ஒரு மரியாதைச் சொல். இது அந்தை அசுதன், கொற்றந்தை போன்ற பழைய கல்வெட்டுக்களில் காணும் பெயர்களில் இருப்பதைக் காணலாம்.

கீரன் என்பது தமிழ்ப் பெயர். எனவே இப்பொறிப்பு "மதிப்புக்கு உரிய முக்கியமான வணிகர்" ஒருவரின் பெயராக இருக்கலாம் என முனைவர் இராஜன் கருதுகிறார்.[3]

தொல்லியலாளர் நடன காசிநாதன் இப்பொறிப்பை "(க)ண்ணந்தைகீரன்" என்று வாசிக்கலாம்போல் தெரிவதாகக் குறிப்பிட்டு இது "கண்ணந்தை மகன் கீரன்" என்பவனைக் குறிக்கக்கூடும் எனக் கருதுகிறார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. T.S. Subramanian, Potsherd with Tamil-Brahmi script found in Oman, The Hindu, October 28, 2012
  2. T.S. Subramanian, 2012
  3. T.S. Subramanian, 2012
  4. நடன காசிநாதன், தொன்மைத் தமிழ்க் கல்வெட்டுக்கள் - ஒரு புலனாய்வு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2014, பக். 166.