கதிரைமலைப் பள்ளு

(கதிரை மலைப் பள்ளு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கதிரைமலைப் பள்ளு என்பது யாழ்ப்பாணத்தில் வழங்கும் மூன்று பள்ளுகளில் காலத்தால் முதன்மையானது.[1] 1915 ஆம் ஆண்டு முதன்முதலாக அச்சில் வெளிவந்த இந்நூலின் காலமும் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. இது மரபு வழி இலக்கிய அம்சங்களையும் நாட்டார் இலக்கியப் பண்புகளையும் இசைநாடகக் கூறுகளையும் கொண்டதாகக் காணப்படுகிறது. இது வேளாண்மை பற்றிய நூல் ஆகும். நெல், மீன் வகைகளையும், பள்ளர்கள் தொழிலையும் நாட்டின் வளப்பத்தையும் இது விளக்குகிறது.[2] இந்நூல் 130 செய்யுள்கள் கொண்டது. பிற்காலத்திய இடைச்செருகல்கள் சிலவுங் காணப்படுகின்றன. ஈழத்துக் கதிரைமலைப் பள்ளினைப் பின்பற்றியே தமிழகத்திற் பள்ளுப் பிரபந்தங்கள் எழுந்தன என்பர்.

கதிரையப்பர் பள்ளு எனவும் இது அழைக்கப்படுகிறது. இந்நூல் கதிர்காமத்தில் கோவில் கொண்டுள்ள முருகன் மீது பாடப்பட்டுள்ளது. முருகனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது. பள்ளன், பள்ளி, பண்ணைக்காரன், இளையபள்ளி என நான்கு பாத்திரங்கள் உண்டு. சிந்து, விருத்தம் ஆகிய பாவகைகளும் பேச்சு சொல்லும் இந்நூலில் காணப்படுகிறது.[3]

இந்நூலாசிரியரின் பெயர் புலப்படவில்லை. (1478 - 1519 )இல் நல்லூரிலிருந்து அரசாண்ட பரராசசேகர மகாராசாவின் காலத்தது இந்நூல் என்பதற்குப் பல ஆதரங்களுள. பரராசசேகரனின் ஆணையின்படி பன்னிரு புலவரால் இயற்றப்பட்ட பரராசசேகரம் என்னும் வைத்தியநூலில் 'தென்கதிரைவேலர்' பலவிடங்களிற புகழப்படுகிறார். இப் பன்னிருபுலவர்களுள் ஒருவரே 'கதிரைமலைப்பள்ளு'ப் பாடியிருக்கக்கூடும்.

பதிப்புகள் தொகு

கதிரைமலைப் பள்ளு (1935) - முத்துலிங்க சுவாமிகளின் ஆதரவில் வ. குமாரசுவாமி அவர்களால் தொகுக்கப்பட்டது. சி. வி. ஜம்புலிங்க பிள்ளை என்பவரால் சென்னை, புரோகிரசிவ் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் மறுபதிப்பு 1996 இல் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கொழும்பு யுனி ஆர்ட்சு அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரைமலைப்_பள்ளு&oldid=3455150" இலிருந்து மீள்விக்கப்பட்டது