கடாரம் (புதினம்)

கோப்பரகேசரி இராஜேந்திரச்சோழன், பொ.உ. 1025 அலை கடல் கடந்து கடாரம், மாபப்பாளம், மானக்கவாரம், தலைத்தக்கோலம், இலாமுரிதேசம், இலங்காசோகம், மாயிருடிங்கம், மாதமாலிங்கம், வளைப்பந்தூரு, பண்ணை, மலையூர், ஸ்ரீவிஜயம், மேவிலிம்பாங்கம் முதலிய பல தேசங்கள் மீது படையெடுத்ததாகவும், சங்க்ரம விஜயோத்துங்கவர்மன் என்ற கடாரத்து அரசனை வென்றதாகவும் அவனது விரிவான மெய்கீர்த்தியும், திருவாலங்காட்டுப் பட்டயமும் எடுத்துக் கூறுகின்றன.

கடாரம்
கடாரம் நாவல் அட்டை படம்
நூலாசிரியர்மாயா
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாற்றுப் புதினம்
வெளியீட்டாளர்வானதி பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2013 (முதல் பதிப்பு)

இராஜேந்திரச்சோழனின் இந்தப் படையெடுப்பை மையக் கருவாகக்கொண்டு எழுத்தாளர் மாயா அவர்கள் உருவாக்கிய சரித்திரப் புதினமே கடாரம் ஆகும்.

கதை சுருக்கம்

தொகு

இராஜேந்திரனின் தந்தையான இராஜராஜசோழன், அவனது காலத்தில் கடாரத்து மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க நாகையில் விகாரையொன்று எழுப்ப ஆனைமங்கலம் என்ற சிற்றூரை மானியமாகத் தந்த விவரம் ஆனைமங்கலம் செப்பேட்டின் மூலம் அறியப்படும் சேதி. படையெடுப்பு நடந்த காலகட்டத்துக்கு சில காலம் முன்பு வரை நட்புறவில் இருந்த இரு தேசங்கள் திடீரென்று வைரிகளானது ஏன்?

கடல் கடந்து இராஜேந்திரன் படையெடுப்பு நடத்த சோழதேசத்தை விரிவு படுத்தும் நோக்கம் மட்டும் தான் காரணமா?

இத்தகைய கேள்விகள் சரித்திரம் விட்டுச்சென்ற புதிர்கள். இந்தப்புதிருக்கான விடை தேடுவதே இந்தப் புதினத்தின் நோக்கம். இராஜேந்திரன் படையெடுத்ததாகச் சொல்லும் தேசங்கள் யாவை, அவற்றின் அக்காலத்தைய அரசு எப்படி இருந்திருக்கக்கூடும், அக்காலகட்டத்தில் கடாரத்தைச் சார்ந்தும் - வைரியாகக்கொண்டும் இருந்த பிற தேசங்கள் எவை போன்றவற்றை ஆராய்ந்தும், படையெடுப்புக்கான காரணத்தைத் தேடும் முயற்சியாகவும் இந்தப்புதினம் அமைந்துள்ளது.

இராஜேந்திரச்சோழனின் மெய்கீர்த்தியில் வரும்

“அலைகடல் நடுவே பல கலம் செலுத்தி” என்ற வாசகத்தை விவரித்து கடாரங்கொண்டான் என்ற இராஜேந்திரனின் பெயர்களுள் ஒன்றுக்குக் காரணக்கதை சொல்லும் இப்புதினம் இரு தேசங்களுக்கு மத்தியில் போர் மூளப் பெரும் காரணமாக விளங்கும் முக்கியமானதோர் கூற்றையும் வெளிக்கொணர தலைப்படுகிறது.

தற்போதைய கம்போடியா முதல் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, சீனம் என்று விரியும் கதையின் களம் அதற்கான நேரடிக் களஆய்வை பின்புலமாகக் கொண்டு சிவக்கிரக ஆலயம் (candi prambanan), prasat preah vihar, lembah bujang போன்ற சரித்திரத்தளங்களை வாசகர்களின் மனக்கண்ணில் நிறுத்துகிறது. அக்காலத்தைய வாணிபச்சூழலை விளக்குவதோடு நானாதேசி வணிகர்கள் போன்ற தமிழகத்து வணிகக்குழுக்கள் கடல்கடந்தும் சாதித்த பெருமைகள் பலவற்றையும் விவரிக்கிறது.

கம்போடிய மன்னன் சூரியவர்மன், கடாரத்தரையன் சங்கரமவிஜயோத்துங்கன், சாவகப்புகழ் ஏர்லங்கன், இராஜேந்திரச்சோழன் அவர் தம் மக்கள், தளபதிகள், நமது பொன்னியின் செல்வன் புகழ் வந்தியத்தேவன் போன்ற சரித்திர நாயகர்கள் இக்கதையில் வலம் வரக்காணலாம்.


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடாரம்_(புதினம்)&oldid=4164240" இலிருந்து மீள்விக்கப்பட்டது