கனிச்சாறு (நூல்)

பெருஞ்சித்திரனாரின் கவிதை நூல்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் தம் இளமைக் காலத்திலேயே தமிழரின் மொழி, இன, நாட்டு நலக்கொள்கையைப் பின்பற்றிச் செயற்படத் தொடங்கினார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் மாணவராக இருந்து தமிழில் புலமை கைவரப்பெற்றுப் பாவாணரைத் தமிழுலகம், மொழியியல் உலகிற்கு உயர்த்திக் காட்டியதில் பெரும்பங்கு அவருக்கு உண்டு. ‘தென்மொழி’ என்ற தனித்தமிழ் இதழ் ஒன்றை நடத்தித் தனித்தமிழ்க்கொள்கை தொடரவும் வெற்றிபெறவும் செய்தார். அதனால் உலகமுழுவதும் தன்னறிமுகமும் பாராட்டுதலும் கிடைத்தது.

தம் வாழ்நாள் முழுவதும் உணர்வான பாடல்களை எழுதித் தமிழினத்திற்கு தன்னுணர்வு, விழிப்புணர்வு ஊட்டியவர். தமிழனுக்கு ஒரு சொந்த நாடு கிடைக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர். தனித்தமிழ் நாட்டுக் கொள்கையுடையவர். வாழ்க்கை முழுவதும் தாம் கொண்ட கொள்கைக்காகச் சொற்பொழிவு, இதழ்ப்பணி, போராட்டம் எனப் பலமுறைகளில் ஈடுபட்டு, பலமுறை சிறை சென்றுள்ளார். அவர்தம் வாழ்நாள் முழுவதுமான பாடல்கள் எட்டு தொகுதிகளாகக் தொகுக்கப்பட்டு, அவரின் 80 - ஆம் ஆண்டில் வெளிவருகிறது. இவரது படைப்புகள் அனைத்தும், நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. அவற்றில் இக்கனிச்சாறும் ஒன்றாகும்.

தொகுதி - 4 தொகு

கீழ்கண்ட 'குழந்தை' என்ற கவிதை அவரது நான்காம் தொகுதியில், பக்கம்-59இல் காணப்படுகிறது.

குழந்தை...!

கன்னங் கரிய முடி!
பசும்பொன் நெற்றி!
கருக்கொள் இளம் புருவம்!
கிளிஞ்சிற் காது!
சின்னஞ் சிறிய விழி!
சிமிழின் மூக்கு!
சிரிப்பைக் கிழிக்கும் இதழ்!
சிறு பொக்கை வாய்!

பொன்னின் பொலிந்த முகம்!
பளிங்குக் கன்னம்!
புறாவின் மணிக்கழுத்து!
குருத்துத் தோள்கள்!
மின்னல் தெறித்த ஒளி!
கரைத்த சாந்தில்
வெண்ணெய் பிசைந்த உடல்!
குளிர்ந்த மேனி!

செக்கச் சிவந்த நிறம்!
செம்பொன் கைகள்!
செவ்வொளி மொக்குவிரல்!
உமி உகிர்கள்!
தக்குதை தாளக்கால்!
தளிர்செம் பாதம்!
தாமரைப்பூங் குளிர்மை மணம்
உடலம் எங்கும்!

பொக்கை வாய்ப் பூமணத்தை
மோந்து மோந்து,
பூச்செண்டு மேனியின்மேல்
முகத்தால் நீந்திச்
சொக்கும் உளம்! சொக்கும் உயிர்!
சுழலும் எண்ணம்!
சொல்லழியும்;நினைவழியும்!
சொந்தம் மாயும்! (-1972)

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிச்சாறு_(நூல்)&oldid=3303934" இலிருந்து மீள்விக்கப்பட்டது