ஓரின எதிர்ப்பான்கள்

ஓரின எதிர்ப்பான்கள் (அ) ஒற்றை வகை பிறபொருளெதிரிகள் (Monoclonal antibodies) என்பவை ஒரே பரம்பரையைச் சார்ந்த பி வெள்ளையணுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பிறபொருளெதிரிகள் ஆகும். அதாவது, ஒரு பி வெள்ளையணுவிலிருந்து உருவான பல நகலிகள் ஒற்றை வகை பிறபொருளெதிரிகளைத் தயாரிக்கும். இவை ஒரே வகையானதால், அதற்கேற்ற ஒரு எதிர்ப்பானிலுள்ள ஒரு குறிப்பான பகுதியில் மட்டுமே பிணையும்.

ஓரின எதிர்ப்பான்களை உருவாக்கும் முறை

கண்டுபிடிப்பு

தொகு

பி வெள்ளையணுக்கள் வேறுபட்ட உயிரணுக்களானதால் உயிரணு பிரிவு மேற்கொண்டு பல நகலிளை உருவாக்க முடியாது. ஆனால் புற்று பி உயிரணுக்களால் பிரிவு மேற்கொண்டு பல நகலிளை உருவாக்க முடியும். இந்த புற்று பி உயிரணுக்கள் ஒரே பரம்பரையைச் சார்ந்ததால் ஒரே வகையான பிறபொருளெதிரிகளை மட்டுமே உற்பத்தி செய்யும். 1970 களில் பி வெள்ளையணுப் புற்றுநோயாகிய பல்கிய சோற்றுப்புற்று (Multiple Myeloma) அறியப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு 1975 ல் ஜார்ஜ் கோலர், சீசர் மில்ஸ்டெய்ன், மற்றும் நீல்ஸ் காஜ் ஜெர்னெ, பி உயிரணுக்களை சாற்றுப்புற்று உயிரணுக்களுடன் இணைத்து கலப்பு உயிரணுவை (Hybridoma) உருவாக்கினார்கள்[1]. இந்த கண்டுபிடிப்புக்காக அவர்கள் 1984 ஆம் ஆண்டின் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்றார்கள்[2].

உற்பத்தி

தொகு

பொதுவாக சுண்டெலி அல்லது முயலின் உடம்புக்குள் தேவையான பிறபொருளெதிரியாக்கியைச் செலுத்திய பிறகு அதன் மண்ணீரலிலிருந்து எடுத்த உயிரணுக்களை சாற்றுப்புற்று உயிரணுக்களுடன் இணைத்து ஓரின எதிர்ப்பான்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை இணைப்பதற்காக பாலி எத்திலீன் கிளைக்கால் (Polyethylene Glycol) என்னும் இரசாயனப் பொருள் உபயோகிக்கப்படுகிறது[3]. இணைந்த உயிரணுக்களை இணையாதவற்றிலிருந்து பிரிக்க வேதிப்பொருட்கலவைக் (HAT) கொண்ட வளர்ப்பூடகம் பயன்படுத்தப்படுகின்றது. இது உயிரணுக்களின் புதிதான உட்கரு அமிலத் தொகுப்பை (De novo synthesis) நிறுத்திவிடும். மேலும் சாற்றுப்புற்று உயிரணுக்களில் உட்கரு அமிலத்தின் அழிவு மீட்பு தொகுப்பு வழிப்பாதை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பி வெள்ளையணுக்களில் இந்த வழிப்பாதை செயல்படும். அதனால் பி உயிரணக்களுடன் இணைந்த புற்று உயிரணுக்கள் மட்டுமே வேதிப்பொருட்கலவை வளர்ப்பூடகத்தில் வளரும். இந்த உயிரணு கலவையை வரையறுக்கப்பட்ட ஐதாக்கல் (Limiting dilution) முறை மூலம் ஒவ்வொரு கலப்பு உயிரணுப்படிகளாகப் (hybrid clones) பிரித்துவிடலாம். ஒவ்வொரு கலப்பு உயிரணுவும் உற்பத்தி செய்த ஓரின எதிர்ப்பான்களின் எதிர்ப்பிகளுடனானப் பிணையும் தன்மை மதிப்பிடப்படுகிறது. இவற்றில் மிகவும் ஆக்கவளமுடைய மற்றும் நிலையானவைத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

பயன்கள்

தொகு

ஓரின எதிர்ப்பான்கள் புற்றுநோய் சிகிச்சையில் உபயோகிக்கப்படுகின்றன. புற்றுநோய் உயிரணுக்களின் மேற்பரப்பிலுள்ள குறிப்பிட்ட புரதத்தை எதிர்ப்பியாகப் பயன்படுத்தி அதற்கு எதிரான ஓரின எதிர்ப்பான்களை உற்பத்திச் செய்து நோயைக் குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Dr Lara Marks for What is Biotechnology? A Healthcare Revolution in the Making: The Story of César Milstein and Monoclonal Antibodies: Making monoclonal antibodies
  2. Raju, T N (January 2000). "The Nobel chronicles. 1984: Niels Kai Jerne, (1911-94); César Milstein (b 1926); and Georges Jean Franz Köhler (1946-95)". The Lancet 355 (9197): 75. doi:10.1016/S0140-6736(05)72025-0. பப்மெட்:10615922. 
  3. Yang J1, Shen MH. Polyethylene glycol-mediated cell fusion. Methods Mol Biol. 2006; 325:59-66.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரின_எதிர்ப்பான்கள்&oldid=2746671" இலிருந்து மீள்விக்கப்பட்டது