கடல் எல்லை (Maritime boundary) என்பது கடற்பரப்பின் மீது நிலவியல் மற்றும் அரசியல் சார்ந்து மனிதனால் உருவாக்கப்பட்ட இரு நாடுகளுக்கிடையேயான பிரிவாகும். கடல் எல்லை ஒரு நாட்டின் கடல்சார் உயிர் மற்றும் கனிம வளங்களின் மீதும், கடற்பரப்பின் மீதான சட்டங்களுக்கும் உரிய அந்நாட்டின் உரிமையை நிலை நாட்டுகிறது. கடல் எல்லை ஆனது ஒரு நாட்டின் ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு, அண்மை கடற்பரப்பு, பொருளாதார தனியுரிமை பகுதி மற்றும் கண்டத் திட்டு என்று நான்கு பகுதிகளாக வரையறுக்கப்படுகிறது.

ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு தொகு

கடல் சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் மாநாடு (1982) இல் வரையறையின் படி, ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு (territorial waters) என்பது ஒரு நாட்டின் கடற்கரை அடித்தள மட்டத்திலிருந்து 12 கடல் மைல் (அதாவது 22.2 கிமீ, 13.8 மைல்) வரை உள்ள கடற்பரப்பாகும். ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு என்பது ஒரு நாட்டின் இறையாண்மை எல்லை ஆகும். மேலும் ஒரு நாட்டின் இறைமை ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு உள்ளடக்கிய வான்பகுதி மற்றும் கடற்படுகைக்கும் பொருந்தும்.

அண்மை கடற்பரப்பு தொகு

அண்மை கடற்பரப்பு (contiguous zone) என்பது ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பின் வெளிப்புறத்திலிருந்து அடுத்த 12 கடல் மைல் (அதாவது ஒரு நாட்டின் கடற்கரை அடித்தள மட்டத்திலிருந்து 24 கடல் மைல்) உள்ள கடல் நீர்ப்பரப்பாகும். அண்மை கடற்பரப்பில் ஒரு நாடு அதன் சுங்க, நிதி வரவு, குடியமர்தல் மற்றும் சுகாதார சட்ட மற்றும் விதிமுறை மீறல்களை தடுக்கவும், கண்காணிக்கும் வரையறை பெற்றுள்ளது.

பொருளாதார தனியுரிமை பகுதி தொகு

பொருளாதார தனியுரிமை பகுதி (Exclusive Economic Zone - EEZ) ஒரு நாட்டின் கடற்கரை அடித்தள மட்டத்திலிருந்து அதிகபட்சமாக 200 கடல் மைல் தூரம் வரை பரவியுள்ள கடற்பரப்பாகும். இஃது அண்மை கடற்பரப்பையும் உள்ளடக்கியுள்ளது. இப்பகுதியின் மீன் வளம், கனிம வளம், பெட்ரோலிய ஆய்வு போன்ற அனைத்து வளங்கள் மீதான உரிமைகளையும் மற்றும் இவ்வளங்கள் சார்ந்த கழிவு மேலாண்மையையும் அந்த நாடே கட்டுப்படுத்துகிறது. எனினும் இப்பகுதியின் வழியாக வேறு நாட்டின் கப்பல்கள் பயணிக்கவோ அல்லது ஐக்கிய நாடுகளின் விதிகளுக்குட்பட்டு இக்கடற்பரப்பில் வேறு நாடுகள் கழிவுகளை கொட்டாவோ தடை செய்யும் அதிகாரம் இல்லை.

மேலும் படிக்க தொகு

  • Donaldson, John and Alison Williams. "Understanding Maritime Jurisdictional Disputes: The East China Sea and Beyond," Journal of International Affairs, Vol. 59, No. 1.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_எல்லை&oldid=3079689" இலிருந்து மீள்விக்கப்பட்டது