மழவர் என்போர் மழநாட்டை ஆண்ட அரசமரபினர் ஆவர்.[1][2][3][4]

மழவர் எனும் சொல்லின் பொருள்

தொகு

சில ஆய்வாளர்கள், தொல்காப்பியத்தில் வரும் "மழவுங் குழவும் இளமைப் பொருள்" எனும் வரியை வைத்து, மழவர்கள் என்போர் தனிக்குடியல்ல. எல்லாப் பழங்குடியிலும் இருந்த இளம் வீரர்களை குறிக்கும் சொல் என்றும்[5][6] குறிப்பாக தண்டாரணியம், குதிரைமலை, அதியமானின் தகடூர், ஓரியின் கொல்லிமலை, திருச்சியில் உள்ள திருப்பாச்சில் போன்ற தமிழ்நாட்டின் பலப் பகுதிகளில் வாழ்ந்துவந்த சங்ககால மக்கள் இப்பெயரில் அறியப்பட்டனர் என்றும் கூறுவர்.

ஆனால், இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் மற்றும் இலக்கிய மூலச்சான்றுகளை வைத்துப் பார்க்கும் போது, மழவர் என்பது குடிப்பெயர் எனவும் அவர்கள் ஆண்ட நாடு மழநாடு என்று அழைக்கப்பட்டது எனவும் அறியமுடிகிறது. மழவர்கள்‌ கொல்லிமலைக்குரியவர்கள்‌. கொல்லிக்‌ காவலன்‌ என்று வல்வில்‌ஓரி குறிப்பிடப்படுகின்றார். மழவர்கள்‌ சங்ககாலத்தில்‌ சிறந்த வீரர்களாக விளங்கியிருக்கின்‌றனர்‌. உருவக்குதிரை மழவர்‌, கழற்‌சான்‌ மழவர்‌, பெருந்தோண்மழவர்‌, நெடுவேள்மழவர்‌, வன்கை மழவர்‌, என்று சங்க இலக்கியத்தில்‌ இவர்கள்‌ குறிக்கப்பெறுகின்றனர்‌, இம்மழவர்கள்‌ முல்லையும்‌, குறிஞ்சியும்‌ முறையில்‌ திரிந்து நல்லியல்‌ பிழந்து நடுக்குற்ற காலத்தில்‌ பாலைவழி நின்று வழிப்‌ பறிசெய்தும்‌, வேட்டையாடியும்‌ வாழ்ந்தனர்‌ என்று சங்க அகப்பாடல்களால்‌ அறியலாம்.[7]

“கல்லா மழவர்‌ வில்லிடை விளங்கிய துன்னருங்‌ கவலை யருஞ்சுரம்‌”

“நோன்சிலை மழவர்‌ ரூன்புழக்‌ கயருஞ்சுரன்"

இடம்

தொகு

திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி முதல் பண்டைய எருமைநாடு வரை (தற்போதய மைசூர்) தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கு பகுதி, திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது மழநாடு. கி.மு. முதல் கி.பி. வரை மழநாட்டின் வரலாறு நீள்கிறது. சங்ககால புலவர் ஔவையாரால் பாடப்பட்ட அதியமான்கள், வல்வில் ஓரி, கொல்லி மழவன் போன்றவர்களும், பிற்காலத்தில் கி.பி. 16 ம் நூற்றாண்டில் அரியலூர் ஜமீன் சமஸ்தானத்தை ஆண்ட ஒப்பில்லா மழவராயர், தஞ்சாவூர் புனவாசல் பகுதியை கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஆண்ட மழவராய பண்டாரத்தார் போன்ற மழவராய மரபினர் ஆண்டு வந்தனர். தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையரின் முன்னோர்கள் இந்த அரியலூர் மழவராயர்களால் போற்றப்பட்டனர்.[8] மழநாடு எல்லை குறித்த கல்வெட்டுகள் கருநாடக மாநிலத்தில் கிடைத்துள்ளன.[சான்று தேவை]

மழகொங்கம்

தொகு

கி.பி. 770ல் வெளியிடப்பட்ட வேள்விக்குடி செப்பேடுகள் மழகொங்கம் பகுதியைக் குறிப்பிடுகின்றன. அதில், இராஜசிம்மன்(மாறவர்மன்), பூக்கள் விரிகின்ற சோலைகளையுடைய காவிரியைக் கடந்து அழகமைந்த வில்லினால் மழகொங்கம் பகுதியை அடிப்படுத்தினான் என்றுள்ளது. இந்த மழகொங்கம் தமிழ் நாட்டிலே காவிரியின் வடகரையில் உள்ளது.[9] அப்போது, சங்க இலக்கியத்தில் மழவர் பெருமகன் என்றழைக்கப்படும் அதியமான்கள் இப்பகுதியை ஆண்டு வந்தார்கள். அதியமான்கள் உருவாக்கிய கோயில்களே நாமக்கல் குகைக்கோயில்கள். தமிழக அரசியல் வரலாற்றில் மழகொங்கம் முக்கிய பங்கு வகித்தது. மலை வளமும் நீர் வளமும் மிக்கது. இப்பகுதி கிழக்கே பாச்சில்(திருவாசி) வரை பரவியிருந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருமழபாடி பண்டை நாளில் மழவர் ஊராகத் திகழ்ந்தது.[10]

மழநாடு

தொகு

தற்கால திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பிரம்மியம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 998ஆம் ஆண்டு கல்வெட்டில் மழநாடு என்றொரு நாடு இருப்பது பதிவாகியுள்ளது.[11] கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு இயற்றப்பட்ட இளம்பூரணர் உரையில் மழநாடு என்றொரு நாடு இருப்பது குறிப்பிடப்படுகிறது.[12] மேலும், இந்த மழநாடு திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி என்று அகராதிகள் கூறுகின்றன.[3][13] மேலும், மழகொங்கம், மழபுலம் ஆகிய சொற்களுக்கு அருத்தம் மழநாடு என்று அகராதிகள் குறிப்பிடுகின்றன.[4][14][15][16] கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் இயற்றப்பட்ட பெரியபுராணம் மேல்மழநாட்டை மேன்மழநாடு எனும் நீர்நாடு என்று குறிப்பிடுகிறது.[17] சங்க இலக்கியமான புறநானூற்றில் அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் மழவர் பெருமகன்[18] என்றும் தலை நீர் நாடன்[19] என்றும் அழைக்கிறார். இதன் மூலம், மழவர் பெருமகனான அதியமான் நெடுமான் அஞ்சியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது என்பதும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. கல்வெட்டுகளில் தலைநீர் என்ற சொல் முதல் மடைப் பாய்ச்சல் என்ற அருத்தத்தில் பயின்று வரும்.[20] இதன் மூலம் காவிரியாறு முதன்முதலில் பாயும் நாடு தலைநீர் நாடு என்பது புலப்படும். இப்பெரியபுராணத்துப் பாடலின் உரையிலிருந்து மழநாடு மேல்மழநாடு, கீழ்மழநாடு முதலிய நிலப்பகுப்புகளை உடையது என்றும் அதில் கீழ்மழநாட்டை திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவாசியைத் தலைநகராகக் கொண்டு கொல்லி மழவன் எனும் அரசன் ஆண்டான் என்றும் அறியமுடிகிறது.[2] இதன்மூலம், மழவர் ஆண்ட நாடு மழநாடு என்று அழைக்கப்பட்டது என்று அறியமுடிகிறது. மேலும், சுமார்த்தப்பிராமணரின் ஒரு உட்பிரிவு மழநாட்டுப்பிருகச்சரணம் என்று அழைக்கப்படுகிறது.[21] இதன் மூலமும், மழநாடு என்றொரு நாடு இருப்பது நமக்குத் தெரியவருகிறது.

மழவர் பெயரில் உள்ள இடங்கள்

தொகு

வரலாற்று இடப்பெயர்கள்

தொகு
  1. தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சின்னாங்குப்பம் என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டில், கங்க மன்னன் ஸ்ரீ புருசவருமனது ஆட்சிக் காலத்தில் பிருணிதுவியார்(கல்வெட்டியலார் ச. கிருஷ்ணமூர்த்தி பிருதிவிராயர் என படித்து உள்ளார்) என்பவர் புறமலை நாட்டை ஆண்டு வந்தார் என்றும் அவர் மழவூர்த் தொறுக் கொள்ளச் சென்ற போது அப்பூசலில் செருப்பச்சடையன் என்ற வீரன் இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.[22]
  2. தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சிந்தல்பாடி என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டில், கானப்பள்ளி எனும் ஊரில் மழவராயப்புத்தேரி எனும் ஏரி இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.[23]

தற்கால இடப்பெயர்கள்

தொகு
இடப்பெயர் தற்கால ஊர் மாநிலம் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி
மழபாடி திருமலவாடி, திருமல்வாடி தமிழ்நாடு தருமபுரி
மழபாடி திருமழபாடி தமிழ்நாடு அரியலூர் திருமானூர் திருமழபாடி
மழபாடி மழவன் சேரம்பாடி தமிழ்நாடு நீலகிரி கூடலூர் சேரங்கோடு
மழவராயநல்லூர் மழவராயநல்லூர் தமிழ்நாடு அரியலூர் தா. பழூர் கடம்பூர்
மழவராயநல்லூர் மழவராயநல்லூர் தமிழ்நாடு அரியலூர் தா. பழூர் கீழநத்தம்
மழவராயநல்லூர் மழவராயநல்லூர் தமிழ்நாடு கடலூர் கடலூர் சி. என். பாளையம்
மழவராயநல்லூர் மழவராயநல்லூர் தமிழ்நாடு கடலூர் கீரப்பாளையம் மழவராயநல்லூர்
மழவராயநல்லூர் மழவராயநல்லூர் தமிழ்நாடு பெரம்பலூர் வேப்பூர் எழுமூர்
மழவராயனூர் மழவராயனூர் தமிழ்நாடு விழுப்புரம் உளுந்தூர்பேட்டை மழவராயனூர். எ
மழவராயனூர் மழவராயனூர் தமிழ்நாடு விழுப்புரம் கோலியனூர் மழவராயனூர்
மழவராயனூர் மழவராயனூர் தமிழ்நாடு விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் மழவராயனூர். டி
மழவூர் சன்னபட்னா கருநாடகம் ராமநகரம் சன்னபட்னா சன்னபட்னா
மழவூர் மாலூர்பட்னா கருநாடகம் ராமநகரம் சன்னபட்னா மாலூர்பட்னா
மழவன்பற்று மழுவம்பட்டு தமிழ்நாடு திருவண்ணாமலை தண்டராம்பட்டு வாணாபுரம்
மழவன்கரணை மழவங்கரணை தமிழ்நாடு திருவண்ணாமலை தெள்ளாறு மழவங்கரணை
மழவன்கரணை மழுவங்கரணை தமிழ்நாடு காஞ்சிபுரம் சித்தாமூர் மழுவங்கரணை
மழவன்தாங்கல் மழவந்தாங்கல் தமிழ்நாடு விழுப்புரம் செஞ்சி மாவந்தாங்கல்
மழவன்கொல்லை மழுவங்கொல்லை தமிழ்நாடு காஞ்சிபுரம் மதுராந்தகம் லஷ்மிநாராயணபுரம்
மழவராயன்பட்டி மழவராயம்பட்டி தமிழ்நாடு புதுக்கோட்டை அன்னவாசல் வெள்ளஞ்சார்
மழவராயன்பட்டி மழவராயன்பட்டி தமிழ்நாடு புதுக்கோட்டை திருவரங்குளம் மாஞ்சான்விடுதி
மழவரான்பட்டி மழவரான்பட்டி தமிழ்நாடு புதுக்கோட்டை கறம்பக்குடி வந்தான்விடுதி
மழவரான்பட்டி மழவராம்பட்டி தமிழ்நாடு புதுக்கோட்டை விராலிமலை களமாவூர்
மழவரான்பட்டி மழவராம்பட்டி தமிழ்நாடு புதுக்கோட்டை குளத்தூர் குளத்தூர்
உடையமழவராயன்பட்டி உடையமழவராயன்பட்டி தமிழ்நாடு புதுக்கோட்டை குன்னாண்டார்கோயில் குளத்தூர்
மழவச்சேரி மழவச்சேரி தமிழ்நாடு திருவாரூர் குடவாசல் அன்னவாசல்
மழவராயநத்தம் மளவராயநத்தம் தமிழ்நாடு தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி மளவராயநத்தம்
மழவராச்சி தோப்பு மழவராச்சி தோப்பு தமிழ்நாடு தஞ்சாவூர் ஒரத்தநாடு பொய்யுண்டார்கோட்டை
மழவராயர் தெரு மழவராயர் தெரு தமிழ்நாடு தஞ்சாவூர் ஒரத்தநாடு பொய்யுண்டார்கோட்டை
மழவராயர் தெரு மழவராயர் தெரு தமிழ்நாடு தஞ்சாவூர் ஒரத்தநாடு ஒக்கநாடு மேலையூர்
மழவமாடிக்கொல்லை மழவமாடிக்கொல்லை தமிழ்நாடு தஞ்சாவூர் ஒரத்தநாடு நெய்வேலி வடக்கு
மழவராயனேந்தல் மழவராயனேந்தல் தமிழ்நாடு சிவகங்கை திருப்புவனம் மழவராயனேந்தல்

வரலாற்றுச் சான்றுகள்

தொகு

தொல்லியல் மூலங்கள் தரும் செய்திகள்

தொகு

கி.பி. 6ஆம் நூற்றாண்டு

தொகு
  1. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் அசுரம்சேரி எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு பெற்ற கி.பி. 6ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டில், பல்லவன் சிம்மவர்மனுடைய இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 524) ஆடி மாதம் புணர்பூச நட்சத்திரம் கூடிய நாளின் போது தகடூரின் பிடி மண்ணேரிக் கிழக்குப் பகுதியை ஆள்பவருடைய படையை எதிர்த்து இலாட நாடு ஆளும் அரைசர், மழவரைசர் ஆகியோர் இணைந்த கூட்டுப் படையைச் சேர்த்துக் கொண்டு போரிட்டு வென்று வீர சாவடைந்தார் கங்க அதி அரைசர் உடைய படைத் தலைவரான கல்நாட்டின் மாதன் பெருதிஅரைசர் என்பவர், என்னும் செய்தி பதிவாகியுள்ளது.[24]

கி.பி. 8ஆம் நூற்றாண்டு

தொகு
  1. கி.பி. 770ல் வெளியிடப்பட்ட வேள்விக்குடி செப்பேடுகள் மழகொங்கம் பகுதியைக் குறிப்பிடுகின்றன. அதில், இராஜசிம்மன்(மாறவர்மன்), பூக்கள் விரிகின்ற சோலைகளையுடைய காவிரியைக் கடந்து அழகமைந்த வில்லினால் மழகொங்கம் பகுதியை அடிப்படுத்தினான் என்றுள்ளது. இந்த மழகொங்கம் தமிழ் நாட்டிலே காவிரியின் வடகரையில் உள்ளது.[9]
  2. வேள்விக்குடி செப்பேடுகள் வழங்கிய பராந்தகன் நெடுஞ்சடையன் பாண்டியனின் தாய் மழவர் குடியில் பிறந்தவராவார். இவரை மழவேந்திரனின் மகள்(செப்பேட்டில் உள்ள சங்கத சுலோகத்தின் படி மளவேந்திரன்) அதாவது மழவ மன்னன் மகள் என்றும் இவரை பாண்டிய வேந்தன் இராஜசிம்மன்(மாறவர்மன்) மணந்தான் என்றும் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இச்செப்பேட்டுகள் பராந்தகன் நெடுஞ்சடையன் பாண்டியனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் வழங்கப்பட்டன என்பதால் இவற்றின் காலம் கி.பி.770 என அறியமுடிகிறது.[25]

கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு

தொகு
  1. தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சின்னாங்குப்பம் என்னும் ஊரில் கிடைத்த நடுகல் கல்வெட்டில், கங்க மன்னன் ஸ்ரீ புருசவருமனது ஆட்சிக் காலத்தில் பிருணிதுவியார்(கல்வெட்டியலார் ச. கிருஷ்ணமூர்த்தி பிருதிவிராயர் என படித்து உள்ளார்) என்பவர் புறமலை நாட்டை ஆண்டு வந்தார் என்றும் அவர் மழவூர்த் தொறுக் கொள்ளச் சென்ற போது அப்பூசலில் செருப்பச்சடையன் என்ற வீரன் இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.[22]

கி.பி. 9ஆம் நூற்றாண்டு

தொகு
  1. தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள செல்லம்பட்டி என்னும் ஊரில் கிடைத்த நடுகல் கல்வெட்டில், கி.பி.898ஆம் ஆண்டு தகடூர் மாவலிவாணராயரடியான் கூடல் மாணிக்கன் உளைக்குன்றினை ஆண்டு வந்தான். அவனுடைய மாமனும் கோவூர் நாட்டு ஐந்நூறின் தலைவனாக விளங்கியவனுமான மழற்பையன் என்பவனின் அடியான் சூழிபுளியன் என்பவன், புலியைக் கொன்றபோது இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.[26] இக்கல்வெட்டில் மழற்பையன் என்ற சொல் மழவர் மகன் என்ற அருத்தத்தில் பயின்று வந்துள்ளது.

கி.பி. 10ஆம் நூற்றாண்டு

தொகு
  1. கண்டராதித்த சோழனின் பட்டத்தரசி, அருண்மொழிவர்மனை(முதலாம் இராஜராஜ சோழன்) வளர்த்த வளர்ப்புத்தாய், செம்பியன் மாதேவி, மழவர் குடியில் பிறந்தவராவார். இவர் கொல்லி மலை மழவரையரின் மகளாராவார். இவரை கல்வெட்டுக்கள் ஸ்ரீ உத்தம சோழதேவரை திருவயிறு வாய்த்த மழவரையர் மகளார் பராந்தக மாதேவ (டிகளார்) ராந செம்பியன் ம(ர)ஹ(ர) தேவியார் என்றும்[27] மேற்கெழுந்தருளிய தேவர் கண்டராதித்த தேவர் தேவியார், மழப் பெருமானடிகள் மகளார் பராந்தகன் மா தேவடிகளான செம்பியன் மா தேவியார் என்றும்[28] கூறும். இவரது காலம் கி.பி.910-1001 ஆகும்.
  2. அருண்மொழிவர்மனின்(முதலாம் இராஜராஜ சோழன்) தந்தை சுந்தர சோழனின் மனைவி, முதலாம் இராஜராஜ சோழனின் தாய், வானவன் மாதேவி, மலையமான் வமிசத்து மழவர் குடியில் பிறந்தவராவார்.
  3. தற்கால திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பிரம்மியம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 998ஆம் ஆண்டு கல்வெட்டில் மழநாடு என்ற சொல் பதிவாகியுள்ளது.[11]
  4. தற்கால கருநாடக மாநிலம் ராமநகரம் மாவட்டம் சன்னபட்னா வட்டத்தில் உள்ள ஊர் மாலூர்பட்டினம். இந்த ஊரில் கிடைத்த கல்வெட்டுகள் படி இவ்வூர் மழவூர் என்றும் முடிகொண்டசோழமண்டலத்து இராஜேந்திரசோழவளநாட்டுக் கிழலைநாட்டு மழவூரான இராசேந்திரசிங்கச்சதுர்வேதிமங்கலம் என்றும் முடிகொண்டசோழமண்டலத்து கரிகாலசோழவளநாட்டு பெரிய மழவூர் இராசேந்திரசிங்கச்சதுர்வேதிமங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.[29] மற்றொரு கல்வெட்டு சன்னபட்னா எனும் ஊரை சிறியமழவூர் என்று குறிப்பிடுகிறது.[30] இதன்மூலம், மழவூர்பட்டினம் என்னும் ஊர் மாலூர்பட்டினம் என்றும் சின்னமழவூர்பட்டினம் என்ற பெயர் சின்னபட்டினம் என்றாகி இன்று சன்னபட்னா என்றும் வழங்கப்படுவது புலனாகிறது.

கி.பி. 11 ஆம் நூற்றாண்டு

தொகு

1067 ஆம் ஆண்டு வீர ராசேந்திரன் ஆட்சியில், திருச்சிராப்பள்ளி பகுதியில் கரூர்‌ பசுபதீச்சரர்‌ கோயிலின்‌ தென்புறச்‌சுவர் கல்வெட்டுக்களில்‌ வந்துள்ள உடன்‌ கூட்டத்து அதிகாரிகளின்‌ பெயர்களில் க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு, ஐயங்கொண்ட சோழ நல்‌லூருடையான்‌ உதைய திவாகரன்‌ கூத்தாடுவானான வீரராசேந்திர மழவராயர்‌ என்பவர் குறிப்பிடப்படுகிறார்.[31]

கி.பி. 13 ஆம் நூற்றாண்டு

தொகு

1248 ஆம் ஆண்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் கல்வெட்டில் அய்யன்‌ மழவராயார் என்பர் குறிப்பிடப்படுகிறார்.[32]

கி.பி. 14ஆம் நூற்றாண்டு

தொகு
  1. தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சிந்தல்பாடி என்னும் ஊரில் கிடைத்த கல்வெட்டில், கானப்பள்ளி எனும் ஊரில் மழவராயப்புத்தேரி எனும் ஏரி இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.[23]

கி.பி. 15 ஆம் நூற்றாண்டு

தொகு

15 ஆம் நூற்றாண்டு புதுக்கோட்டைமாவட்டம்‌, குளத்தூர் வட்டம், மடத்துக்‌ கோவில்‌ முதல்‌ பிரகாரம்‌ நுழைவு வாயில்‌ தூணில், மழவராயர் ஆசிரியம்‌ வழங்கியமை குறிப்பிடப்பட்டுள்ளது.[33]

15 ஆம் நூற்றாண்டு புதுக்கோட்டை மாவட்டம்‌ ,குளத்தூர் வட்டம், குன்றாண்டார் கோவில் கல்வெட்டில் தேவாண்டான்‌ மழவராயர்‌ என்பர் குறிப்பிடப்படுகிறார்.[34]

கி.பி. 16ஆம் நூற்றாண்டு

தொகு
  1. தற்கால திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேசூர் பேரூராட்சியில் உள்ள ஈசுவரன் கோவிலில் உள்ள கி.பி. 1528ஆம் ஆண்டு கல்வெட்டில், சி(சீ)ர்மழவர் குலம் என்ற சொல் பதிவாகியுள்ளது. இக்கல்வெட்டு படி, கரிதுர்க்க நாவலற்கருள் கம்பையாதிபன் கன்னன் மிகு பொன்னைநாடன் கார்போலவந்த பாரியாழ்வானுக்கந்ததொரு கருணை உண்ணாமுலையன் என்பவன், திருமருவுமிசுரத்திம்மையன் என்பவனின் கிறுபைகொண்டு, சி(சீ)ர்மழவர் குலம் விளங்கத் தேசூரிலே செங்கை வேலாயுதனுக்கொரு திருக்கோவிலைக் கட்டுவித்தான் என்றுள்ளது.[35]
  2. தற்கால திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மயில்ரங்கம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 1532ஆம் ஆண்டு கல்வெட்டில் மாடைகளில் மழவராயர், அவினாசி மழவராயர் ஆகிய சொற்கள் பதிவாகியுள்ளன.[36]

இலக்கிய மூலங்கள் தரும் செய்திகள்

தொகு

சங்ககாலம்

தொகு
சங்க இலக்கியங்களில் மழவர்
தொகு

இவர்கள் மணிகட்டிய வேலை ஏந்திப் போர் புரியும் பாங்கினர்.[37] வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சியும்[18] வள்ளல் ஓரியும் மழவர் பெருமகன் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.[38] பல்யானைச் செல்கெழு குட்டுவன் மூன்றாம் பத்தின் தலைவன். இவன் மழவர்களைக் காக்கும் கவசமாக விளங்கினான்.[39] இவர்கள் ஆயர் குலத்தின் ஒரு பிரிவினர் ஆவர். இம்மழவர் குடியினர் தண்டாரணியப் பகுதியிலும் வாழ்ந்தனர். இவர்கள் வருடை ஆடுகளைப் பிடித்துவந்து பழக்கப்படுத்தி வளர்த்து அதன் பயனைத் துய்த்து வந்தனர். ஆறாம்பத்துத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அவர்களின் ஆடுகளைக் கவர்ந்துவந்து தன் நாட்டுத் தொண்டி மக்களுக்கு வழங்கினான். அன்றியும் ஆடுகளைக் கவர்ந்து வரும்போது எதிர்த்த ஏனை கரந்தை மழவரையும் போரில் வென்றான்.[40] மழவர் வில்லும் அம்பும் ஏந்தியவராய் வீளை (வாய் ஊதல்) அடித்துக்கொண்டு நாள்தோறும் ஆனிரைகள் மேய்த்து வருவர். [41]

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விடியும் பொழுதில் தன்னைத் தாக்கிய மழவர்களை விரட்டினான் [42] மழவர் குடியினர் குதிரைமலை நாட்டில் வாழ்ந்துவந்தனர். பொதினி எனப்பட்ட பழனிமலை அரசன் தனைத் தாக்கிய இந்த மழவர்களை விரட்டினான். [43] திருச்சி மாவட்டத்தில் திருப்பாச்சில் ஆசிரமத்தைத் தலைநகராகக் கொண்டு கொல்லி மழவன் [44] என்பவன் ஆட்சிபுரிந்துவந்தான். இது இடைக்கால நிலை. இக்காலத்துத் திருமழபாடி முற்காலத்தில் மழவர்குடியினர் வாழ்ந்த இடம் எனக் கருத இடமுண்டு. இவர்கள் வாழ்ந்த ஊர் பாடி என்று வருவதால் இவர்கள் முல்லை நில குடியினர் என்பது விளங்குகிறது.

சிற்றுரை சேர்ந்த ஆயர்கள் கையை தலை மீது வைத்து வருந்தும்படி கொழுத்த ஆவினை கவர்ந்து அதன் இறைச்சியை பாலைத்திணை மழவர் உண்டனர்[45] என்றும், கன்றினையுடைய பசுவினை கொன்று உண்டனர்[46] என்றும் கடவுளுக்கும் காணிக்கையாக பலியிட்டனர் என்றும் அறிய முடிகிறது.[47]

மழபுலம்
தொகு

மழபுலம் என்பது சங்ககாலத்தில் மழவர் வாழ்ந்த நாடு.
வேங்கட நாட்டை ஆண்ட தமிழ்மன்னன் புல்லி
இவன் மழவர்களை வணங்கச் செய்து அவர்களது நாட்டைத் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான்.
சங்ககாலப் புலவர் மாமூலனார் இந்தச் செய்தியைக் குறிப்பிடுகிறார்.. கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி [1]

கி.பி. 11ஆம் நூற்றாண்டு

தொகு
தொல்காப்பியம் - இளம்பூரணர் உரை
தொகு

கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு இயற்றப்பட்ட இளம்பூரணர் உரையில் மழநாடு என்றொரு நாடு இருப்பது குறிப்பிடப்படுகிறது.[12]

திருத்தொண்டர் திருவந்தாதி
தொகு

கி.பி. 11ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் இயற்றப்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதியில் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றிக் கூறும் பாடலில் மேல்மழநாட்டைப் பற்றி குறிப்புள்ளது.[17][48]

கி.பி. 12ஆம் நூற்றாண்டு

தொகு
பெரியபுராணம்
தொகு

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பெரியபுராணம் மேல்மழநாட்டை மேன்மழநாடு எனும் நீர்நாடு என்று குறிப்பிடுகிறது.[17]

கி.பி. 13-17ஆம் நூற்றாண்டு

தொகு
கைலாயமாலை
தொகு

கைலாய மாலை எனும் இவ்விலக்கியம் செகராசசேகரன் என்னும் அரசன் யாழ்ப்பாணத்தை ஆளத் துவங்கிய போது உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான முத்துராசக் கவிராசர் என்பவரால் பாடப்பட்டது. இதில், பாண்டி மழவன் என்பவன், செகராசசேகரனிடம் சென்று யாழ்ப்பாண அரசை ஏற்கும் படி வேண்டினார் என்ற செய்தி பதிவாகியுள்ளது. மேலும், பாண்டி மழவனை விவரிக்கையில், இவனை பொன்பற்றியூரன், அண்டர் போரில் அழல்சூரன், மின்பற்று காலின் விலங்குதன்னை - அன்புற்று வெட்டுவித்து விட்டபுகழ் வேளாளர் வங்கிஷத்தில் திட்டமுடன் வந்து செனனித்தோன் என இன்னும் பலவாறு விவரிக்கிறது.[49]

கி.பி. 15ஆம் நூற்றாண்டு

தொகு
திருப்புகழ்
தொகு

கி.பி. 15ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட திருப்புகழில் காவிரி ஆறு நிறைந்து வரும் கால்வாய்கள் உள்ள சிறந்த மழ நாட்டுப் பகுதியில் சிறப்புடன் உள்ள பூவாளூரில் வீற்றிருக்கும் பெருமாளே என்று குறிப்பிடப்படுகிறது.[50][51]

கி.பி. 18ஆம் நூற்றாண்டு

தொகு
சோழ மண்டல சதகம்
தொகு

கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் மறுபதிப்பாக வெளியிடப்பட்ட சோழ மண்டல சதகத்தில் மழநாட்டுப் பகுதிகள் இராசாச்சிரய வளநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[52]

அடிக்குறிப்பு

தொகு
  1. 1.0 1.1 அகநானூறு 61
  2. 2.0 2.1 பெரியபுராணம், (முதற் காண்டம்) மூன்றாவது, இலைமலிந்த சருக்கம், ஆனாயநாயனார்புராணம், பாடல் எண் : 1
  3. 3.0 3.1 மழநாடு - maḻa-nāṭu n. மழவர் +. Regionnorth of the Cauvery on the western side ofTrichinopoly; திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவேரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி. மங்கலமென்பதோர் ஊருண்டு போலும் மழநாட்டுள் (தொல்.சொல். 273, இளம்பூ.). - University of Madras Lexicon
  4. 4.0 4.1 மழகொங்கம் - maḻa-koṅkam, n. < மழவர் +. See மழநாடு. மழகொங்க மடிப்படுத்து (வேள்வி குடிச்சாஸனம்). - University of Madras Lexicon
  5. "மழவுங் குழவும் இளமைப் பொருள்". (தொல். உரி 14)
  6. 'செங்கம் நடுகற்களில் தொறுப்பூசல், தொல்குடிகள், அரசியல்' - பூங்குன்றனார் (எம்.பில். ஆய்வேடு - பாரதியார் பல்கலைக்கழகம் 1989) பக். 144.
  7. திருவெள்ளறை. 1977. pp. [8].
  8. மழநாடு - தமிழ் விக்சனரி
  9. 9.0 9.1 பாண்டியர் செப்பேடுகள் பத்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, பக்கம் : 14,26,40,46
  10. சேலம், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீட்டு எண் : 60, பக்கம் எண் : 3
  11. 11.0 11.1 திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுக்கள் - தொகுதி 1, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, கல்வெட்டுத் தொடர் எண் : 135/2010
  12. 12.0 12.1 மங்கல மென்பதோர் ஊருண்டு போலும் மழநாட்டுள் (தொல். சொல். 273, இளம்பூ.)
  13. மழநாடு - திருச்சிராப்பள்ளிக்கு மேம்பால் காவிரியாற்றுக்கு வடபாகத்திலுள்ள பகுதி. - தமிழ் தமிழ் அகரமுதலி
  14. மழகொங்கம் - திருச்சிராப்பள்ளிக்கு மேம்பால் காவிரியாற்றுக்கு வடபாகத்திலுள்ள பகுதி - தமிழ் தமிழ் அகரமுதலி
  15. மழபுலம் - maḻa-pulam, n. < id. +. See மழநாடு. (அகநா. 61, உரை.) - University of Madras Lexicon
  16. மழபுலம் - திருச்சிராப்பள்ளிக்கு மேம்பால் காவிரியாற்றுக்கு வடபாகத்திலுள்ள பகுதி - தமிழ் தமிழ் அகரமுதலி
  17. 17.0 17.1 17.2 மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்,
    சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற,
    ஈடு பெருக்கிய போர்களின் மேக மிளைத்தேற,
    நீடு வளத்தது மேன்மழ நாடெனு நீர்நாடு - பெரியபுராணம், (முதற் காண்டம்) மூன்றாவது, இலைமலிந்த சருக்கம், ஆனாயநாயனார்புராணம், பாடல் எண் : 1
  18. 18.0 18.1 ஔவையார் – புறம் 88, 90
  19. உண் துறை
    மலை அலர் அணியும் தலை நீர் நாடன் (புறநானூறு 390)
  20. கல்வெட்டுச் சொல்லகராதி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு
  21. மழநாட்டுப்பிருகச்சரணம் - maḻanāṭṭu-p-pirukaccaraṇam n. மழநாடு +. A sub-division of Smārta Brahmins; சுமார்த்தப்பிராமணரின் உட்பிரிவுவகை. (E. T. i, 335.) - University of Madras Lexicon
  22. 22.0 22.1 ஸ்ரீ சிரீ புருச பருமற்கு - - - -
    தாவது பிருணிதுவியார் புறமலை
    நாடாள மழவூர்த் தொருக் கொண்ட ஞா
    ன்று செருப்பச் சடையன் பட்டான் - தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் - தொகுதி 2, கல்வெட்டுத் தொடர் எண் : 1973/18
  23. 23.0 23.1 தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் - தொகுதி 2, கல்வெட்டுத் தொடர் எண் : 1974/146
  24. கோவிசைய சீபரும்மற் கிரு
    த்தொன்பதாவது ஆட்டி தி
    ங்கள் புணரு பூசது ஞா(ன்)று தகடு
    ருப் பிடி மண்ணேரிக் கீழ் உடை
    யாரு தண்டத்தோடு இலாட
    ரைசரோடும் மழவரைசரோடும்எ
    றிந்து பட்டாரு கங்கதி அ
    ரைசரு சேவகரு மாதப் பெருதிரை
    சரு கன்னாடு - ஆவ. இதழ். 20, 2010, பக். 196
  25. பாண்டியர் செப்பேடுகள் பத்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, பக்கம் : 6,15,17
  26. தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் - தொகுதி 2, கல்வெட்டுத் தொடர் எண் : 1973/14,1973/15
  27. S.I.I. Vol. VIII. No.141
  28. சேலம், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீட்டு எண் : 60, பக்கம் எண் : 4
  29. Epigraphica Carnatica, Lewis Rice - Volume IX - Bangalore District, Channapatna Taluq, Inscription No : 38,40,78,80,81,87,88a,88b,89,91,92,93,94,94b,94c,96
  30. Epigraphica Carnatica, Lewis Rice - Volume IX - Bangalore District, Channapatna Taluq, Inscription No : 35
  31. கல்வெட்டு : விளக்க உரை. 1955. pp. [51].
  32. South Indian Inscriptions Vol 34. 2015. pp. [147].
  33. ஆவணம் VOL15. 2015. pp. [42].
  34. South Indian Inscriptions Vol 34. 2015. pp. [343].
  35. A.R.No. 244 of 1909
  36. திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுக்கள் - தொகுதி 1, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, கல்வெட்டுத் தொடர் எண் : 194/2010
  37. தனிமணி இரட்டும் தாளுடைக் கடிகை நுழைநுதி நெடுவேல் குறும்படை மழவர் \அம்மூவனார் – அகம் 35
  38. (மழவர் பெருமகன் மாவள் ஓரி - நப்பாலத்தனார் – நற்றிணை 52
  39. ”மழவர் மெய்ம்மறை” பாலைக்கௌதமனார் பதிற்றுப்பத்து 21-24
  40. பதிற்றுப்பத்து பதிகம் 6
  41. வீளை அம்பின் விழுத்தொடை மழவர்
    நாள் ஆ உய்த்த நாம வெஞ்சுரம் (அகம் 131)
  42. மாங்குடி மருதனார் – மதுரைக்காஞ்சி 687
  43. நக்கீரர் – அகம் 1
  44. கொல்லி மழவன்[தொடர்பிழந்த இணைப்பு]
  45. அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2. பக். 22.
  46. அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2. பக். 271.
  47. அகநானூறு - பாலைத்திணை பாடல் 309.
  48. தாயவன் யாவுக்கும் தாழ்சடை மேல்தனித் திங்கள்வைத்த
    தூயவன் பாதம் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும்
    வேயவன் மேல்மழ நாட்டு விரிபுனல் மங்கலக்கோன்
    ஆயவன் ஆனாயன் என்னை உவந்தாண் டருளினனே - திருத்தொண்டர் திருவந்தாதி, 16 - பதினோராம் திருமுறை, 1141
  49. கைலாயமாலை, முத்துராச கவிராசர், பக்கம் எண் : 14
  50. ஞான தீக்ஷித சேயே காவிரி
    யாறு தேக்கிய கால்வாய் மாமழ
    நாடு போற்றிய பூவா ளுருறை ...... பெருமாளே - திருப்புகழ், 920, காலன் வேல் கணை(பூவாளூர்)
  51. திருப்புகழ், 920, காலன் வேல் கணை(பூவாளூர்)
  52. இராசாச்சிரய வளநாடு [மழநாடு]
    1. செம்புறைக் கண்டம் [லால்குடி]
    2. கலாரக் கூற்றம் [திருச்சி, லால்குடி]
    3. மீமலை நாடு [முசிறி]
    4. பாச்சில் கூற்றம் [லால்குடி]
    5. திருப்பிடவூர் நாடு [லால்குடி]
    6. வடவழி நாடு [லால்குடி]
    7. வெள்ளையூர்க் கண்டம் [லால்குடி]
    8. வெண்கோன்குடிக் காண்டம் [லால்குடி]
    - சோழ மண்டல சதகம்

http://beef.sabhlokcity.com/2013/07/beef-eating-in-the-ancient-tamizhagam/

அகநானூறு 129, குடவாயில் கீரத்தனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

"https://ta.wikipedia.org/w/index.php?title=மழவர்&oldid=4097180" இலிருந்து மீள்விக்கப்பட்டது