கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் (சிறுகதை)
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை. புதுமைப் பித்தனின் சிறுகதைகள் பொழுதுபோக்குப் புனைவு வகையைச் சேர்ந்தவை அல்ல. அவை ஒவ்வொன்றும் சமுதாயப் பிரச்சனைகளை முன்னிறுத்தி அவரது நகைச்சுவையானச் சாடலுடன் அமைந்தவை. இச்சிறுகதையும் ’கந்தசாமிப் பிள்ளை’ என்ற தனி மனிதரோடு, கடவுள் ஒருநாள் தங்கி வாழ்ந்த நிகழ்வுகளைப் புனைந்து எழுதப்பட்டுள்ளது.
கதைச் சுருக்கம்
தொகுமே. க. ரா. கந்தசாமிப் பிள்ளை அவர்களின் முன் ஒருநாள் கடவுள் (சிவன்) சாதாரண மனிதராகத் தோன்றி, பூலோகத்தைப் பார்க்க வந்ததாகவும் கந்தசாமிப் பிள்ளையின் விருந்தாளியாகச் சிலநாள் தங்கப் போவதாகவும் கூறுகிறார். ஒரு சாதாரண மனிதனாகத் தான் தன்னோடு இருக்க வேண்டும், கடவுள் என்பதைக் காட்டக்கூடாது என்ற நிபந்தனையுடன் கந்தசாமிப் பிள்ளையும் ஒத்துக் கொண்டு தன் வீட்டுக்குக் கடவுளை அழைத்துச் செல்கிறார்.
வீட்டில் தன் மனைவியிடம் தனது பெரியப்பா எனக் கடவுளை அறிமுகப்படுத்தி வைக்கிறார். கந்தசாமிப் பிள்ளையின் மகள் வள்ளி, தாத்தா, தாத்தாவென பாசமாகக் கடவுளுடன் ஒட்டிக் கொள்கிறாள். அவ்வப்போது கடவுள் தனது சுயநிலைக் காட்டும்போது கந்தசாமிப் பிள்ளை சமயத்தில் தடுத்து விடுகிறார். கடவுளுக்குப் பூலோகத்தில் பிழைப்பு நடத்த சில ஆலோசனைகளைத் தருகிறார். இறுதியில் தானும் தேவியும் சேர்ந்து நடனமாடிப் பிழைக்க ஒத்துக் கொண்ட கடவுளைத் தனக்குத் தெரிந்த நிருத்திய கலாமண்டலி பிரெசிடெண்ட் திவான் பகதூர் பிரகதீசுவர சாஸ்திரிகளிடம் கந்தசாமிப் பிள்ளை அழைத்துச் செல்கிறார். அங்கு திவான் பகதூர், சபைக்கு தேவியின் கறுப்பு நிறம் எடுபடாது என்றும் அவர்களது நடனம் தெருக்கூத்தென்றும் கூறிவிடுகிறார். பூலோகத்தில் தன்னால் வாழ்வது சாத்தியமில்லை என்றுணர்ந்த கடவுள் மறைந்து விடுகிறார். கந்தசாமிப் பிள்ளை நடத்தும் மருத்துவ சஞ்சிகைக்கு அவர் அளித்த ஆயுள் சந்தா 25 ரூபாய் மட்டும் அங்கு இருக்கிறது.
குறிப்பிடத்தக்கப் பகுதிகள்
தொகுஇக்கதையில் நடுத்தர மக்களின் வாழ்வின் சாதுர்யமான போராட்டங்களும் கடவுளின் நிலைப்பாடும் கேலியான நகைச்சுவையுடன் சொல்லப்பட்டாலும் சமுதாய நிலை குறித்த கருத்துக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
கதையில் சில பகுதிகள்:
கடவுளிடம் கந்தசாமிப் பிள்ளையின் நிபந்தனை
தொகு“ | ஓய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்ட செல்லாது. நீர் வரத்தைக் கொடுத்துவிட்டு உம்பாட்டுக்குப் போவீர். இன்னொரு தெய்வம் வரும், தலையைக் கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தைத் தேடிக் கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல. ஏதோ பூலோகத்தைப் பார்க்க வந்தீர்; நம்முடைய அதிதியாக இருக்க ஆசைப்பட்டீர்; அதற்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. என்னுடன் பழக வேண்டுமானால் மனுஷனைப் போல, என்னைப்போல பழக வேண்டும்; மனுஷ அத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்; நான் முந்திச் சொன்னத மறக்காமல், வீட்டுக்குள் வாரும். | ” |
அருங்காட்சியகம்
தொகுகுழந்தை வள்ளியுடன் கடவுள் செத்த காலேஜ், உயிர்காலேஜ் எனச் சுற்றிவிட்டு வந்த பின் கடவுளுக்கும் கந்தசாமிப் பிள்ளைக்கும் நடந்த உரையாடல்:
“ | கடுகடுப்புடன் கடவுள்: எதற்காக ஓய், ஒரு கட்டிடத்தைக் கட்டி, எலும்பையும் தோலையும் பொதிந்து பொதிந்து வைத்திருக்கிறது? என்னைக் கேலிசெய்ய வேண்டும் என்ற நினைப்போ? | ” |
“ | கந்தசாமி: அவ்வளவு ஞானத்தோட இங்க யாரும் செய்துவிடுவார்களா? அபூர்வத்தைக் காட்டுவதாக நினைத்துக் கொண்டு அப்படி எல்லாம் வைத்திருக்கிறார்கள். | ” |
தேவியின் கருமை நிறம்
தொகுகடவுளையும் தேவியையும் நிருத்திய கமண்டலியின் பிரெசிடெண்ட் திவான் பகதூரிடம் நடனநிகழ்ச்சிக்கு வாய்ப்புக் கேட்டு கந்தசாமிப் பிள்ளை அழைத்துச் சென்றபோது அந்த பிரெசிடெண்ட் தேவியின் கருப்பு நிறம் குறித்துச் சொன்னது:
“ | திவான் பகதூர்: அம்மா, ரொம்பக் கறுப்பா இருக்காங்களே, சதசில் சோபிக்காதே என்றுதான் யோசிக்கிறேன்... அம்மா, கோபிச்சுக்கக் கூடாது. ஒன்று சொல்கிறேன் கேளுங்க; கலைக்கும் கறுப்புக்கும் கானாவுக்கு மேல சம்பந்தமே கிடையாது. நானும் முப்பது வருஷமா இந்த கமண்டலியிலே பிரெசிடெண்டா இருந்து வருகிறேன். சபைக்கு வந்தவர்கள் எல்லாருக்கும் கண்கள் தான் கறுத்திருக்கும். | ” |
ஆதாரங்கள்
தொகு- புதுமைப்பித்தன் சிறுகதைகள்- தொகுப்பு ஆசிரியர் -மீ. ப. சோமசுந்தரம்.
- புதுமைப்பித்தன் 103 சிறுகதைகள்- தொகுப்பு ஆசிரியர் -எம். வேதசகாயகுமார்.