ஔரசம்; (Legitimacy (family law)) ஒருவருக்குச் சட்டப்பூர்வமாக மணமான மனைவியிடம் பிறக்கும் குழந்தை ஔரசக் குழந்தையாகும். தாம்பத்திய நிலையுள்ள காலத்தில் ஒருத்திக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஔரசக் குழந்தை ஆகும். கணவன் மரணமடைந்து விட்டாலோ அல்லது வேறு காரணத்தினாலோ தாம்பத்தியம் இல்லாமலிருந்த பின்பும் கூட 280 நாட்களுக்குள் பிறக்கும் குழந்தையும் முறையான சட்டப்பூர்வமான குழந்தையாகவே கருதப்படும். ஆனால் இவ்வாறு கருத வேண்டுமாயின் இயற்கை முறைப்படி குழந்தையுண்டாகக் கூடும் காலத்தில் கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் சேருவதற்குச் சந்தர்ப்பமில்லாமல் இருக்கக் கூடாது. அதனுடன் அவர்கள் மக்கட்பேற்றுக்குத் தகுதியற்றவர்கள் என்பதும் நிருபனம் ஆகியிருக்கக் கூடாது. எனினும் இந்த அனுமானம் மறுக்க முடியாத அனுமானமல்ல. இதற்கெதிரான சந்தர்ப்ப சாட்சியஙக்ள் மூலம் இந்த அனுமானம் மாற்றப்படலாம். ஆனால் இம்மாதிரியான சாட்சியம் வலுவானதாகவும் ஒப்புக்கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஐயத்துக்கு இடமாக இருக்கக்கூடாது.[1][2][3]

கணவனும் மனைவியும் நீதிமன்ற உத்தரவுப்படியோ, அல்லது பரஸ்பர உடன்பாட்டின் பேரிலோ பிரிந்து தனி வாழ்வு வாழ்ந்து வரும் காலத்தில் பிறக்கும் குழந்தை முறையாகப் பிறந்ததாகக் கருதப்பட வேன்டியதில்லை. மேலும் பிரிந்து வாழ ஆரம்பித்து 9 மாதங்களுக்குப் பிறகு பிறக்கும் குழந்தையும் இந்த 9 மாத கால வரையறைக்குள் கணவனும் மனைவியும் மறுபடியும் சேர்ந்தார்கள் என்று நிரூபிக்கப்படாத பட்சத்தில் முறையாகப் பிறக்காத குழந்தையாகவேக் கருதப்படும். கணவனுடன் வாழும் மனைவி எத்தனை ஆடவர்களுடன் பாலுறவு கொண்டிருந்தாலும் அவளுக்குப் பிறக்கும் குழந்தை முறைப்படி பிறந்த குழந்தை என்ற பாவனை தொடர்ந்து இருந்துவரும்.

ஒரு குழந்தை முறைகேடாகப் பிறந்ததென்று முடிவு கட்டுவதற்கு முன் அது கருத்தரித்த காலத்தில் சொந்தக் கணவன் தன் மனைவியுடன் புணர்ச்சி செய்யவில்லை என்பது திட்டமாக நிரூபிக்கப்பட வேண்டும். தாம்பத்தியத் தொடர்பில்லை என்பது உடல் சம்பந்தமானது. ஆகையால் மற்ற வழக்குகளில் சட்ட மூலமாக ஒப்புக்கொள்ளப்படும் சாட்சியஙக்ளைப் போன்ற சான்றுகளாலேயே உடல் சம்பந்தத்தையும் நிரூபிக்கலாம். ஒரு குழந்தை ஔரசக் குழந்தையல்லவென்று ஆட்சேபனை செய்பவர்களே கணவன்மனைவி சேர்க்கையில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். சேர்க்கை இருந்து, அல்லது இல்லை என்பதற்கான சான்றுகள் கொண்டுவர வேன்டும். கணவன் குழந்தையின் உண்மையான தந்தையாக இருக்க முடியாது என்பதற்கான சங்கதிகள் யாவும் சான்றாக ஒப்புக்கொள்ளப்படும்.

மக்கட்பேற்றுக்குரிய வாலிபநிலை அடையாமை, ஏதோ ஒருவித அங்கவீனத்தால் சேர்க்கை செய்ய இயலாமை, கணவன் இறந்த பின்னரோ அல்லது கணவ்ன் மனைவியைச் சந்தித்த பின்னரோ கடந்துள்ள நீன்ட கால அளவு- இவைபோன்றவை மூலம் ஒரு குழந்தை ஔரசக் குழந்தையல்ல என்று நிரூபிக்கலாம். உடல்நிலைக் காரணமாக முறையாகப் பிறக்கவில்லை என்பதற்கான நேரடியான சான்றுகள் எல்லா சமயத்திலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில் கனவனுக்கும் மனைவிக்கும் புணர்ச்சி ஏற்பட்டிருக்க முடியாது என்பதை நிரூபிப்பதற்கான சந்தர்ப்ப சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும். எதாவது ஒரு தரப்பில் இதற்கான சாட்சியம் ஏதும் இல்லையானால் புணர்ச்சி நடந்ததாகவே பாவிக்கபப்டும்; குழந்தை முறையாகப் பிறந்தது என்பதை மறுக்க முடியாது.

ஒரு குழந்தை முறையாகப் பிறந்ததா அல்லவா என்பதை நிர்ணயிப்பதில் கணவன் மனைவியின் நடவடிக்கை மிக முக்கியமான சாட்சியாகும். கணவன் வரையில் அவன் குழந்தையைத் தனக்குச் சொந்தமானதுதான் என்று அங்கீகரித்திருந்தான் என்றாவது அலல்து அவன் சாகும் வரை தனக்கு அந்தமாதிரி ஒரு குழந்தை இருந்ததாக நடந்துகொள்ளவில்லை என்றாவது காட்டலாம். மனைவி சம்பந்தப்பட்ட மட்டில் அவள் கணவனை வெறுத்து வந்தாளென்றும், தான் கருத்தரித்திருந்ததைத் தன் கணவனுக்கு அறிவிக்காது ஒளித்து வைத்திருந்தாளென்றும் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு அவளுடன் உடலுறவு கொண்ட வெளி ஆண்மகனின் தவறான நடத்தையும் பயன்படும். உதாரணமாகக் குழந்தையை மறைத்து வைப்பதில் அவன் உதவிசெய்து உடந்தையாகவும் இருந்தான் என்பதும், அதை அவன் செலவில் படிக்க வைப்பது, அவன் தனது உயிலில் அக்குழந்தைக்கு வழி செய்திருப்பது போன்றவை மிகவும் பயனுடைய சான்றுகளாக இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "1788 - Before European Settlement". Archived from the original on 2012-02-05. பார்க்கப்பட்ட நாள் 2012-03-20.
  2. Macfarlane, Alan (1980). "Illegitimacy and illegitimates in English history" (PDF). In Laslett, Peter; et al. (eds.). Bastardy and its comparative history. Arnold – via Alanmacfarlane.com.
  3. William Blackstone (1753), Commentaries on the Laws of England, Book II, Chapter XV "Of Title by Purchase and I. Escheat", Section 5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔரசம்&oldid=4164908" இலிருந்து மீள்விக்கப்பட்டது