ஔவையார் (சங்ககாலப் புலவர்)
காலந்தோறும் வாழ்ந்த ஔவையார் என்னும் புலவர்களில் இந்த ஔவையார் சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள்.
அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார். ஐங்குறுநூறு தொகுப்பில் 100 பாடல்கள் பாடிய புலவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால், சங்கநூல்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்கள் வரிசையில் இவர் கபிலர், பரணர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நல்லந்துவனார் 40 பாடல் பாடியவராகக் காணப்படுகிறார்.
ஔவையின் தோற்றப் பொலிவு
தொகுபலரது உள்ளப் பதிவில் இருக்கும் கிழவிப் பருவம் சங்ககால ஔவைக்கு இல்லை. அதியமான் தன்னை அழைத்ததாக இவரது பாடலில் உள்ள தொடர் இவரது இளமை எழிலைக் காட்டுகிறது. ஔவை ஒரு விறலி.[1] மடப்பத்தன்மை பொருந்திய மடவரல். மை தீட்டிய கண்களும், வாட்டமான நெற்றியும் கொண்டவள். எடுப்பான இடுப்பில் அழகிய அணிகலன்களை அணிந்திருந்தாள்.[2]
ஔவையாரால் பாடப்பட்ட புலவர்கள்
தொகு- ஔவையார் அதியமான் போன்றோரைப் பாடியது மட்டுமன்றி, அவரது காலத்தில் அல்லது அவரது காலத்திக்கு முன் வாழ்ந்த இரண்டு புலவர்களைத் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
- வெள்ளிவீதியார் என்னும் பெண் புலவர் தன் காதலனைத் தேடிக்கொண்டு சென்றது போலத் தலைவி ஒருத்தி தன் தலைவன் இருக்குமிடத்துக்கே செல்ல விரும்பினாளாம்.[3]
- அதியமான் அன்று ஒருநாள் எழுவரை வென்று அவர்களது ஏழு முடிகளை மார்பில் அணிந்துகொண்டதை ஔவையால் பாட முடியவில்லையாம். இன்று அதியமான் கோவலூரை அழித்ததைப் பரணர் பாடினாராம்.[4]
ஔவையாரால் பாடப்பட்ட அரசர்கள்
தொகுவேந்தர்
- சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும் நண்பர்களாகக் கூடி மகிழ்ந்திருக்கக் கண்டு, வானத்து மீன்கள் போலவும், மழையின் திவலைகள் போலவும் உயர்ந்தோங்கிப் பொலிக என வாழ்த்தினார்.[5]
வள்ளல்கள்
- அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி ஆகியோரை ஔவை பல பாடல்களில் போற்றியுள்ளார்.
- மூவேந்தர் பறம்புமலையை முற்றியிருந்தபோது அவன் வளர்த்த குருவிப் பாட்டம் பறந்து சென்று நெற்கதிர்களைக் கொண்டுவந்து தந்து பாரிக்கு உணவளித்தனவாம்.[6]
- விறலியர் சமைத்த கீரையோடு சேர்த்துச் சமைத்து உண்பதற்கு ஔவையார் நாஞ்சில் வள்ளுவனிடம் அரிசி கேட்டாராம். இந்த வள்ளுவன் தன் தகுதிக்கு அரிசி தருவது இழிவு எனக் கருதிப் போர்க்களிறு ஒன்றைப் பரிசாகத் தந்தானாம். இதனைத் தேற்றா ஈகை [7] எனக் குறிப்பிட்டு ஔவை வருந்துகிறார்.[8]
பிறர்
- வாய்மொழி முடியன் களிற்றில் உலா வருவானாம்.[9]
- அதியர் கோமான் என்று அதியமானையும் [10] அவன் மகன் எழினியையும் [11] ஔவை போற்றுகிறார்.
- கோசர் பறை முழக்கியும், சங்கு ஊதியும் வரி தண்டுவது போல அலர் தூற்றினார்களாம்.[12]
- அதியமான் மழவர் பெருமகன் [13]
ஔவையார் காட்டும் அதியமான்
தொகுஅதியமானை ஔவையார் பலவாறாகப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
- அதியமானின் முன்னோர் தன் நாட்டுக்குக் கரும்பைக் கொண்டுவந்து பயிரிட்டனர்.[14]
- அதியர் பெருமகன்.[10]
- வேல்படை வீரர் மழவர் பெருமகன்.[13]
- அதியமான் கோட்டை அகழியில் முதலைகள் இருந்தன.[15]
- குதிரை, யானை, தோல் படைகள் பயிற்சி மிக்கவை.[16]
- தடியடிக்கு அஞ்சாத பாம்பு போன்றவன்.[17]
- பகைவர்களுக்கு வீர-மரணம் தந்தான் [18]
- பிறந்த மகனைக் கண்டபோதும் இவனது சினக்கண் மாறவில்லை.[19]
- நண்பர்களிடம் குளிக்கும் யானை போல் அடங்குவான். பகைவர்களிடம் மதம் பிடித்த யானை ஆகிவிடுவான்.[20]
- வீட்டுக் கூரையில் செருகி வைக்கப்பட்டுள்ள தீக்கடைக்கோல் வீட்டை எரிக்காமல் உதவுவது போல் உதவுபவன்.[21]
- மான் கூட்டத்தில் மறப்புலி போன்றவன்.[22]
- ஒரு நாளைக்கு எட்டு தேர் செய்யும் தச்சன் ஒரு மாத காலம் செய்த தேர்போல் வலிமை மிக்கவன்.[23]
- அதியமான் நடுகல் ஆயினான்.[24]
பண்புகள்
- குழந்தையின் மழலை போன்ற என் பாடலைப் போற்றியவன்.[25]
- என்றாலும் அவன் தீ. அதில் குளிர் காயலாம்.[26]
- அதியமான் பரிசில் தரக் காலம் கடத்தினான்.[27]
- அதியமான் பரிசில் தரக் காலம் கடத்தினாலும் யானைக் கையில் இருக்கும் சோற்றுக் கவளம் போல அது பயன்படும்.[28]
- விறலியரைப் போற்றுபவன் [29]
- கள் கொஞ்சமாக இருந்தால் ஔவைக்குக் கொடுத்துவிடுவானாம். அதிகமாகக் கிடைத்தால் ஔவை பாடப் பாட உண்டு மகிழ்வானாம்.[30]
- வெள்ளி வட்டிலில் உணவு படைப்பான் [31]
ஔவையார் தரும் அரிய செய்திகள்
தொகுவழமை
- ஐயவி புகைத்தல் சமாதானத்தின் அடையாளம் [32]
அரிய தொடர்கள்
- வான் தோய்வு அற்றே காமம் [33]
- மெய்புகு அன்ன கைவர் முயக்கம் [34]
- இமயமும் துளங்கும் பண்பினை (தலைவனை) [35]
- பொற்கோல் அவிர்தொடி தற்கெழு தகைவி (பரத்தையை) [36]
- புலவர் புகழ்ந்த நார் இல் பெருமரம் (கொன்றை) [37]
- முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல் [38]
- அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் (அந்தணர்) [39]
பண்பு
- உண்டாயின் பதம் கொடுத்து, இல் ஆயின் (இருப்பதை) உடன் உண்ணும் [40]
- நாடாகு ஒன்றா, காடு ஆகு ஒன்றா, அவல் ஆகு ஒன்றா, நிசை ஆகு ஒன்றா, எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே [41]
- சிறியகட் பெறினே எமக்கு ஈயும் மன்னே, பெரியகட் பெறினே யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே [42]
- வாடு முலை ஊறிச் சுரந்தன \மார்பில் வெட்டப்பட்டுப் போர்களத்தில் மாண்டு கிடக்கும் மகனைக் கண்ட தாய்க்கு [43]
உவமை
- இல் இறைச் செருகிய ஞெலிகோல் (கொள்ளிக்குச்சி) போல வல்லாண் போர்க்களத்தில் தோன்றுவான் [21]
- குடிஞை (ஆந்தை) பொன் செய் கொல்லன் தடுவது போலத் தெளிர்க்கும் (கத்தும்) [44]
- எழுமரம் (மதில் கதவு தாழ்ப்பாள் மரம்) கடுக்கும் தாள் தோய் தடக்கை [22]
- பனித்துறைப் பகன்றை சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று ஈயாது வீயும் உயிர் தவப்பலவே [30]
- வண்டி இழுக்கும் காளை போல நாட்டைக் காப்பவன்.[45]
வரலாறு
- அதியர் குடியினர் முதன்முதலில் கரும்பை இறக்குமதி செய்து பயிரிட்டனர்.[46]
- வெண்ணி அரசன் கைவண் கிள்ளி [47]
நயம்பட உரைத்தல்
- தொண்டைமானின் போர்க்கருவிகள் நெய்பூசி வைக்கப்பட்டுள்ளதையும், அதியமானின் படைக்கருவிகள் மழுங்கிய கூர்மையை வடிக்கக் கொல்லன் உலையில் உள்ளதையும் சுட்டிக் காட்டி, தொண்டைமான் போர்ப்பயிற்சி இல்லாதவன் என்பதை நயம்பட எடுத்துரைக்கிறார்.[40]
- அதியமான் மகன் பொகுட்டெழினிக்குப் பகை இரண்டு. ஒன்று மகளிரின் கண்கள் அவனைக் கட்டிப்போடுமாம். மற்றொன்று அவனது யானை ஊர்த்துறையைக் கலக்குவதால் மக்கள் அஞ்சும் பகை.[48]
கருவிநூல்
தொகு- எட்டுத்தொகை நூல் பாடல்கள்
- சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), எஸ். வையாபுரிப்பிள்ளை இரண்டாம் பதிப்பு, 1967.
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ பாடலின் பொருளை உணரும் வகையில் மெய்ப்பாடு தோன்ற ஆடிக் காட்டுபவள் விறலி
- ↑ 'இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்,
மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி! (புறநானூறு 89) - ↑
நெறி படு கவலை நிரம்பா நீளிடை,
வெள்ளி வீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே; (அகம் 147) - ↑
அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய
அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும்
பரணன் பாடினன் மற்கொல் மற்று நீ
முரண் மிகு கோவலூர் நூறி, நின்
அரண் அடு திகிரி ஏந்திய தோளே! (புறம் 99) - ↑ புறநானூறு 367
- ↑ அகம் 303
- ↑ தெளிவில்லாத கொடை
- ↑ புறம் 140
- ↑ நற்றிணை 390
- ↑ 10.0 10.1 புறம் 91
- ↑ புறம் 392
- ↑ குறுந்தொகை 15
- ↑ 13.0 13.1 புறம் 88
- ↑ புறம் 99, 390
- ↑ புறம் 104
- ↑ புறம் 97
- ↑ புறம் 89
- ↑ புறம் 93
- ↑ புறம் 100
- ↑ புறம் 94
- ↑ 21.0 21.1 புறம் 315
- ↑ 22.0 22.1 புறம் 90
- ↑ புறம் 87
- ↑ புறம் 232, 235
- ↑ புறம் 92
- ↑ புறம் 231
- ↑ புறம் 206
- ↑ புறம் 101
- ↑ புறம் 103
- ↑ 30.0 30.1 புறம் 235
- ↑ புறம் 390
- ↑ புறம் 98
- ↑ குறுந்தொகை 102
- ↑ அகம் 11
- ↑ குறுந்தொகை 158
- ↑ குறுந்தொகை 364
- ↑ அகம் 273
- ↑ என் தனிமைத் துன்பம் அறியாமல் தூங்கும் இந்த ஊரை – குறுந்தொகை 28
- ↑ புறம் 63
- ↑ 40.0 40.1 புறம் 95
- ↑ புறம் 187
- ↑ புறநானூறு 235
- ↑ புறம் 295
- ↑ நற்றிணை 394
- ↑ புறம் 102
- ↑ புறம் 99, 392,
- ↑ இராச சூயம் பேட்ட பெருநற்கிள்ளி - நற்றிணை 390
- ↑ புறம் 96