கடவுள் மாமுனிவர்

கடவுள் மாமுனிவர் [1] 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்பாவலர்களில் ஒருவர். திருவாதவூரார் புராணம் என்னும் நூலை இயற்றியவர்.

நம்பியாண்டார் நம்பி சிவனடியார்களை 63 பேர் எனத் தொகுத்துக் காட்டினார். பெரியபுராணம் இந்த 63 பேர்களின் வரலாற்றை விளக்கிப் பாடியது. இவற்றில் மாணிக்க வாசகர் வரலாறு சேர்க்கப்படவில்லை. அப்பர் தேவாரத்தில் "நந்தீசனைக் குடமுழா வாசகனாக் கொண்டார்" எனவும் "நரியை குதிரையாக்கி" எனவும் பாடியதால் திருநந்தி தேவரே மாணிக்கவாசகராய் தோன்றினார் என்பது உறுதியாகிறது. சிவபெருமானின் வாகனமான நந்தி, அவர் மனைவியான உமையாள், பிள்ளைகளான கணபதி, முருகர் ஆகியோர் அவரை வணங்கிணும் அவர்களை நாயன்மார்களாக சேர்க்கும் வழக்கம் சைவத்தில் இல்லை. எனவே இந்தக் குறையைப் போக்கக் கடவுள் மாமுனிவர் மாணிக்கவாசகர் பற்றிய செய்திகளைத் தொகுத்துத் திருவாதவூரார் புராணம் என்னும் நூலைப் பாடினார்.

நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டத் தொகை – 10 ஆம் நூற்றாண்டு
பெரியபுராணம் – 12 ஆம் நூற்றாண்டு
திருவாதவூரார் – 9 ஆம் நூற்றாண்டு

உண்மை இப்படி இருக்கையில் திருவாதவூராராகிய மாணிக்கவாசகர் அவரது காலத்துக்குப் பின்னர் தோன்றிய நூல்களில் சிவனடியாராகக் காட்டப்படாமல் போனது வியப்பாக உள்ளது.

கடவுள் மாமுனிவர் காலம் தொகு

11 ஆம் நூற்றாண்டு கல்லாடம் மதுரைச் சொக்கநாதரின் 30 திருவிளையாடல்களைக் கூறுகிறது. 13 ஆம் நூற்றாண்டு நூல் பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடிய பழைய திருவிளையாடல் புராணம் நரி குதிரையானது, குதிரை நரியானது பற்றிய கதைகளைக் கூறுகிறது. எனவே நரி பரியான கதையைக் கூறும் ஆசிரியர் 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர். உமாபதி சிவாசாரியார் 1300-1325 காலப்பகுதியில் வாழ்ந்தவர். இவரைக் குறிப்பிடும் பாடல் திருவாதவூர் புராணத்தில் உள்ளது. எனவே கடவுள் மாமுனிவர் காலம் 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியது. இன்னும் இவை போன்ற பல சான்றுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவர் காலம் 15 ஆம் நூற்றாண்டு என ஆகிறது.

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 104. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடவுள்_மாமுனிவர்&oldid=3825120" இலிருந்து மீள்விக்கப்பட்டது