கபிலர் (பாட்டியல் புலவர்)
கபிலர் என்னும் பெயர் கொண்ட புலவர்களில் பாட்டியல் பாடிய கபிலர் இவர்.
பாட்டியல் என்னும் நூல் வகையானது பொதுவாக மூன்று வகையான செய்திகளைக் கூறும். புலம் எனத் தொல்காப்பியப் பாயிரம் கூறும் இலக்கம் மொழியை அறிவியல் பார்வையில் அணுகும். முன்னோர் பாடல்களில் அமைந்துகிடக்கும் மரபுநெறியைப் புலப்படுத்தும். தொல்காப்பியம், நன்னூல், இறையனார் களவியல், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பி அகப்பொருள் முதலானவை புலனெறி இலக்கணங்கள். பாட்டியல் இலக்கண நூல்கள் எழுத்து, சொல், நூல் எனப் பகுத்துக்கொண்டு வேறு வகையில் அணுகும். ஐங்குறு நூறு என்னும் நூல் ஐந்து அகத்திணை மேல் ஐந்து புவலர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. பதிற்றுப்பத்து 10 அரசர்களைப் 10 புலவர்கள் 10, 10 பாடல்களாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இவை இலக்கியப் பாடல்களின் தொகுப்பு. அவற்றைப் போல, பன்னிரு பாட்டியல் என்னும் நூலும் ஒரு தொகைநூல். இதில் முன்னோர் 15 பேர் பாடிய இலக்கணப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த 15 பாட்டியல் புலவர்களில் ஒருவர் கபிலர். இவர் பாடிய நூலிலிருந்து 24 நூற்பாக்கள் பன்னிரு பாட்டியலில் இடம் பெற்றுள்ளன. பாட்டியல் புலவர்களாக விளங்கிய கபில,பரணர் "ஆக்கவும் கெடவும் பாட வல்லவர்கள்" என யாப்பருங்கல விருத்தியுரை கூறுகிறது.