கயபாகு காலம்காட்டி முறைமை

கயவாகு காலம்காட்டி (ஆங்கில மொழி: Gajabahu Synchronism) என்பது வி. கனகசபைப் பிள்ளை என்னும் வரலாற்றாய்வாளரால் சங்ககால தமிழக வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை வரிசைப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுமுறை ஆகும்.[2] இதை கனகசபைப் பிள்ளை தான் எழுதிய 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர் என்னும் நூலில் எழுதியிருந்தார். இதையே பின்வந்த வரலாற்றறிஞர்கள் சங்ககால தமிழக வரலாற்றை கணிக்கும் முறையாக கையாண்டனர்.[3][4] இதை மொழியியலாளரும் இலக்கியவியலாளருமான கமில் சுவெலபில் சங்கத்தமிழர் வரலாற்றை கணிக்க உதவும் கால நங்கூரம் என்று புகழ்ந்துள்ளார். ஆனால் மானுடவியல் வல்லுநரான கணநாத ஒபயசேகர என்பவர் இம்முறை காலம் கணிக்க ஏற்றுக்கொள்ள முடியாத முறை என்று மறுத்துள்ளார்.

கயவாகு காலம்காட்டி - இதில் குறிப்பிடப்படும் வெல்புகழ்க்குட்டுவன் [1] எனபவனின் காலத்தை மையமாக வைத்தே அவனது உறவினர்கள், அவர்களை பாடிய புலவர்கள், அந்த புலவர்கள் பாடிய மற்ற சேர, சோழ, பாண்டிய அரசர்கள், வேளிர், சீறூர்மன்னர், குறுநிலமன்னர் போன்றவர்களின் காலத்தையும் தமிழ் வரலாற்றாய்வாளர்கள் கணித்தனர்.

காலம்காட்டுதல் தொகு

இக்காலக்கணிப்பு முறை சிலப்பதிகார வரிகளில் வரும் செங்குட்டுவன் எடுத்த கண்ணகி விழாவுக்கு வந்த கடல் சூழ்ந்த இலங்கையை ஆண்ட கயவாகு என்னும் மன்னனையும்[5], மகாவம்சம் படி கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட கயவாகு என்னும் மன்னனையும் ஒருவன் எனக்கூறுகிறது. இதன் படி சங்ககாலத் தமிழக மன்னர்களின் வரலாற்றை கி.பி. 250க்கும் முன்னர் வி. கனகசபைப் பிள்ளை எடுத்துச் சென்றார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஆண்டதாக கூறப்படும் செங்குட்டுவன் மகத மன்னனான சதகர்ணியை சந்தித்தான் என்பது இம்முறைக்கு மேலும் வலுவூட்டுவதாய் அமைந்துள்ளது. சாதவாகனர் மன்னர்களின் பெயரில் சதகர்ணி என்ற பெயர் சேர்ந்தே இருக்கும். கயவாகு என்ற பெயர் கொண்ட மன்னர்கள் மகாவம்சம் படி மொத்தம் இரண்டு பேரே ஆவர். ஒருவன் இரண்டாம் நூற்றாண்டில் ஆண்டவன். மற்றொருவன் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ஆண்டவன். அதனால் இம்முறைப்படி சங்ககாலம் கி.பி. 250க்கும் முற்பட்டதாக்கும்.

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு
    உடை திரைப் பரப்பின் படு கடல் ஓட்டிய
    வெல் புகழ்க் குட்டுவன் (பதிற்றுப்பத்து 46)
  2. V., Kanakasabhai (1997). The Tamils Eighteen Hundred Years Ago. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-0150-5. 
  3. Zvelebil, Kamil (1973). The smile of Murugan: On Tamil literature of south India. Brill Academic Publishers. பக். 37–39. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-03591-5. http://books.google.com/books?id=VF2VMUoY_okC&pg=PA38&dq=gajabahu+synchronism&sig=8NZMMg8rzIDxWAC275LUmODFdb8. "The opinion that the Gajabahu Synchronism is an expression of genuine historical tradition is accepted by most scholars today" 
  4. Pillai, Vaiyapuri (1956). History of Tamil Language and Literature; Beginning to 1000 AD. Madras, India: New Century Book House. பக். 22. "We may be reasonably certain that chronological conclusion reached above is historically sound" 
  5. பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து நித்தல் விழாவணி நிகழ்கென் றேவிப் பூவும் புகையும் மேவிய விரையும் தேவந் திகையைச் செய்கென் றருளி வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி உலக மன்னவ னின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் - சிலப்பதிகாரம் 151 - 163