கமல் இரணதிவே

இந்திய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியாளர்
(கமல் ரணதிவே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கமல் இரணதிவே (Kamal Ranadive நவம்பர் 8 1917 - 2001) ஓர் இந்திய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியாளர். புற்றுநோய்க்கும் தீ நுண்மிகளுக்கும் (வைரஸ்களுக்கும்) இடையேயான இணைப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்தற்காக இவர் அறியப்படுகிறார். இவர் இந்திய மகளிர் அறிவியலாளர் சங்கத்தின் (IWSA) நிறுவன உறுப்பினர் ஆவார்.

1960களில், மும்பை இந்தியப் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் இந்தியாவின் முதல் திசு வளர்ப்பு ஆராய்ச்சி ஆய்வகத்தை இவர் நிறுவினார்.

ஆரம்ப வாழ்க்கை

தொகு

கமல் 8 நவம்பர் 1917 அன்று புனேயில் பிறந்தார். இவரது பெற்றோர் திங்கர் தத்தாத்ரேயா சமரத் மற்றும் சாந்தபாய் டிங்கர் சமார்ட் ஆவார். இவரது தந்தை புனே பெர்குசன் கல்லூரியில் பயிற்றுவித்த ஒரு உயிரியலாளர் ஆவார். இவர் பள்ளிப்படிப்பை புனேயில் முடித்தார். இவருடைய தந்தை இவரை ஒரு மருத்துவராக்கி, ஒரு மருத்துவருக்கு மணமுடித்து வைக்க விருப்பப்பட்டார். ஆனால் இவர் வேறு விதமாக முடிவு செய்தார். ஃபெர்குசன் கல்லூரியில் தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை முதன்மை பாடமாகக் கொண்டு படித்தார். 1934 ஆம் ஆண்டில் இவர் தனது இளநிலை அறிவியல் (B.Sc.) பட்டம் பெற்றார். பின்னர் இவர் புனேயில் வேளாண்மை கல்லூரியில் இடம் பெற்றார். அங்கு இவர் 1943 ஆம் ஆண்டில் தனது முதுகலை அறிவியல் பட்டம் (எம்.எஸ்.சி.) பெற்றார். 1949இல் உயிரணுவியலில் (Cytology ) முனைவர் பட்டம் பெற்ற இவர், முனைவர்பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வை, திசுவளர்ப்பு நுட்பங்கள் குறித்து மேற்கொள்வதற்கான உதவித்தொகையைப் பெற்று, அமெரிக்காவின் மேரிலாந்திலுள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் (Johns Hopkins University in Baltimore) புகழ்பெற்ற உயிரியலாளரான ஜார்ஜ் கே (George Gey) என்பவரோடு இணைந்து மேற்கொண்டார்.

பிறகு இந்தியப் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு திரும்பியவர் (Indian Cancer Research Center - ICRC), இந்தியாவின் முதல் திசு வளர்ப்பு ஆய்வகத்தை ( Tissue Culture Laboratory) அங்குத் தொடங்கினார்.

புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும் பணிபுரிந்த கமல் இரணதிவே அம்மையார், மார்பகப் புற்றுநோய்க்கும் பரம்பரைக்கும் (heredity) உள்ள தொடர்பையும், புற்றுநோய்க்கும் சில குறிப்பிட்ட நுண்ணுயிரிகளுக்கும் (certain viruses) உள்ள தொடர்பையும் கண்டறிந்ததில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

தொழுநோய்க்கான பாக்டீரியாவான Mycobacterium leprae குறித்தும் ஆய்வுமேற்கொண்ட அவர், அதற்கான தடுப்பூசி (leprosy vaccine) உருவாக்கத்திற்கும் நிதியுதவி செய்தார். 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் புற்றுநோய் மற்றும் தொழுநோய் தொடர்பாக எழுதி வெளியிட்டுள்ளார் இவ் அம்மையார் என்பது குறிப்பிடத்தக்கது.

1973ஆம் ஆண்டு, தம்மோடு பணியாற்றிய 11 பெண்களையும் இணைத்துக்கொண்டு இந்தியப் பெண் அறிவியலாளர் கழகத்தை (Indian Women Scientists’ Association – IWSA) உருவாக்கி, அறிவியல்துறை சார்ந்த பெண்களுக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்தார்.

மேற்படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல இந்திய மாணவர்களை ஊக்கப்படுத்திய அவர், அக்கல்விக்குப்பின் அவர்கள் தாயகத்திற்குத் திரும்பிவந்து தம் அறிவையும் திறனையும் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அழுத்தமாய் வலியுறுத்தினார்.

1989ஆம் ஆண்டு பணி ஓய்வுபெற்ற கமல் இரணதிவே அம்மையார், அதன்பின்னர் சமூகப்பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, மகாராட்டிரத்தின் கிராமப்புற பெண்களுக்குச் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த பயிற்சிக்கல்வியை வழங்கினார்.

கமல் இரணதிவே அம்மையாரால் உருவாக்கப்பட்ட இந்தியப் பெண் அறிவியலாளர் கழகம் இப்போது நன்கு வளர்ச்சியடைந்து பல கிளைகளைக் கொண்டதாய்த் திகழ்வதுடன் அறிவியல் துறையில் சாதிக்க விரும்பும் பெண்களுக்கு ஊக்கத்தொகையும் அளித்து உதவிவருகின்றது.

கணிதவியலாளர் ஜே. டி. இரணதிவே என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு அனில் ஜேசிங் என்ற ஒரு மகன் உண்டு.

விருதுகள்

தொகு

அறிவியல் ஆராய்ச்சிகளிலும் சமூகத்தில் அனைவருக்கும் நோயற்ற நல்வாழ்வு கிடைக்கவேண்டும் என்பதிலும் தம் வாழ்நாளெல்லாம் அர்ப்பணிப்புடன் உழைத்த கமல் இரணதிவே அம்மையாருக்கு இந்திய அரசாங்கம் 1982இல் பத்ம பூஷண் விருதளித்துச் சிறப்பித்துள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Padma Bhushan Awardees". Archives of Government of India. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்_இரணதிவே&oldid=4053879" இலிருந்து மீள்விக்கப்பட்டது