கண்டியத்தேவர்
கண்டியத்தேவர் என்ற பெயர் சோழர்காலத்தில் அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களில் ஒன்று. இன்று கள்ளர் மற்றும் வன்னியர் சாதியினரில் கண்டியத்தேவர் என்ற பட்டமுடையவர்கள் வாழ்ந்துவருகின்றனர். வீரசோழன் காலத்தில் இருந்த அரசியல் தலைவர்களில் கண்டராதித்த செட்டி என்கிற அதிராஜ ராஜ கண்டியத்தேவன் என்பவன் சாமந்தனாகக் குறிக்கப்படுகிறான்.[1]
கள்ளிக்குடிப் பெருமாள் கோயிலில் கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பிற்காலப் பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகள் உள்ளது. இக்கல்வெட்டு இவ்வூரை உலகாணியான குலசேகரச் சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடுகிறது. மேலும் இவ்வூர்க் குளத்தில் பாசிப்பாட்டம் என்ற தண்ணீர் வரியால் வரும் வருமானத்தைக் கொண்டு உலகாணிப் பாசனக் குளத்தை ஆழப் படுத்திக் கொள்ளலாம் என்று அரசாணை அளிக்கப்பட்டதையும் தெரிவிக்கிறது. கண்டியத்தேவன் என்ற அதிகாரி இவ்வாணையை ஓலையாக ஊரவையினர்க்கு அனுப்பி வைத்ததையும் கல்வெட்டு கூறுகின்றது.[2]
சுந்தரபாண்டியனின் ஆறாம். ஆட்சியாண்டில் (கி.பி1262) தன் தந்தையின் பெயரில் இளையபெருமாள் அகரம் என்ற இலட்சுமணச் சதுர்வேதி மங்கலத்தை அமைத்து பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுத்தார். இதில் கண்டியதேவர் என்பவர் குறிப்பிடப் பெற்றுள்ளார். அவர் பூவாணிய நாட்டின் தலைவராக இருந்துள்ளார். முதலிகள் அறுவரும் ஊர்த்தலைவர்களாக இருந்துள்ளனர். சுந்தரபாண்டியன் திருமேனிக்குக் கண்டியத்தேவர் வாளுக்கும் தோளுக்கும் நன்மை உண்டாகும் பொருட்டுப் பூவாணி நுட்டுக் கோனகப் பள்ளியை இளமீசுவர்க்கு கண்டியத் தேவரும் நாட்டவரும் கொடுத்துள்ளனர்.[3]
ஆண்டி கண்டியத்தேவர் வழிபாடு
தொகுதஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் கருக்காடிபட்டி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமம் பத்தை, காரப்பத்தை, கருக்காடிப்பத்தை என்றெல்லாம் பெயர் வழங்கிவந்து தற்போது கருக்காடிப்பட்டி என்றழைக்கப்படுகிறது. இங்கு மிகப் பெரும்பான்மையாகக் கள்ளரின மக்களின் கண்டியர் என்ற பட்டப் பெயர் கொண்டவர்களே உள்ளனர். இவர்கள் ஆண்டி கண்டியத்தேவர், பெத்தாயி வளவாயி, தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். ஊர்மக்கள் கண்டியத்தேவர், நரியாண்டி, பெத்தாயி, வனவாயி ஆகியோர்களின் செயல்பாடுகளினால் அவர்களைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டு கண்டியத்தேவர்ர் மாண்ட இடத்தில் கோவில் கட்டியிருக்கின்றனர். தேவரை மய்யத்தில் வைத்து அவருக்கு இருபுறமும் பெத்தாயி, வளவாயியை வைத்திருக்கிறார்கள். கோவிலுக்கு வெளியே நரியாண்டிக்கு வளைவு கட்டி வைத்திருக் கிறார்கள்[4]
- ↑ கொழுமம் குமரலிங்கம் ஐவர்மலை. 2007. pp. [55].
- ↑ மதுரை மாவட்டக் கல்வெட்டுகள். pp. [11].
- ↑ சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள். pp. [10].
- ↑ ஆய்வுக்கோவை -புதுவைப் பல்கலைக் கழகம். 1997. pp. [679].