கன்னம்பள்ளி வெங்கட்ரமண சுவாமி கோயில்

வெங்கட்ரமண சுவாமி கோயில் என்பது என்பது கிருட்டிணகிரி மாவட்டம், கன்னம்பள்ளியில் (கணவாய்ப்பட்டி) உள்ள பழமையான ஒரு பெருமாள் கோயிலாகும். இக்கோயில் சேலம் கிருட்டிணகிரி நெடுஞ்சாலையில் சென்னை புறவழிச் சாலைக்கு முன்னதாக மோட்டூர் பிரிவில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:கன்னம்பள்ளி
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:வெங்கட்ரமணர்
கோவிந்தராசர்
தாயார்:மகாலட்சுமி
சிறப்புத் திருவிழாக்கள்:புரட்டாசி சனி

தொன்மவியல்

தொகு

திரேதா யுகத்தில் இந்த இடத்தில் திருமகள் வேட்டுவக் குடியில் பிறந்தார். தன் பிறப்பு இரகசியத்தை தெரியாத நிலையில் பெருமாளை வேண்டி தவமிருந்து, அவரை அடைந்தார். பின்னர் தான் தவமிருந்த இத்தலத்தில் வெங்கடரமணராக அருள்புரிய பெருமாளை வேண்ட அவ்வாறே அவர் அருளும் தலம் எனப்படுகிறது.

பிற்காலத்தில் இந்த இடமானது அடர்ந்த வனமாக ஆனது. அப்போது இப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு இடைச் சிறுவன் ஒரு புற்றருகே செல்லும் மாடு அங்கே பால் சொரிவதைக் கண்டான். இதை ஊரில் உள்ள பெரியவர்களிடம் கூறியபோது, ஒரு அசரிரீமூலம் அந்த இடத்தில் வெங்கடரமணர் சுயம்புவடிவில் இருப்பதாக கேட்டது. உடனே ஊரார் வெங்கடரமணருக்கு கோயில் கட்டத் துவங்கியபோது மகாலட்சுமித் தாயாரும் சுயம்புவாக காணக் கிடைத்தார். இதையடுத்து இரு சுயம்பு திருமேனிகளையும் நிலை நிறுத்தி கோயில் கட்டப்பட்டது.

கோயில் அமைப்பு

தொகு

கோயிலின் கிழக்குத் திசையில் மூன்று நிலைகளுடன் இராச கோபுரம் உள்ளது. வளாகத்தின் உள்ளே இடதுபுறம் உள்ள சந்நிதானத்தில் சுயம்புவடிவின் பின்புறத்தில் நின்றகோலத்தில் வெங்கட்ரமணர் சங்கு சக்கரதாரியாக உள்ளார். வலதுபுறம் உள்ள சந்நிதியில் கோவிந்தராசர் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் சுயம்புவடிவில் காட்சியளிக்கின்றனர். அங்கே திருமகளும் மண்மகளுடன் அறிதுயிலில் அரங்கநாதர் காட்சிதருகிறார்.[1]

சிறப்பு நாட்கள்

தொகு

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது, என்றாலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் மிகச் சிறப்பான நாட்களாக கருதி வழிபாடு நடத்தப்படுகிறது. அந்த நாட்களில் அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூடுதலாக வருகின்றனர்.

அன்னதானம்

தொகு

இக்கோயிலில் தமிழக முதல்வரின் அன்னதான திட்டத்தின்படி நாள்தோறும் 30 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சனிக்கிழமைகளால் மட்டும் 60 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 17–20. {{cite book}}: Check date values in: |year= (help)