கரூர் மாவட்டம்

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம்
கரூர்
மாவட்டம்

கரூர் அருகே உள்ள அமராவதி ஆற்றுப் படுகையின் ஒரு பகுதி

கரூர் மாவட்டம்: அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் கரூர்
பகுதி கொங்கு நாடு
ஆட்சியர்
மருத்துவர். த. பிரபுசங்கர்,
இ.ஆ.ப.
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

திரு. ப. சுந்தரவடிவேல்
இ.கா.ப.
மாநகராட்சிகள் 1
நகராட்சிகள் 3
வருவாய் கோட்டங்கள் 2
வட்டங்கள் 7
பேரூராட்சிகள் 11
ஊராட்சி ஒன்றியங்கள் 8
ஊராட்சிகள் 157
வருவாய் கிராமங்கள் 203
சட்டமன்றத் தொகுதிகள் 4
மக்களவைத் தொகுதிகள் 2
பரப்பளவு 2904 ச.கி.மீ.
மக்கள் தொகை
10,64,493 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இ.சீ.நே.
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
639 xxx, 621 xxx,
638 xxx
தொலைபேசிக்
குறியீடு

+91 (0) 4324, +91 (0) 4323,
+91 (0) 4320
வாகனப் பதிவு
TN 47
பாலின விகிதம்
1015 /
கல்வியறிவு
75.60%
இணையதளம் karur

கரூர் மாவட்டம் (Karur district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கரூர் ஆகும். இந்த மாவட்டம் 2,904 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இது அமராவதி மற்றும் காவிரி ஆகிய இரண்டு நதிகள் பாய்ந்தோடும் மாவட்டம் ஆகும்.

வரலாறு

தொகு

கரூர் சேர சோழ மற்றும் நாயக்கர்களால் ஆளப்பட்டு இறுதியில் ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டது. தங்க ஆபரணங்களை வடிவமைக்கும் பணி இங்கு பழங்காலம் தொட்டே நடைபெற்றுள்ளது. மேலும் கரூர் பல்வேறு தமிழ் அரசர்களின் போர்களமாகவும் இருந்துள்ளது. இது கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது வளம்மிக்க நாடாக விளங்கிற்று. மேலும் இதன் சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்பம் மிகவும் இதமானதாகவும் உள்ளது. ஏறத்தாழ 2000 ஆண்டுக்கும் பழமையான வரலாறு கொண்டது கரூர் தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகும். இந்து மத நம்பிக்கைப்படி இறைவன் பிரம்மா தனது படைப்பு தொழிலை இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. அதன் பொருட்டே இவ்வூர் கருவூர் என அழைக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர், சேரர்களின் தலைநகராக விளங்கியிருக்கிறது. சோழ, பாண்டிய பேரரசுகள் இந்த ஊரை கைப்பற்றும் நோக்கில் பலமுறை போர் தொடுத்துள்ளனர். பண்டைய காலங்களில் ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்புடன் கருவூர் இருந்திருக்கிறது. தங்கநகைகள் ஏற்றுமதியில் கருவூர் ஈடுபட்டிருந்திருக்கிறது என்பதற்கு பல்வேறு தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே ஆதாரம். மேலும் கருவூரை 150 கிரேக்க புலவர்கள் தங்கள் பாடல்களில் ”கோருவூரா” என்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சேரர்களால் தலைநகரான வஞ்சி மாநகர் பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டு, பின்நாளில் பல்லவ அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. சோழர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலங்கள் கருவூர் இருந்துள்ளது. நாயக்கர்களாலும் பிற்பாடு திப்பு சுல்தான் ஆட்சியின் கீழும் கருவூர் இருந்துள்ளது. 1793ல் கரூர் கோட்டையை அழித்து ஆங்கிலேயர்கள் கரூரைக் கைப்பற்றியிருக்கின்றனர்.

ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது கரூர் தாலுகா, 1910 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

பல்வேறு ஆழ்வார்களாலும், சங்கப்புலவர்களாலும் பாடப்பெற்ற தலமாகவும் கரூர் விளங்குகிறது. சிலப்பதிகாரத்தில் கருவூர் பற்றிய வரலாற்று தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கரூர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் அழைக்கப்படுகிறது.[1]

 
கரூர் பசுபதீசுவரர் ஆலயம்

கரூர் மாவட்டத்தின் உருவாக்கம்

தொகு

நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

கரூர், குளித்தலை மற்றும் மணப்பாறை தாலுகாக்களை இணைத்து கரூர் மாவட்டம் அரசாணை எண் 913/1995ன்படி உருவாக்கப்பட்டது. மணப்பாறை தாலுகா திருச்சியுடன் இணைக்கப்பட்டு, முசிறி தாலுகாவை கரூர் மாவட்டத்துடன் இணைத்தனர். பின்னர் முசிறி தாலுகாவும் திருச்சி மாவட்டத்துடன் இணைந்தது.[2]

மாவட்ட வருவாய் நிர்வாகம்

தொகு

கரூர் மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களும், 7 வருவாய் வட்டங்களும், 20 உள்வட்டங்களும், 203 வருவாய் கிராமங்களும் கொண்டது.[3]

வருவாய் கோட்டங்கள்

தொகு
  • கரூர்
  • குளித்தலை

வருவாய் வட்டங்கள்

தொகு

உள்ளாட்சி நிர்வாகம்

தொகு

கரூர் மாவட்டம் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகளையும், 8 பேரூராட்சிகளையும் கொண்டது.[6]

மாநகராட்சிகள்

தொகு

பேரூராட்சிகள்

தொகு

ஊராட்சி நிர்வாகம்

தொகு

இம்மாவட்டம் 8 ஊராட்சி ஒன்றியங்களையும், 157 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.[7][8]

ஊராட்சி ஒன்றியங்கள் 8

தொகு

மக்கள்தொகை பரம்பல்

தொகு
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.ஆ. ±%
19014,08,424—    
19114,43,204+0.82%
19214,61,471+0.40%
19314,64,590+0.07%
19415,24,076+1.21%
19515,99,066+1.35%
19616,39,170+0.65%
19716,87,356+0.73%
19817,56,757+0.97%
19918,54,162+1.22%
20019,35,686+0.92%
201110,64,493+1.30%
சான்று:[9]

2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 1,064,493 ஆகும். அதில் ஆண்கள் 528,184 ஆகவும்; பெண்கள் 536,309 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 13.77% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1015 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 367 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 75.60% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 102,73 ஆகவுள்ளனர்.[10] நகர்புறங்களில் 40.82% மக்களும்; கிராமப்புறங்களில் 59.18% மக்களும் வாழ்கின்றனர்.

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 993,666 (93.35%) ஆகவும், கிறித்தவர்கள் 16,483 (1.55 %) ஆகவும், இசுலாமியர்கள் 53,292 (5.01%) ஆகவும், மற்றவர்கள் 0.10% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசப்படுகிறது.

அரசியல்

தொகு

மக்களவைத் தொகுதிகள்

தொகு

கரூர் மக்களவைத் தொகுதி மற்றும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகள் கரூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டது.

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

எல்லைகள்

தொகு

போக்குவரத்து

தொகு

சாலை

தொகு

கரூர் மாவட்டம், இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நெடுஞ்சாலை AH-43 ஆனது, இம்மாவட்டத்தின் வழியாக செல்கிறது. இம்மாவட்டத்தில் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன: தேசிய நெடுஞ்சாலை - 44 (காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் சாலை) ஸ்ரீநகர் - கன்னியாகுமரி மற்றும் தேசிய நெடுஞ்சாலை - 67 (நாகப்பட்டினம் - திருச்சி - கரூர் - கோயம்புத்தூர் - கூடலூர்), இது சென்னை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, ஓசூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, ஒட்டன்சத்திரம், தாராபுரம், பழனி, தஞ்சை, காரைக்குடி, கும்பகோணம், கொச்சி மற்றும் பாண்டிச்சேரி போன்ற பிற முக்கிய நகரங்களுடன் இணைகிறது. கரூர் பெங்களூருவுடன் அனைத்து போக்குவரத்து வழிகளிலும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது, இது பெங்களூரிலிருந்து 290 கி.மீ தொலைவில் உள்ளது.

தொடருந்து

தொகு
 
கரூர் சந்திப்பு தொடருந்து நிலையத்தின் முகப்புத் தோற்றம்

கரூர் சந்திப்பு தொடருந்து நிலையம் (நிலையக் குறியீடு - KRR) ஆனது மாநிலத்தின் முக்கியமான தொடருந்து சந்திப்பாகும், இது இந்திய தொடருந்து நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தொடருந்து நிலையமானது திருச்சிராப்பள்ளி மற்றும் திண்டுக்கல்லிருந்து வருகின்ற தொடருந்துகள் ஈரோடு மற்றும் ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு செல்லவும் மற்றும் சென்னையிலிருந்து அதே வழித்தடத்தில் திருச்சிராப்பள்ளி மற்றும் திண்டுக்கல் செல்கின்ற தொடருந்துகளுக்கு சந்திப்பாக அமைகின்றது. கரூர் வழியாக தினமும் 45-க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் பயணிகள் தொடருந்துகள் செல்கின்றது.

வானூர்தி

தொகு

திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையம் (85 கி.மீ), கோயம்புத்தூர் வானூர்தி நிலையம் (130 கி.மீ) மற்றும் மதுரை வானூர்தி நிலையம் (135 கி.மீ) ஆகியவை அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள் ஆகும்.

சுற்றுலா

தொகு

கரூர் பல வரலாற்று சிறப்புமிக்க கோயில்களை கொண்டுள்ளது. இது போர்களமாக விளங்கியதால் பல்வேறு மன்னர்களின் வீரத்தை பறைசாற்றும் சிலைகளை காணமுடிகிறது. சிறீ கல்யாண பசுபதீஸ்வரர், சிறீ கரூர் மாரியம்மன் கோயில், வெண்னை மலை சிறீ பாலதண்டாயுதபாணி கோயில், இலாலாப்பேட்டை ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ மாரியம்மன்,ஸ்ரீ மதுரைவீரன் கோவில்,ஆத்தூர் சோழியம்மன் கோயில், மகாதானபுரம் மகாலக்ஷ்மி அம்மன் கோயில், கிருஷ்ணராயபுரம் திருக்கண்மல்லேஸ்வரர் கோயில், குளித்தலை கடம்பர் கோயில், ஐயர் மலை சிவன் கோயில், லால்பேட் ஐயப்பன் கோயில், தோகைமலை முருகன் கோயில், வியாக்கரபுரீஸ்வரர் கோயில், புகழிமலை அறுபடை முருகன் கோயில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில், மண்மங்களம் புது காளியம்மன் கோயில் மற்றும் பல கோயில்கள்[11] இங்கு சிறந்த வழிபாட்டு தலங்களாக உள்ளன.[12]

அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்

தொகு
 
கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்

கரூர் நகரம் சங்க காலத்தில் சேரர்களின் தலைநகரமாகவும் புகழ் பெற்ற தொழில் மையமாகவும் விளங்கியது. குடிசைத் தொழில்களுக்கும் கைத்தறி நெசவுத் துணிகளுக்கும் புகழ்பெற்ற நகரமாக திகழும் இந்த நகரத்திற்கு பசுபதீஸ்வரர் கோயில் அடையாளச் சின்னமாக திகழ்கிறது. பசுபதீஸ்வரர் லிங்கம், பால் சுரக்கும் பசு மற்றும் இது போன்ற பல்வேறு சிற்பங்கள் இந்த கோவிலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

அருள்மிகு மாரியம்மன் கோயில்

தொகு

கரூர் மாவட்ட நகரப் பகுதியின் மைய்யத்தில் அமைந்துள்ள இக்கோயில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும் இங்கு அருள் மிகு மாரியம்மன் எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வைகாசி திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கிறது, இதில் சாதி சமய வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் பங்கேற்பதுடன், வழிபாட்டிற்காக ஒவ்வொரு பக்தா்களும் அமராவதி ஆற்றிலிருந்து புனித நீரை எடுத்து வந்து இந்த மகத்தான நிகழ்வில் பங்கேற்கின்றனா்.

அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில்

தொகு

தாந்தோணிமலை 5 கி.மீ. தொலைவில் உள்ளது. கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள தான்தோன்றிமலையின் சிறுகுன்றில் அருள்மிகு கல்யாண வேங்கடரமணர் பெருமாள் எழுந்தருளியுள்ளார். இந்த கோயில் கரூா் மாவட்டத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் தென் திருப்பதி என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறது.

வெண்ணெய்மலை

தொகு

கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள வெண்ணெய்மலை கோயிலில் அருள்மிகு பாலசுப்பிரமணியர் எழுந்தருளியுள்ளார். இக்கோயில் கரூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் சேலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இறை நேசர்களாகிய அருணகிரிநாதர் மற்றும் அவ்வையார் இக்கோயிலில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை போற்றி பாசுரங்கள் பல பாடியுள்ளனர்.

நெரூர்

தொகு

நெருர் அருள்மிகு சதாசிவ பிரேமேந்திராள் திருக்கோயில் கரூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் கரூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

புகழிமலை

தொகு

புகழிமலை கோயில் புகழூர் அருகில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் 17 கி.மீ, தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிறிய மலையின் மீது சுவாமி சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். இங்கு அமைந்துள்ள சமணர்படுக்கை மற்றும் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும். கரூர் மாவட்டத்தின் வட மேற்கு பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

அய்யர்மலை

தொகு

57 கி.மீ. தொலைவில், கரூர் மாவட்டத்தில் குளித்தலையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அய்யர்மலை அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோட்சவம் திருவிழா 15 நாட்கள் நடைபெறுகிறது மற்றும் சித்திரை திருவிழா, தைப்பூசத் திருவிழா, கார்த்திகை திருவிழா, பங்குனி உத்திரம் திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா ஆகியவை பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. மேலும், குளித்தலை தாலுகாவின் மையப்பகுதியில் அருள்மிகு கடம்பவனேஸ்வரர் கோயில், 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

திருமுக்கூடலூர்

தொகு

15 கி.மீ தொலைவில், திருமுக்கூடலூரில் அமைந்துள்ள அருள்மிகு அகஸ்த்தீசுவரர் திருக்கோவில் இந்து அறநிலையங்கள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. காவிரி, அமராவதி, மணிமுத்தாறு ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதியே திருமுக்கூடலூர் ஆகும். சோழ வம்சத்தைச் சார்ந்த முதலாம் இராஜேந்திர சோழனால் இக்கோயில் கட்டப்பட்டதாகவும் அகத்திய முனிவர் இங்குள்ள சிவனை வழிபட்டதாகவும் கருதப்படுகிறது.

திருக்காம்புலியூர் செல்லாண்டியம்மன் திருக்கோயில்

தொகு

கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் கிராமத்தில், 23 கி.மீ தொலைவில், இத்திருக்கோயில் செல்லாண்டியம்மன் வீற்றிருக்கிறார். இந்தவூர் மக்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள இந்து மதத்தை பின்பற்றும் கிராம மக்களுக்கும் ஒரு முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. இது கரூர் மாவட்டத்திலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் குளித்தலையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

அரசு அருங்காட்சியகம்

தொகு

அரசு அருங்காட்சியகம் கரூர் மாவட்டம் பழைய திண்டுக்கல் ரோட்டில் ஜவஹர் பஜாரில் அமைந்துள்ளது. இது மக்களின் பார்வைக்காக 2000 ஆண்டில் துவங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இங்கு வெண்கல சிலைகள், உலோக பொருட்கள், இசைக்கருவிகள், நாணயங்கள், பாறைகள் மற்றும் தாதுக்கள் உட்பட மாதிரிகள் பல உள்ளன. மேலும் படிமங்கள், தாவரவியல் மாதிரிகள், மெல்லுடலிகளின் ஓடுகள் மற்றும் பிற கடல் மாதிரிகள் ஆகியவை பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தில் சிறந்த விரிவுரைகள், வழிகாட்டி சேவைகள் மற்றும் பிற நிகழ்வுகளும் கல்வி தொடர்பாக செயல்படுத்தப்படுகின்றன.

பொன்னணியார் அணை

தொகு

கரூர் மாவட்டத்தில், 60 கி.மீ தொலைவில், கடவூர் மலைப்பகுதியில் உள்ள பூஞ்சோலை கிராமத்தின் அருகில் அமைந்துள்ள பொன்னணியார் அணைக்கட்டு சுற்றுலா தலமாகும். இந்த அணை செம்மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் சேமித்து வைக்கப்படும் நீர் அங்குள்ள பாசன நிலங்களின் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த அணைப் பகுதி பொதுப்பணித்துறையால் பாதுகாக்கப்படுகிறது.

மாயனூர் கதவணை

தொகு

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாயனூர் கதவணை சுற்றுலா பயணிகளைக் கவரும் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இது கரூர் மாவட்டத்திலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் குளித்தலையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

அம்மா பூங்கா

தொகு

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்காம்புலியூர் கிராமத்தில் அமைந்துள்ள அம்மா பூங்கா சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது. இது கரூர் மாவட்டத்திலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் குளித்தலையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும் காவிரி ஆற்றிற்கு அருகில் அமைந்துள்ளது.

ஆடிப்பெருக்கு விழா

தொகு

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி மற்றும் அமராவதி நதிக் கரையோரங்களில், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரி மற்றும் அமராவதி நதிகளை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். நதிக்கரைகளில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து, படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. கரூர் மாவட்ட அதிகாரபூர்வ அரசு வலைப்பக்கம்
  2. தமிழக அரசு வலைப்பக்கம்
  3. Karur District Revenue Administration
  4. Manmangalam taluk carved out of Karur Taluk
  5. [1] Reference about Pugalur Taluk In Karur District Official Website
  6. Karur District Local Bodies Administration
  7. Karur District Development Administration
  8. "கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". Archived from the original on 2015-07-08. பார்க்கப்பட்ட நாள் 2018-09-16.
  9. Decadal Variation In Population Since 1901
  10. Karur District : Census 2011 data
  11. https://karur.nic.in/tourism/places-of-interest/
  12. http://www.tn.gov.in/district_details/28326

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரூர்_மாவட்டம்&oldid=4024248" இலிருந்து மீள்விக்கப்பட்டது