தன் கணத்தாக்கம்
கணத்தாக்கு எண் (Specific impulse, சுருக்கமாக Isp) என்பது ஏவூர்திப் பொறி மற்றும் தாரைப் பொறி ஆகியவற்றின் செயல்திறனைக் குறிக்க உதவும் ஒரு எண் ஆகும். ஒரு கண நேரத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளுக்கு எவ்வளவு விசையைத் தருகிறது என்பதைக் குறிக்கிறது.[1] பயன்படுத்தப்பட்ட எரிபொருளின் அளவு நிறையில் (எ-டு: கிலோகிராம்) கொடுக்கப்பட்டால், கணத்தாக்கு எண் திசைவேகத்தின் அலகுகளைக் கொண்டிருக்கும். பயன்படுத்தப்பட்ட எரிபொருளின் அளவு எடையில் (எ-டு: நியூட்டன்) கொடுக்கப்பட்டால், கணத்தாக்கு எண் காலத்தின் அலகைக் கொண்டிருக்கும் (நொடிகள்). இருவகைப்பட்ட கணத்தாக்கு எண்களுக்கும் இடையிலான மாற்று-மாறிலி திட்ட புவியீர்ப்பு முடுக்கம் (g) ஆகும்.[2] கணத்தாக்கு எண் அதிகமாக இருப்பின், குறிப்பிட்ட உந்துவிசையைப் பெறுவதற்குத் தேவையான எரிபொருள் பாய்வு வீதம் குறைவாக இருக்கும்.
நடைமுறை வெளியேற்றுத் திசைவேகம் (actual exhaust velocity) என்பது வாகனத்தை விட்டு வெளியேறும் தாரையின் திசைவேகத்தின் சராசரி ஆகும். செயலுறு வெளியேற்றுத் திசைவேகம் (effective exhaust velocity) என்பது வெற்றிடத்தில் அதே அளவு உந்துவிசையை ஏற்படுத்தத் தேவையான வெளியேற்றுத் திசைவேகம் ஆகும். வெற்றிடத்தில் செயல்படும் கருத்தியல் ஏவூர்திப் பொறிக்கு அவ்விரண்டும் சமமாக இருக்கும். ஆனால், காற்றை முடுக்குவதன் மூலம் உந்துவிசையை உருவாக்கும் காற்றிழுப்பு தாரைப் பொறிகளுக்கு அவ்விரண்டு மதிப்புகளும் சமமானதாக இராது.
பொறிகளை ஒப்புநோக்குவதற்கு கணத்தாக்கு எண் மிகவும் பயனுள்ள ஒன்றாகும், தானுந்துகளை லிட்டருக்கு இத்தனை கி.மீ. தருகிறது என்று ஒப்புநோக்குவது போல. அதிக கணத்தாக்கு எண் கொண்டிருக்கும் உந்துகைத் தொகுதியானது திறம்பட எரிபொருளைப் பயன்படுத்துவதாகக் கொள்ளப்படும்.[1][3] இதேபோன்று காற்றிழுப்பு தாரைப் பொறிகளின் செயல்திறனை அறிய தன் எரிபொருள் நுகர்வு (specific fuel consumption) எண் பயன்படுத்தப்படுகிறது. தன் எரிபொருள் நுகர்வானது கணத்தாக்கு எண் மற்றும் செயலுறு வெளியேற்றுத் திசைவேகம் ஆகியவற்றுக்கு எதிர்மறை விகிதசமம் கொண்டிருக்கும்.
மேலும் பார்க்க
தொகுகுறிப்புதவிகள்
தொகு- ↑ 1.0 1.1 "What is specific impulse?". Qualitative Reasoning Group. பார்க்கப்பட்ட நாள் 22 December 2009.
- ↑ Benson, Tom (11 July 2008). "Specific impulse". NASA. பார்க்கப்பட்ட நாள் 22 December 2009.
- ↑ Hutchinson, Lee (2013-04-14). "New F-1B rocket engine upgrades Apollo-era design with 1.8M lbs of thrust". ARS technica. http://arstechnica.com/science/2013/04/new-f-1b-rocket-engine-upgrades-apollo-era-deisgn-with-1-8m-lbs-of-thrust/. பார்த்த நாள்: 2013-04-15. "The measure of a rocket's fuel efficiency is called its specific impulse (abbreviated as "ISP"—or more properly Isp). ... 'Mass specific impulse...describes the thrust-producing efficiency of a chemical reaction and it is most easily thought of as the amount of thrust force produced by each pound (mass) of fuel and oxidizer propellant burned in a unit of time. It is kind of like a measure of miles per gallon (mpg) for rockets.'"