கமலா சத்தியநாதன்

இந்தியப் பெண்ணியவாதி மற்றும் எழுத்தாளர்

கமலா சத்தியநாதன் (Kamala Satthianadhan;1880–1950), ஓர் இந்திய எழுத்தாளராவார். பெண்ணியவாதியான இவர் 1901 மற்றும் 1938 ஆம் ஆண்டுகளுக்கிடையில் புழக்கத்தில் இருந்த ஒரு பிரபலமான உள்ளூர் வெளியீடான இந்தியப் பெண்கள் என்ற பத்திரிகையை நிறுவி நடத்தினார்.[1][2]

வாழ்க்கை தொகு

கமலா சத்தியநாதன் 1880 ஆம் ஆண்டு அன்னா ரத்னம் கிருட்டிணம்மாவாகப் பிறந்தார்.[1] முதலில் வீட்டுப் பள்ளியிலும் பின்னர் நோபல் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1898 ஆம் ஆண்டு சமசுகிருதம் மற்றும் இந்திய இலக்கியம் படித்து பட்டப்படிப்பை முடித்தார்.[1]

1898 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பிறகு இவர் நோபல் கல்லூரியின் பேராசிரியர் சாமுவேல் சத்தியநாதனை மணந்தார்.[1] சத்தியநாதனின் முதல் மனைவி எழுத்தாளர் கிருபாபாய் 1893 ஆம் ஆண்டு இறந்தார். சமூக வழக்கத்தைத் தொடர்ந்து தனது பெயரை கமலா சத்தியநாதன் என்று மாற்றிக் கொண்டார். இவர்களுக்குப் பல குழந்தைகள் இருந்தன. இவர்களின் மகள், பத்மினி சத்தியநாதன் செங்குப்தாவும் ஓர் எழுத்தாளராக உருவானார். இவரது எழுத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியப் பெண் எழுத்தாளர்கள் எவ்வாறு அச்சு மற்றும் பொதுத் துறையில் தங்கள் சொந்த கல்விப் பாதையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை நன்கு புரிந்துகொள்ள முடியும்.[3]

சாமுவேல் சத்தியநாதன் 1906 ஆம் ஆண்டு இறந்தார். கமலா சத்தியநாதன் உள்ளூர் ராணிக்கு சமசுகிருதத்தில் பயிற்சி அளித்து தனது குடும்பத்தைக் காப்பாற்றினார். 1918 ஆம் ஆண்டில், அவர் தனது குழந்தைகளுடன் ஐக்கிய இராச்சியத்திற்கு இட்டம் பெயர்ந்து சென்றார். அங்கு தன் குழந்தைகளுக்கு உயர் கல்வியை வழங்கினார். 1923 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி வந்தார்.[4] 1950 ஆம் ஆண்டு கமலா இறந்தார்.

தொழில் மற்றும் எழுத்து தொகு

கமலா சத்தியநாதன் 1901 ஆம் ஆண்டு இந்தியப் பெண்கள் என்ற பத்திரிக்கையை நிறுவினார். பெண்களின் உரிமைகள் தொடர்பான சீர்திருத்தங்களைப் பற்றி பதிவு செய்து எழுத வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்பத்திரிகையைத் தொடங்கினார். பத்திரிகை விரைவில் பிரபலமடைந்தது. 1915 ஆம் ஆண்டு வரை தனது குழந்தைகளுக்கு உயர் கல்வியை வழங்குவதற்காக ஐக்கிய இராச்சியம் சென்றார். இந்த காலகட்டத்தில், அவரது சகோதரி, என்சுமேன் ஆசிரியராகப் பொறுப்பேற்று பத்திரிகையைத் தொடர்ந்தார் என்றாலும் பத்திரிகை சுறுசுறுப்பாக இயங்குவதை நிறுத்தியது. இந்தியா திரும்பியதும் கமலா சத்தியநாதன் இந்திய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1927 ஆம் ஆண்டு நின்று போன தனது பத்திரிகையை மீண்டும் தொடங்கினார். இந்த முறை அரசியலில் அதிக கவனம் செலுத்தினார். 1938 ஆம் ஆண்டு பத்திரிகை நிறுத்தப்படும் வரை தொடர்ந்து இயங்கினார்.[5][6]

அரசியல் ஆர்வலரும் கவிஞருமாகிய சரோஜினி நாயுடு, எழுத்தாளரும் கல்வியாளருமான பேகம் ரோக்கியா, வழக்கறிஞரும் எழுத்தாளருமான கார்னெலியா சோராப்சி, அரசியல்வாதியும் பிரம்மஞானியுமான அன்னி பெசன்ட் அம்மையார், பெண்ணியவாதியும் கல்வியாளருமான பண்டித இரமாபாய் , சத்தியநாதனின் உறவினரும், மதபோதகராக ருமான ஆசிரியர் மோனா என்சுமேன் போன்றவர்கள் பலரும் இவரது பத்திரிகையில் தங்களது படைப்புகளை எழுதினார்கள்.[7]

ஐக்கிய இராச்சியத்தில் தற்காலிகமாக தங்குவதற்கு முன்னும் பின்னும், கமலா சத்தியநாதன் பெண்கள் குழுக்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். பெண்களுக்கு நிதி சுதந்திரம் பெற உதவுவதற்காக ஆந்திரா மற்றும் மெட்ராசு மாகணத்தில் ஒன்பது கூட்டுறவு சங்கங்களை நிறுவினார். திருநெல்வேலியில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளை பராமரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு மையத்தை நிறுவினார், செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஒய்எம்சிஏ உடன் இணைந்து பணிபுரிந்தார். சாதி படிநிலையை நோக்கமாகக் கொண்ட பாகுபாடு எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆதரித்தார். ஆந்திரா பல்கலைக்கழகம் மற்றும் மெட்ராசு பல்கலைக்கழகங்களின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

1898 ஆம் ஆண்டில், அவரது கணவர் சாமுவேலுடன் இணைந்து இந்திய கிறித்துவ வாழ்க்கையின் கதைகள் என்ற தலைப்பில் ஒரு கதைத் தொகுப்பை வெளியிட்டார், ஒவ்வொன்றும் மத உவமைகள் கொண்ட ஆறு கதைகளை வழங்கியது. இந்திய பெண்கள் பத்திரிகையில் இலக்கியம் மற்றும் அரசியல் பற்றிய பல கதைகள் மற்றும் விமர்சனக் கட்டுரைகளையும் வெளியிட்டார். இந்தியாவில் ஆரம்பகால பெண்ணிய இயக்கங்களை ஆதரிக்கும் வழக்கமான தலையங்க அம்சங்களுடன். இவரது மகளின் வாழ்க்கை வரலாறு உட்பட சில நாவல்களும் வெளியிட்டார்.[8]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Logan 2017, ப. xi.
  2. Logan 2017.
  3. Bagchi, Barnita (2020-04-15). "Tracing two generations in twentieth century Indian women's education through analysis of literary sources: selected writings by Padmini Sengupta". Women's History Review 29 (3): 465–479. doi:10.1080/09612025.2019.1611133. பன்னாட்டுத் தர தொடர் எண்:0961-2025. 
  4. Logan 2017, ப. xiii.
  5. Logan 2017, ப. xiii-xv.
  6. Hussain, Mobeen (2019-01-02). "The Indian ladies' magazine, 1901–1938: from Raj to Swaraj". Women's History Review 28 (1): 178–180. doi:10.1080/09612025.2018.1539633. பன்னாட்டுத் தர தொடர் எண்:0961-2025. https://doi.org/10.1080/09612025.2018.1539633. 
  7. Ludwig, Frieder (2016). "Mona Hensman: An Indian Woman at the World Missionary Conference in Tambaram (1938)". Journal of World Christianity 6 (1): 123–147. doi:10.5325/jworlchri.6.1.0123. பன்னாட்டுத் தர தொடர் எண்:2377-8784. https://www.jstor.org/stable/10.5325/jworlchri.6.1.0123. 
  8. De Souza 2005, ப. xii.

சான்றுகள் தொகு

மேலும் வாசிக்க தொகு

  • Padmini Sengupta, Portrait of an Indian Woman (YMCA Publishing House, 1965)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_சத்தியநாதன்&oldid=3747721" இலிருந்து மீள்விக்கப்பட்டது