கனகசூரிய சிங்கையாரியனின் யாழ்ப்பாண மீட்புப் போர்

கனகசூரிய சிங்கையாரியனின் யாழ்ப்பாண மீட்புப் போர் என்னும் இக்கட்டுரை, 1450ல் கோட்டை இராச்சியத்தின் படைகளிடம் தோல்வியுற்றுத் தப்பிச்சென்ற யாழ்ப்பாண அரசன் கனகசூரிய சிங்கையாரியன், 17 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காக நடத்திய போரைக் குறிக்கும். இப்போர் 1467ல் இடம்பெற்றது.

பின்னணி

தொகு

தோல்வியுற்ற யாழ்ப்பாணத்து அரசன், மனைவி, பிள்ளைகளுடன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூருக்குத் தப்பிச் சென்றதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. சில பிற்பட்ட சிங்கள மூலங்களை அடிப்படையாகக் கொண்டு கனகசூரிய சிங்கையாரியன் போரில் இறந்துவிட்டதாகச் சிலர் கருதினாலும், வைபவமாலையினதும்,[1] வேறு சான்றுகளினதும் அடிப்படையில் அரசன் தப்பியோடினான் என்பதே பெரும்பான்மைக் கருத்தாக உள்ளது.

யாழ்ப்பாண வைபவமாலைக் கூற்றுப்படி, திருக்கோவிலூர் சென்ற கனகசூரியன், தனது இரண்டு ஆண் மக்களையும், கல்வி கற்பதற்காகத் திருக்கோவிலூரில் அரச குடும்பத்தினரிடம் சேர்ப்பித்து, தனது மனைவியுடன், காசி முதலிய தலங்களுக்கு யாத்திரை சென்றான். பல ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பிவந்த அரசன், போர்க்கலையிலும், கல்வியிலும் சிறந்தவர்களாகவும், இழந்த இராச்சியத்தை மீட்பதில் அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தான். அங்கிருந்து எல்லோருமாக மதுரைக்குச் சென்று, பாண்டிநாட்டுச் சிற்றரசர்களிடம் இருந்து ஆயுதங்களும் படைகளும் பெற்றுக்கொண்டு போருக்கு ஆயத்தமானார்கள்.[2]

கோட்டை இராச்சியத்தில் 1460களின் பிற்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகளும், கனகசூரிய சிங்கையாரியன் மீண்டும் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கின. ஆறாம் பராக்கிரமபாகு 1467ல் இறக்குமுன்னர், தனது மகள் வழிப் பேரன் செயவீர பரக்கிரமபாகுவுக்கு முடிசூட்டினான். இதை அறிந்த செண்பகப் பெருமாள், யாழ்ப்பாணத்தில் இருந்த தனது படைகளைத் திரட்டிக்கொண்டு, கோட்டை இராச்சியத்தின்மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக்கொண்டு சிறீசங்கபோதி புவனேகவாகு என்னும் பெயருடன் அரியணையில் அமர்ந்தான். இதைத் தொடர்ந்து கோட்டை இரச்சியத்தில் கலகங்கள் ஏற்பட்டதால் அவன் உடைய முழுக் கவனத்தையும் அங்கேயே செலுத்தவேண்டி ஏற்பட்டது.[3]

கனகசூரியன் யாழ்ப்பாணத்தை மீளக் கைப்பற்றுதல்

தொகு

செண்பகப் பெருமாள் பற்றியோ, கோட்டை இராச்சியத்து நிகழ்வுகள் பற்றியோ வைபவமாலை எதுவும் குறிப்பிடவில்லை. மாறாக, விசயவாகு என்னும் சிங்களவன் தானே அரசன் எனத் தலைப்பட்டுப் 17 ஆண்டுகள் அரசாண்டதாகக் குறிப்பிடுகிறது. படைகளுடன் யாழ்ப்பாணத்துக்கு வந்த கனகசூரியனும் அவனது மகன்களும், விசயவாகு எதிர்பாராதவகையில், மேற்கு வாசல் வழியாக நல்லூருக்குள் நுழைந்ததாகவும், அங்கே கடுஞ் சண்டை இடம்பெற்று விசயவாகு கொல்லப்பட்டான் என்பதும் வைபவமாலையின் கூற்று.[4] விசயபாகு என்பவன், செண்பகப் பெருமாள் கோட்டைக்குச் செல்வதற்கு முன்பு, யாழ்ப்பாணத்தை ஆள நியமிக்கப்பட்டவன் ஆகலாம். என்ற கருத்தும் உண்டு.[5]

போரின் விளைவுகள்

தொகு

இப்போரின் முக்கியமான விளைவு, யாழ்ப்பாணம் கோட்டை இராச்சியத்தின் பிடியில் இருந்து விடுபட்டு மீண்டும் தமிழ் மன்னர்களின் ஆளுகைக்குள் வந்தது எனலாம். அத்துடன், போருக்குப் பின்னர், கோட்டை இராச்சியத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பல சிங்களக் குடிகள் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கிக் கண்டி, கோட்டை போன்ற இராச்சியப் பகுதிகளில் குடியேறின. சிலர் கருதுவதுபோல் ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தின் ஆட்சி முடிந்து போயிருந்தால், புதிய அரச மரபின் தொடக்கமாகவும் இது இருக்கக்கூடும்.

மேற்கோள்கள்

தொகு
  1. சபாநாதன், குல., 1995, பக். 44, 45
  2. சபாநாதன், குல., 1995, பக். 46, 47
  3. பத்மநாதன், சி., 2006. பக். 97
  4. சபாநாதன், குல., 1995. பக். 47
  5. குணராசா, க., 2001. பக். 28

உசாத்துணைகள்

தொகு
  • குணராசா, க., மாதகல் மயில்வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை ஒரு மீள் வாசிப்பு, கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம், 2001.
  • சபாநாதன், குல. (பதிப்பு), மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை, இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 1995 (மூன்றாம் பதிப்பு).
  • பத்மநாதன், சி., ஆரியச்சக்கரவர்த்திகள் காலம், யாழ்ப்பாண இராச்சியம் (பதிப்பாசிரியர்: சிற்றம்பலம், சி. க.), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2006 (முதற்பதிப்பு: 1992)
  • குணசிங்கம், முருகர்., இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு (கி.மு. 300 - கி.பி. 2000), எம். வி வெளியீடு, தென்னாசியவியல் மையம், சிட்னி, 2008.
  • ஞானப்பிரகாசர், சுவாமி., யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம், ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003 (முதற் பதிப்பு 1928, அச்சுவேலி)

இவற்றையும் பார்க்கவும்

தொகு