கரிமச்சிதைவு
கரிமச்சிதைவு (Decomposition) அல்லது அழுகல் (Rot) என்பது இறந்த கரிமச் சேர்மங்கள் கார்பனீராக்சைடு, நீர், எளிய சர்க்கரைகள் மற்றும் தாது உப்புகள் போன்ற எளிய கரிம அல்லது கனிமப் பொருட்களாக உடைக்கப்படும் செயல்முறையாகும். இந்த செயல்முறை ஊட்டக்கூறுச் சுழற்சியின் ஒரு பகுதியாக இருப்பதுடன், உயிர்க்கோளத்தில் பௌதிக இடத்தை ஆக்கிரமித்துள்ள வரையறுக்கப்பட்ட பொருட்களை மீழ்சுழற்சி செய்வதற்கும் அவசியமானது. உயிரினங்களின் உடல்கள் இறந்த சிறிது நேரத்திலேயே சிதைவடையத் தொடங்குகின்றன. வெவ்வேறு உயிரினங்கள் ஒரே மாதிரியாக சிதைவதில்லை என்றாலும், அவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட மாதிரியான சிதைவு வரிசை நிலைகளுக்கு உட்படுகின்றன. புழுக்கள் போன்ற விலங்குகளும் இந்த கரிமச்சிதைவுக்கு உதவுகின்றன.
கரிமச்சிதைவு பற்றி ஆய்வு செய்யும் அறிவியல் பொதுவாக 'கல்லறை' (tomb) என்று பொருள்படும் 'taphos' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட taphonomy என்று குறிப்பிடப்படுகிறது. இதனைத் தமிழில் தொல்லுயிரெச்சத் தோற்றவியல் எனலாம். நீண்ட கால செயலற்ற நிலையில் அல்லது உறங்குநிலையில் இருக்கும் உயிரினங்களுக்குச் சிதைவு ஒரு படிப்படியான செயல்முறையாகவும் இருக்கலாம்.[1]
கரிமச் சிதைவானது இரு வகைகளில் நிகழலாம்.
- உயிரினங்களின் தாக்கத்தால் ஏற்படும் உயிரியாற்சிதைவு (biodegradation): பாக்டீரியா, பங்கசு போன்ற நுண்ணுயிரிகள் கரிமப் பொருட்களைச் சிதைக்க உதவுகின்றன. இவ்வுயிரினங்கள் சிதைப்பிகள் (decomposers) அல்லது மக்குண்ணிகள் (detritivores) என்று அழைக்கப்படுகின்றன. இது உயிரிகளினால் ஏற்படுத்தப்படும் ஒரு வளர்சிதை மாற்றச் செயல்முறையாகும். [2]
- வேதியியல் அல்லது இயற்பியல் செயல்முறைகளால் ஏற்படும் சிதைவு. எடுத்துக்காட்டாக நீராற்பகுத்தல்[3]