கரிக்கோல்
கரிக்கோல் அல்லது காரெழுதுகருவி (pencil) என்பது ஒரு குறியிடும் உள்ளகமும் நெகிழி அல்லது மரத்தால் ஆன வெளியுறையும் கொண்ட ஒரு எழுதும் அல்லது கலைச் சாதனம் ஆகும். வெளியுறையானது கரிக்கோலை உடையாமல் இருக்கவும் பயனரின் கைகளுக்கு சிரமம் உண்டாகாமல் இருக்கவும் அமைகிறது.

கரிக்கோல்கள் தேய்வு மூலம் குறியிடும் உள்ளகம் காகிதத்தின் மேல்பரப்பில் ஒட்டி குறிகளை ஏற்படுத்துகின்றன. கரிக்கோல்கள் பெரும்பாலும் களிமண் மற்றும் எழுதுகரியால் (Graphite) ஆன உள்ளகத்தால் ஆனவை. இக்குறிகளை எளிமையாக அழிப்பான்கள் மூலம் அழிக்கக்கூடியவை. எழுதுகரி கரிக்கோல்கள் (Graphite Pencils) வரைவதற்கும் எழுதுவதற்கும் பயனாகின்றன. வண்ணக் கரிக்கோல்களில் (Colour Pencils) மெழுகு கலக்கப்படுகின்றன. இவை பளப்பளப்பான குறிகளை விடுவிக்கின்றன. பெரும்பாலுமான கரிக்கோல்களின் வெளியுறை மரத்தால் ஆனவை. கரிக்கோலைப் பயன்படுத்த, வெளியுறை சீவிவிடப்பட்டு நுனி கூர்மைப்படுத்தப்படுகிறது. .
பொறிமுறைக் கரிக்கோல்கள் (Mechanical Pencils) நெகிழியால் ஆன வெளியுறை கொண்டுள்ளன. இவைகளில் ஒரு பொத்தான் மூலம் எழுதுகரி உள்ளகத்தை வெளியில் நீட்டவோ அல்லது மீள்ப்படுத்தவோ செய்யப்படுகிறது.
கரிக்கோலின் மையத்தில் உள்ள கருமை நிறத்தினை ஈயம் என பலர் தவறாகக் கருதுகின்றனர்.[1] ஆனால் கரிக்கோள்கள் ஈயம் என்ற தனிமத்தைக் கொண்டிருக்கவில்லை. [2] [3] [4] [5] [6] ஜெர்மன் ( Bleistift ), ஐரிஷ் ( peann luaidhe ), அரபு (قلم رصاص qalam raṣāṣ ) மற்றும் வேறு சில மொழிகளில் கரிக்கோளுக்கான வார்த்தைகள் ஈயப் பேனாவைக் குறிக்கின்றன.
வரலாறு தொகு
ரோமானியர் காலத்தில் எழுதுவதற்கு 'ஸ்டைலஸ்' எனப்படும் ஒரு நீண்ட, கூரான உலோகத்துண்டு பயன்படுத்தப்பட்டது. அது காகிதத்தில் மெல்லிய, ஆனால் படிக்கக்கூடிய தடத்தை உருவாக்கியது. பின்னர் உலோக ஸ்டைலசுக்குப் பதிலாக காரீயத்தால் ஆன எழுதுகோல்கள் பயன்படுத்தப்பட்டன. அதனால்தான் பென்சில்கள் இன்றும் 'லெட்' பென்சில்கள் என்று அழைக்கப்படுகின்றன. இங்கிலாந்தில் 1500களில் எழுதுகரி படிவு கண்டறியப்பட்டு செம்மறியாடுகளைக் குறியிடுவதற்கு பயன்பட்டது. இக்குறிப்பான எழுதுகரிப் படிவு தூய்மையாகவும் திண்மையாகவும் இருந்ததால் இதனை வைத்து குச்சிகள் செய்யப்பட்டன. பின்னர் காரீயத்துக்குப் பதிலாக 1564 ல் முதல் முறையாக இங்கிலாந்தில் எழுதுகரியால் ஆன குச்சி பயன்படுத்தப்பட்டது.எழுதுகரியானது காரீயத்தை விட கரிய எழுத்துகளை உருவாக்கியதால் அந்த எழுத்துக்கள் படிப்பதற்கு எளிதாக இருந்தன. நவீனக்கால தச்சரின் கரிக்கோலின் அச்சுப்படி ஸிமோனியோ மற்றும் லிண்டானியா பெர்னாக்கோட்டி என்கிற இத்தாலியத் தம்பதிகளால் படைக்கப்பட்டது. 1795 ல் நிக்கோலாஸ் ஜாக்ஸ் கான்ட்டே முதன்முதலாக களிமண்ணையும் எழுதுகரியையும் கலந்தார். இக்கலவையின் விகிதாச்சாரத்தை மாற்றுவதன் மூலம் எழுதுகரிக் கம்பியின் கடினத்தை மாற்றலாம் என அறிந்தார். கரிக்கோல் தயாரிப்பு முறை 1790 ல் ஜோஸெஃப் ஹார்ட்மூத் என்கிற ஆஸ்திரியரால் வளர்க்கப்பட்டு இன்றுவரை பயன்படுத்தப்படுகிறது.
தரம்பிரித்தல் மற்றும் வகைப்படுத்தல் தொகு
ஐரோப்பியத் தரம்பிரிப்பு முறையில் B என்றால் கருமையைக் குறிக்கும். H என்பது கடினத்தைக் குறிக்கிறது. அமெரிக்க முறையில் எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. உயர்ந்த எண்கள் உயர்ந்தக் கடினத்தைக் குறிக்கின்றன.
மேற்கோள்கள் தொகு
- ↑ The big book of questions and answers, Publications International LTD, (1989), p.189, ISBN 0-88176-670-4.
- ↑ "Have pencils ever contained lead?" (in en). https://www.sciencefocus.com/science/have-pencils-ever-contained-lead/.
- ↑ .
- ↑ "Pencil swallowing: MedlinePlus Medical Encyclopedia". https://www.nlm.nih.gov/medlineplus/ency/article/002817.htm.
- ↑ "graphite pencils | The Weekend Historian". https://umeshmadan.wordpress.com/tag/graphite-pencils/.
- ↑ "Lead Facts - Uses, Properties, Element Pb, Plumbing, Pipes, Weights". http://www.sciencekids.co.nz/sciencefacts/metals/lead.html.