கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில், புதுக்கோட்டை மாவட்டம்
கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கண்ணனூர் ஊராட்சி கிராமத்தில் (அஞ்சல் குறியீட்டு எண் 622507) அமைந்துள்ள கற்றளி கோவிலாகும். பாண்டியநாட்டின் வடக்கு எல்லையை ஒட்டி அமைந்துள்ள இக்கற்றளி இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் .பராமரிப்பில் உள்ளது. இன்றும் இக்கோவில் வழிபாட்டில் உள்ளது. [1] [2]
அமைவிடம்
தொகுஇக்கற்றளி தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம், கண்ணனூர் ஊராட்சி, கண்ணனூர் கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலாகும். இவ்வூர் திருவாசபுரத்திலிருந்து 3.0 கி.மீ. தொலைவிலும், திருக்கோளக்குடியிலிருந்து 7.8 கி.மீ. தொலைவிலும், திருமயத்திலிருந்து 9.2 கி.மீ. தொலைவிலும், பனையப்பட்டியிலிருந்து 10.7 கி.மீ. தொலைவிலும், பூலாங்குறிச்சியிலிருந்து 12.6 கி.மீ. தொலைவிலும், பொன்னமராவதியிலிருந்து 18.3 கி.மீ தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து 29.3 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 622507 ஆகும். இவ்வூரின் புவியமைவிடம் 10° 14' 38.508 N அட்சரேகை 78° 44' 51.0612 E தீர்க்க ரேகை ஆகும். 2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள் தொகை 1188 (ஆண்கள் 579; பெண்கள் 609) ஆகும்.[3]
வரலாறு
தொகுமுதலாம் ஆதித்திய சோழனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த நன்கொடை வழங்கிய கல்வெட்டு இக்கோவிலின் மகாமண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. எனினும் இக்கோவில் சற்று தொன்மை மிக்கதும் பாண்டியர்கள் கலைப்பாணியில் எழுப்பப்பட்டதும் ஆகும். கோனாடு மற்றும் பாண்டிநாட்டை ஒட்டிய பகுதிகளில் முதலாம் ஆதித்திய சோழனின் ஆட்சி பரவிய காலமான கி.பி 880 ஆம் ஆண்டிற்கு முன்பே இது கட்டப்பட்டிருக்கலாம்.[1]
முதலாம் ஆதித்திய சோழன் (கி.பி. (870 – 907) காலத்தில் விரிவாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் மகாமண்டபம் முதலாம் ஆதித்திய சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.[4]
கோவில் அமைப்பு
தொகுகிழக்குப் பார்த்து அமைந்துள்ள இக்கற்றளி முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. கருவறை, முகமண்டபம், அந்தராளம், மகாமண்டபம் ஆகிய அங்கங்களைக் கொண்டுள்ளது. விமானத்தின் அதிட்டானத்தின் சில பகுதிகள் மண்ணில் புதைந்து காணப்படுகின்றன. அதிட்டானம் ஜகதி, எண்பட்டை குமுதம், கண்டம், பட்டிகை ஆகிய உறுப்புகளுடன் கூடிய பாதபந்த அதிட்டானம் ஆகும்.. [4][5]
அதிட்டானத்திற்கு மேல் எழும் ஆதிதளச் சுவர்கள் முன்றுபத்திகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சாலைப்பத்தியின் மையத்தில் தேவகோட்டங்கள் அகழப்பட்டுள்ளன. நான்முக அரைத்துண்கள் கொண்டு அணைக்கப்பெற்ற இந்தத் தேவகோட்டங்களுள் தென்புறக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். மற்ற கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. அரைத்தூண்களுக்கு மேலே அமைந்துள்ள விரிகோணப் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன. பிரஸ்தர உறுப்புகளாக வாஜனமும் அதற்குமேல் வலபியும் அமைந்துள்ளன. இதற்கு மேலே கூரை அமைந்துள்ளது. கூரை முன்னிழுப்புப் பெற்று கபோதமாக நீட்சி பெற்றுள்ளது. கபோதத்தில் கூடுகள் இடம்பெற்றுள்ளன. வாலபியில் பூதவரி காட்டப்பட்டுள்ளது. [5]
கருவறையின் கூரைக்கு மேலே பூமிதேசம் இடம்பெற்றுள்ளது. நான்கு புற மூலைகளிலும் வெளிப்புறம் பார்த்தவாறு நின்ற நிலையில் நான்கு யானைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. [5]
முருகனின் வாகனமாக மயில் கட்டப்படுவது மரபு. இதற்கு முன்னர் இந்திரன் கொடுத்த யானையை வாகனமாகக் காட்டுவது மரபாக இருந்துள்ளது. இது மட்டுமின்றி அன்னம் மற்றும் ஆடு ஆகியனவும் முருகனின் வாகனமாகக் காட்டுவது உண்டு. முருகனின் யானை வாகனத்திற்கு பிணிமுகம் என்று பெயர். [6][5]
பாலசுப்பிரமணியர் கோவில் கருவறையின் மீது அமைந்த விமானம் ஏகதள வேசர விமானம் ஆகும். ஏகதள விமானம் ஒரு நிலையைக் கொண்டிருக்கும். விமானத்தின் சிகரம், கிரீவம், தூபி ஆகியன வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்தால் அது வேசர விமான வகையைச் சேர்ந்தது ஆகும். வட்டவடிவுடன் கூடிய கிரீவத்தின் நாற்புறமும் கிரீவ கோட்டங்கள் அமைந்துள்ளன. கிரீவ கோட்டங்களில் திருமேனிகள் கட்டப்பட்டுள்ளன. மேற்கில் கட்டப்பட்டுள்ள திருமேனி சற்று சிதைந்துள்ளது. கிரீவக் கோட்டத்தின் மேல் உள்ள மகாநாசிகைகள் வெறுமையாக உள்ளன. வேசர சிகரத்திற்கு மேல் மகா பத்மவரி என்ற அமைப்பு விரிந்த தாமரை மலர் போன்று காட்டப்பட்டுள்ளது இதனை அடுத்து தூபி காட்டப்பட்டுள்ளது. [5]
கருவறையை ஒட்டி முகமண்டபம் அமைந்துள்ளது. கருவறையை விடவும் சற்று குறுகிய நிலையில் முகமண்டபம் அமைந்துள்ளது. முகமண்டபத்திற்கும் மகாமண்டபத்திற்கும் இடையே அந்தராளம் அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் தெற்குச் சுவரில் அமைந்துள்ள நுழைவாயிலை அடுத்து ஒரு முற்றம் அல்லது முன்றில் போல அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் கிழக்குச் சுவரில் ஒரு பலகணி அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் கருவறையின் நேர்கோட்டில் பலிபீடமும் கிழக்குச் சுவரை ஒட்டி மயில்வாகனமும் நிறுவப்பட்டுள்ளன. பலிபீடத்தின் வலப்புறத்தில் யானைவாகனம் நிறுவப்பட்டுள்ளது. மகாமண்டபத்தின் வடபுறச் சுவரை ஒட்டி 1 ½ அடி உயரம் கொண்ட மேடை அமைந்துள்ளது. [5]
கல்வெட்டுகள்
தொகுபாலசுப்பிரமணியர் கோவில் மகாமண்டபத்தில் ஒன்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் குறிப்பட்டுள்ளார். இங்கு பொறிக்கப்பட்டுள்ள பாண்டியர் கல்வெட்டு கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், படியெடுக்கப்படாத இரண்டு துண்டுக்கல்வெட்டுகள் முதலாம் ஆதித்திய சோழன் காலத்தைச் சேர்ந்தன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - கண்ணனூர் சு.சீதாராமன் வரலாறு.காம் இதழ் 104, பிப்ரவரி 6, 2014
- ↑ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - கண்ணனூர் - 2 சு.சீதாராமன் வரலாறு.காம் இதழ் 162
- ↑ Kannanur Onefivenine
- ↑ 4.0 4.1 அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் தினமலர்
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 Balasubramanya Temple. Early Chola Art. Part I. S.R.Balasubramaniyan. Asia Publishing House, Calutta pp.86 – 89
- ↑ முருகனின் வாகனம் சுந்தரராஜன் கூகுள் குழு