கன்னியா வெந்நீரூற்று

கன்னியா வெந்நீரூற்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கை வெந்நீரூற்று ஆகும். குறிப்பிட்ட அந்த இடத்தில் 90 - 120 செ.மீ ஆழமுடைய ஏழு சிறிய சதுர வடிவான கிணறுகள் அமைந்துள்ளன. இயற்கையாகவே ஏற்பட்டிருந்த வெந்நீரூற்றில், நாளடைவில் செயற்கைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிணற்றிலுமிருந்து வெவ்வேறு வெப்பநிலையில் நீர் ஊறி வந்து கொண்டிருக்கும். உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் இந்த வெந்நீரூற்று இலங்கையில் நடந்த உள்நாட்டுப் பிரச்சனைக் காலத்தின் போது களையிழந்து காணப்பட்டது. ஆயினும் போர் முடிவுற்றதன் பின்னர் தற்போது அதிகமாக உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் ஒரு சுற்றுலாத் தலமாக இந்த கிணறுகள் திகழ்கின்றன. போர் முடிவுற்றதன் பின்னர் இந்த உல்லாசப் பிரயாண மையத்தைச் சிங்களமயமாக்கும் நடவடிக்கைகள் நடைபெறுவதாகச் சிலர் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர் [1]. வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் தமிழ் மொழியிலும் செய்தியைக் கொண்டிருந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டு, ஆங்கிலம், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே செய்தியைக் கொண்ட அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கே விநியோகிக்கப்படும் நுழைவுச் சீட்டில் அந்தப் பிரதேசம் ஒரு பெளத்தமதப் பிரதேசம் எனவும் அறியத் தரப்பட்டுள்ளது.

வரலாறு

தொகு

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட பல வெந்நீரூற்றுக்கள் இருந்தாலும் கன்னியா வெந்நீரூற்றுக்கள் சமய நம்பிக்கையிலும், விஞ்ஞான ரீதியிலும் பல சிறப்புகளைப் பெற்று தனித்துவமாக மிளிர்கின்றது. முக்கியாக கன்னியாவில் உள்ள ஏழு வெந்நீரூற்றுகளிலும் ஏழு வித்தியாசமான வெப்பநிலைகளில் தண்ணீர் இருப்பதுதான் அதிசயம்.

இலங்கையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வரவேற்பை பெற்ற இடங்களுள் கன்னியா வெந்நீரூற்று முக்கியம் பெறுகின்றது. திருகோணமலை நகரில் இருந்து 3.9 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது கன்னியா வெந்நீரூற்று.

இக்கிணறுகள் 90 தொடக்கம் 120 சென்ரி மீற்றர் ஆழமுடையவை. சதுர வடிவானவை. இயற்கையாகவே ஏற்பட்டிருந்த வெந்நீரூற்றில், நாளடைவில் செயற்கைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கிணற்றுகளுக்கே என தனித்துவமான வரலாற்றுக் கதையும் உள்ளது. திருகோணமலை சம்பந்தப்பட்ட ஐதீக, புராணக் கதைகள் பெரும்பாலும் இராவணன் சம்பந்தப்பட்டவை. கன்னியா வெந்நீரூற்றும் இராவணனோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகத்தான் நம்பப்படுகின்றது.

சிவபெருமானின் தீவிர பக்தனாக இருந்த இராவணன் திருகோணமலையில் குடிகொண்டிருக்கும் கோணேஸ்வரர் கோயிலுக்கு சென்றான். அங்கு வீற்றிருந்த சிவலிங்கத்தைக் கண்டு வியந்து அந்த லிங்கத்தை அவனின் தாயின் வணக்கத்திற்காக கொண்டு செல்ல விரும்பினான். இதனால் பாறையின் மீது இருந்த   சிவலிங்கத்தை தனது வாளால் வெட்டி பெயர்த்து எடுக்க முற்பட்டான்.

இதனால் கடும் கோபம் கொண்ட சிவன் அந்த  பாறையை தனது காலால் அழுத்தியதால் இந்த பாறைக்குள் சிக்குண்டான் இராவணன். இதைக்கேள்வியுற்ற அவன் தாய் தனது மகன் இறந்து விட்டதாக எண்ணி அதிர்ச்சியில் உயிரிழந்தாள். ஆனால், இராவணனோ இறக்கவில்லை. சிவனை பிரார்த்தனை செய்து தாம் செய்த செயலை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டான். தனது பக்தனைச் சிவனும் மன்னித்தார்.

கோணநாயகரிடம் பெற்ற லிங்கத்தை கையிலேந்திக் கொண்டு இராவணன் செல்லும்போது, விஷ்ணு அந்தண வடிவம் எடுத்து இராவணனைச் சந்தித்து தாயார் உயிர் நீத்த செதியைத் தெரிவித்தார்.

இதைக் கேட்டதும் இராவணன் துக்கக் கடலில் மூழ்கினான். அந்தணன் அவரைத் தேற்றியபின், இறுதிக் கிரியைகளைச் செயுமாறு நினைவுறுத்தி, இப்புண்ணிய தலத்தில் கருமாதிக் கிரியைகளைச் செதால் அவர் மோட்சத்தை அடைவது திண்ணம் என்று கூறினார். ஈமக்கிரியைகளை அந்தணரையே செயச் சோல்லி இராவணன் வேண்ட, அதற்குச் சம்மதித்த அந்தணர் இராவணனை அழைத்துக் கொண்டு திருகோணமலைக்கு மேற்கிலுள்ள கன்னியா என்னும் தலத்திற்குச் சென்று, அவ்விடத்தில் தமது கையில் இருந்த தடியினால் ஏழிடத்தில் ஊன்றினார்.

அந்தண வடிவம் கொண்டு மகாவிஷ்ணு ஊன்றிய ஏழு இடங்களில் நீரூற்றுக்கள் தோன்றின எனப் புராணங்ககள் கூறுகின்றன. இவ்விடத்தில் அந்தியேட்டி கடமைகள் செயப்படின் அவ்வான்மாக்கள் முத்தியடையும் என்று நம்பப்படுகிறது.

உலகில் பல இடங்களில் இது போன்ற வெந்நீர் ஊற்றுக்கள் காணப்படுகின்றன. இலங்கையில் வெந்நீர் ஊற்றுக்கள் அம்பாந்தோட்டை முதல் திருகோணமலை வரை கன்னியா உட்பட 10 இடங்களில் காணப்படுகின்றன.

இதுதவிர ஆரம்ப காலங்களில் கண்ணகி வழிபாடு திருகோணமலை கன்னியா பிரதேசத்தில் இருந்திருக்கலாம் எனவும் கண்ணகி என்ற பெயர் காலப்போக்கில் மருவி கன்னியா என்று மாறிப்போயிருக்கும் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

வரலாற்று ரீதியாக தமிழர் அடையாளமாக இவை திகழ்ந்தாலும் தற்போது இங்கு பெரும்பான்மையினர் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. இதனை சூழ பௌத்த ஆலயங்களை அமைத்து முற்றிலும் பௌத்த புனித தலமாக மாற்றியமைத்துக்கொண்டு வருகின்றனர்.  பெயர் பலகைகளில் கூட தமிழர்களுக்கான இடம் மறுக்கப்பட்டுள்ளது  என்றுதான் சொல்ல வேண்டும். தமிழர்களுக்கே உரித்தான கலை கலாசார பொக்கிசங்களுள் ஒன்றான கன்னியா வெந்நீரூற்றை  பாதுக்காத்துகொள்வது தமிழர்களின் கடமையும் கூட.

தற்போதைய நிலை

தொகு

தற்போது பெருமளவு சுற்றுலாப் பயணிகள் இங்கு சென்று நீராடுகின்றனர். எனினும் உல்லாசப்பயணிகள் நீராடும் அளவுக்கு போதியளவு நீர் அங்கு இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது[2][3].

இலக்கியம்

தொகு

கன்னியாவில் உள்ள ஏழு வெந்நீரூற்றுகள் பற்றிய நவாலியூர் சோமசுந்தரப் புலவரது ஒரு பாடல்:

இவற்றையும் காணவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. பறிபோகும் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசமும் பிழைப்புவாத தமிழ் அரசியல் தலைமைகளும்! : பி.எஸ்.குமாரன் http://inioru.com/?p=14730
  2. கன்னியா வெந்நீரூற்றில் போதிய தண்ணீரில்லை : உல்லாசப்பயணிகள் கவலை[தொடர்பிழந்த இணைப்பு], வீரகேசரி, செப்டம்பர் 2, 2010
  3. "புனிதத் தன்மையை இழந்து வரும் திருமலை கன்னியா ஊற்று!". Archived from the original on 2010-08-01. பார்க்கப்பட்ட நாள் 2010-09-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னியா_வெந்நீரூற்று&oldid=3548680" இலிருந்து மீள்விக்கப்பட்டது