கசன் கானரசு
கசன் கானரசு என்பது நடுக்கால தாதர் துருக்கிய அரசு ஆகும். இது 1438 முதல் 1552 வரை முந்தைய வோல்கா பல்கேரியா அரசின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இந்த கானரசானது சமகால தாதர்ஸ்தான், மரி எல், சுவாஷியா, மோர்டோவியா மற்றும், உட்முர்டியா மற்றும் பஷ்கோர்டோஸ்டான் ஆகியவற்றின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் கசன் ஆகும். தங்க நாடோடிக் கூட்டத்தில் இருந்து தோன்றிய அரசுகளில் இதுவும் ஒன்றாகும். உருசியாவின் சாராட்சியால் வெல்லப்பட்டபோது இது முடிவுக்கு வந்தது.
வரலாறு
தொகுபதினைந்தாம் நூற்றாண்டில் வோல்கா பல்கேரியாவின் முன்னாள் பகுதிகளானவை (கசன் உளூஸ் அல்லது கசன் டுச்சி) சிதைவடைந்து கொண்டிருந்த தங்க நாடோடிக் கூட்டத்திடம் இருந்து பகுதி அளவு சுதந்திரத்தை பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சமஸ்தானமானது சுயாட்சி உடையதாக இருந்தது. இதன் ஆட்சியாளர்கள் போல்கர் என்று அழைக்கப்பட்ட பல்கேரிய அரசமரபில் இருந்து வந்திருந்தனர். இந்த அரசின் ஆரம்ப நிலைமை எப்படி இருப்பினும் இதனை தோற்றுவித்தவர் உலுக் முகமது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. உலுக் முகமது கான் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டு கானரசின் அரியணை ஏறினார். 1437 அல்லது 1438 இல் உள்ளூர் உயர்குடியினர் இவருக்கு சில உதவிகளை அரியணை ஏறுவதற்கு செய்தனர். 1445 இல் போல்கர் அரசமரபில் இருந்து முகமதுவுக்கு ஆட்சி செய்யும் அதிகார மாற்றமானது முகமதுவின் மகன் மக்ஸ்முத்தால் இறுதி செய்யப்பட்டது என கூறப்படுகிறது.
இந்த கானரசின் வரலாறு முழுவதுமே உள்நாட்டுக் கலகங்கள் மற்றும் அரியணைக்கான போராட்டங்கள் நிறைந்ததாக இருந்துள்ளது. 115 வருடங்களில் 19 முறை கான்கள் மாற்றப்பட்டனர். மொத்தமாக 15 கான்கள் ஆட்சி செய்துள்ளனர். அதில் ஒரு சிலர் பலமுறை அரியணை ஏறி உள்ளனர். கான்கள் பெரும்பாலும் செங்கிஸ்கானின் வழித்தோன்றல்களில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிலநேரங்களில் குடிமகன்களே கான்களை தேர்ந்தெடுத்தனர்.
இந்தக் கானரசின் வரலாற்றைப் பற்றி விவாதிக்கும்போது போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உருசிய படையெடுப்பால் இந்த கானரசை பற்றிய ஒரு நூல் கூட எஞ்சாமல் போனது ஒரு பக்கம் இருந்தாலும் ஆரம்ப உருசிய காலனி நிர்வாக நூல்கள் கூட இல்லாமல் போய்விட்டன.[1]
ஆரம்ப வரலாறு
தொகுமுகமது மற்றும் அவரது மகன் மக்ஸ்முத்தின் ஆட்சி காலத்தின் போது கசன் படைகள் மாஸ்கோ மற்றும் அதன் ஆட்சிக்குட்பட்ட நிலங்களை பலமுறை சூறையாடின. தனது உறவினர்களுக்கு எதிராக பெரும் நிலப்பிரபுத்துவ போர்களை நடத்திய மாஸ்கோவின் இரண்டாம் வாசிலி சுஸ்டாலுக்கு அருகில் ஒரு யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டார். கசன் கானுக்கு மீட்பு தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
ஜூலை 1487 இல் மாஸ்கோவின் பெரிய டியூக் மூன்றாம் இவான் கசனை ஆக்கிரமித்தார். மோக்ஸம்மதமின் என்கிற ஒரு கைப்பாவை தலைவரை கசன் கானரசின் அரியணையில் உட்கார வைத்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு கசன் கானரசானது மாஸ்கோவின் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியானது. கசன் கானரசின் நிலப்பகுதி முழுவதும் சுதந்திரமாக வணிகம் செய்ய உருசிய வணிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. உதுமானியப் பேரரசு மற்றும் கிரிமிய கானரசு ஆகியவற்றுடன் கசன் கானரசை இணைப்பதை குறிக்கோளாகக் கொண்ட ஆதரவாளர்கள் பொதுமக்களின் கஷ்டங்களை பயன்படுத்தி கிளர்ச்சிகளை (1496, 1500 மற்றும் 1505 இல்) ஏற்படுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்களுக்கு சரியான பலன் கிடைக்கவில்லை.
உசாத்துணை
தொகு- ↑ Rywkin, Michael (1976). "The Prikaz of the Kazan Court: First Russian Colonial Office". Canadian Slavonic Papers 18 (3): 293–300.
- Viacheslav Shpakovsky, David Nicolle, Gerry Embleton, Armies of the Volga Bulgars & Khanate of Kazan, 9th–16th centuries, Osprey Men-at-Arms 491 (2013).
- Azade-Ayshe Rorlich, Origins of Volga Tatars in: The Volga Tatars, a Profile in National Resilience (1986).
- Muhammad Murad Ramzi (محمد مراد الرمزي) (1908), Talfīq al-akhbār wa-talfīḥ al-āthār fī waqāʼiʻ Qazān wa-Bulghār wa-mulūk al-Tātār (تلفيق الاخبار وتلقيح الآثار في وقائع قزان وبلغار وملوك التتار), First edition (الطبعة الاولي) Volume 1 (المجلد الاول) Printed at the Al-Karīmiyyah and Al-Ḥussayniyyah printing shop in the town of "Orenburg" upon committed expenses (طبع بالمطبعة الكريمية والحسينية ببلدة "اورنبورغ" على مصاريف ملتزمه).