கணிய அளவையியல்
கணிய அளவையியல் (quantity surveying) என்பது, கட்டுமானத்துறை தொடர்பான ஒரு உயர் தொழில் துறைகளுள் ஒன்று. கட்டிடங்கள் மற்றும் கட்டுமான அமைப்புக்களுக்கான செலவுத் திட்டம், செலவின மதிப்பீடு, அளவைப் பட்டியல் தயாரிப்பு, கேள்விப்பத்திர ஆவணத் தயாரிப்பில் உதவுதல், கேள்விப்பத்திரப் பகுப்பாய்வு, செலவினப் பகுப்பாய்வு, செலவின மேலாண்மை போன்ற பல அம்சங்கள் கணிய அளவையியல் துறையின் எல்லைக்கு உட்பட்டவை. கட்டுமானங்களின் பொருளியல் தொடர்பான விடயங்களைக் கையாளுவதனால் இத் துறை கட்டுமானப் பொருளியல் துறைக்கு மிகவும் நெருங்கியது.[1][2][3]
இத்துறை ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்திலேயே உருவானது. 18 ஆம் நூற்றாண்டு நிறைவுறும் தறுவாயிலேயே பிரித்தானியாவில் கணிய அளவையியல் ஒரு தனித் தொழில் துறையாக உருப்பெற்றது. ஆரம்ப காலங்களில், கட்டிடக் கலைஞர்களினால் வரையப்படுகின்ற வரைபடங்களில் இருந்து அளவைப் பட்டியல் தயாரிப்பதும், செலவின மதிப்பீடுமே இத்துறையின் முக்கிய பங்களிப்புகளாக இருந்தன. இதன் காரணமாகவே இத் துறை கணிய அளவையியல் எனப் பெயர் பெற்றது. காலப்போக்கில், கட்டுமானத் தொழில்துறையின் சிக்கல்தன்மை அதிகரிப்பும், பொருளியல் வளங்களைத் திறமையாகப் பயன்படுத்தவேண்டிய தேவைகளும், கணிய அளவைத் துறையை அதிக அளவில் வேண்டப்படும் ஒரு துறையாக மாற்றியுள்ளது.
கணிய அளவையியல் அதன் தொழில் ரீதியான செயற்பாடுகள் தொடர்பில், பல்வேறு உயர் தொழில் துறைகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது. இவற்றுள்,
- கட்டிடக்கலை
- அமைப்புப் பொறியியல்
- குடிசார் பொறியியல்
- கட்டிடச் சேவைகள் பொறியியல்
- சட்டத்துறை
- நீதித்துறை
- காப்புறுதித்துறை
என்பனவும் உள்ளடங்குகின்றன.
கணிய அளவியல் துறை வல்லுனர்கள் கணிய அளவையாளர் எனப்படுகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Professional Quantity Surveyor". www.ciqs.org.
- ↑ "What is a PrQS" (PDF). South African Council for the Quantity Surveying Profession. பார்க்கப்பட்ட நாள் 16 May 2020.
- ↑ "PQSC – Professional Quantity Surveyors' Council Mauritius". PQSC.