முதன்மை பட்டியைத் திறக்கவும்

கட்டற்ற வணிக வலயம் அல்லது சுதந்திர வர்த்தக வலயம் என்பது ஒரு நாட்டில், தீர்வைகள், கோட்டாக்கள் முதலியவை இல்லாததாகவும், அதிகார நடைமுறைச் சிக்கல்கள் குறைவானதாகவும் இருக்கும்படி குறித்து ஒதுக்கப்பட்ட ஒரு பகுதியாகும். இத்தகைய ஒழுங்குகள் அங்கே வணிகச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக அவர்களைக் கவர்வதற்கான வழிமுறைகளாகும். கட்டற்ற வணிக வலயம் என்பதை மூலப்பொருட்களையும், கூறுகளையும் இறக்குமதி செய்து, உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்ற உழைப்புச் செறிவுள்ள உற்பத்தி மையங்கள் என வரையறுக்கலாம்.

பெரும்பாலான கட்டற்ற வணிக வலயங்கள் வளர்ந்துவரும் நாடுகளிலேயே அமைந்துள்ளன. இவை, அந் நாடுகளின் வழக்கமான வணிகத் தடைகள் நடைமுறையில் இல்லாததும், அங்கே வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களைக் கவர ஊக்கச் சலுகைகளை வழங்குவதுமான சிறப்பு வலயங்களாக இருக்கின்றன. அதிகார நடைமுறைகளை இலகுவாக்கும் பொருட்டு இவ் வலயங்கள், தனியான நிர்வாக அமைப்புக்களைக் கொண்டிருப்பது வழக்கம். இத்தகைய வலயங்கள் பொதுவாக துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றுக்கு அருகிலேயே அமைகின்றன. இவற்றை குறிப்பிட்ட நாட்டின் வளர்ச்சி குறைந்த பகுதிகளில் அமைப்பதும் உண்டு. மக்களைக் கவர்ந்திழுத்து அப்பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் நோக்கிலேயே இவ்வாறான அமைவிடங்கள் தெரிவு செய்யப்படுகின்றன. பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களே இவ் வலயங்களில் தொழிற்சாலைகளை நிறுவிப் பொருட்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.

2002 ஆம் ஆண்டில், 116 நாடுகளிலுள்ள, சுமார் 3000 கட்டற்ற வணிக வலயங்களில் அமைந்த, உடுபுடவைகள், காலணிகள், மின்னணுச் சாதனங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் 430 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். கட்டற்ற வணிக வலயங்களின் முக்கிய நோக்கம், வெளிநாட்டு நாணயமாற்றுச் சம்பாத்தியத்தை மேம்படுத்துவதும், ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட தொழில்களை வளர்ப்பதும், உள்நாட்டவருக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதும் ஆகும்.

கட்டற்ற வணிக வலயங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டற்ற_வணிக_வலயம்&oldid=1685914" இருந்து மீள்விக்கப்பட்டது