கணபதி தாசர் நெஞ்சறி விளக்கம்
நெஞ்சறி விளக்கம் என்பது கணபதி தாசர் என்னும் சித்தரால் இயற்றப்பட்ட நூல்.[1] இந்நூலில் காப்புச் செய்யுள் ஒன்றும், நெஞ்சு அறியவேண்டிய நெஞ்சறி விளக்கப் பாடல்கள் 100-ம், நூற்பயன் பற்றிக் கூறும் பாடல்கள் மூன்றும் - ஆக 104 பாடல்கள் உள்ளன. எல்லாப் பாடல்களும் விருத்தம் என்னும் யாப்பு வகையைச் சேர்ந்தவை. பாடல் அடிகள் ஐந்து சீர்கள் கொண்டவை. இதனை "நெடிலடி" என்பர்.
எல்லாப் பாடல்களும் தன் நெஞ்சைத் தானே கேட்டுக்கொள்ளும் பாடல்களாக உள்ளன.
சித்தி தரும் சித்துக் கருத்துக்கள் எளிய உவமைகளால் உணர்த்தப்படுகின்றன.
எடுத்துக்காட்டு
தொகுகாண்பதும் அழிந்து போகும் காயமும் அழிந்து போகும்
ஊண் பொருள் அழிந்து போகும் உலகமும் அழிந்து போகும்
பூண்பணி நாகை நாதர் பொற்பதம் அழியாது என்று
வீண் பொழுதினைப் போக்காமல் வெளிதனில் ஒளிபார் நெஞ்சே [2]
வீட்டிருள் போகவென்றே விளக்கினை ஏற்றி வைத்தால்
வீட்டிருள் எங்கே போச்சு விளக்கு ஒளி எங்கே போச்சு
கூட்டினில் நடஞ்செய் ஈசன் குறிப்பு அறியாமல் நீதான்
நாட்டினில் அலைந்தாய் நாகை நாதரை வணங்கு நெஞ்சே [3]
ஏட்டிலே எழுதும் நூல்கள் எத்தனை படித்தும் நீ தான்
காட்டிலே எறிந்த திங்கள் கானலில் சலம் போலானாய்
நாட்டிலே தெய்வமென்று நடந்து அலையாமல் உன்றன்
கூட்டினில் நாகை நாதர் குறிப்பறிந்து உணர்வாய் நெஞ்சே [4]
இவர் கூறும் சில சித்துகள்
தொகு- தன்னை விரும்பும் கணவன், அவனை விரும்பும் மனைவி - ஆகியவர்கள் போலக் குரவனாகிய குரு சொன்னதைக் கேட்டு நடந்தால் நாகைநாதன் சிவன் நடனமாடும் சிலம்பொலியைக் கேட்கலாம். [5]
- குளத்தில் பளிங்கு போன்று தெளிவாக இருக்கும் நீரைப் பாசி மறைப்பது போல களங்கமற்ற புத்தியைக் காமம் மறக்கும்.[6]
- கண்ணாடியில் தெரிவது காரண உருவம். அதுபோல உடம்பு மூலாதாரமாகிய கருமய்யத்தின் காரண உருவம். குரு மூலாதாரம் போன்றவர். இந்த விளக்கொளி அறிவைக் கொண்டு விண்ணைப் பார்க்க வேண்டும். [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ சித்தர் பாடல்கள், பதிப்பாசிரியர் அரு.இராமநாதன் பிரேமா பிரசுரம், 23 ஆற்காடு ரோடு, சென்னை 24 வெளியீடு, இரண்டு பாகம், மொத்தம் 686 பக்கம், ஐந்தாம் பதிப்பு 1986 - இந்த நூல் உள்ள பக்கம் 281
- ↑ பாடல் 3
- ↑ பாடல் 10
- ↑ பாடல் 24
- ↑
- விரக நாயகனைத் தேடி விரும்பிய மங்கை போலக்
- குரவனார் உபதேசத்தைக் குறிப்புடன் நிதமும் தேடி
- இரவுடன் பகலுமான இருபத நடனம் கண்டால்
- சிரமதில் நாகை நாதர் சிலம்பொலி கேட்கும் நெஞ்சே
- ↑
- பளிங்குற்ற குளத்து நீரைபாசிதான் மறைத்தாற்போல
- களங்கற்ற புத்தி தன்னைக் காமந்தான் மூடிக்கொண்டு
- விளங்கத் தான் செய்வதில்லை மெய்யறி விளக்கை ஏற்றி
- முழங்கத்தான் நாகை நாதர் முழுமொழி பகர்வாய் நெஞ்சே
- ↑
- கண்ணாடி தன்னில் ஏற்றும் காரண உருவம் போல
- உண்ணாடி மூலாதாரத்து உதித்த சற்குருவைக் கண்டு
- விண்ணாடி வெளியைப் பார்த்து விளக்கொளி மகிமை சேர்ந்தால்
- மண்ணாடு நாகை நாதர் வந்துனை ஆள்வார் நெஞ்சே