கருத்துக் கணிப்பு
கருத்துக் கணிப்பு (ⓘ) (Opinion poll) குறிப்பிட்ட மாதிரி அடிப்படையில், மக்கள் கருத்தை அறிந்துகொள்வதற்கான ஒரு ஆய்வு மதிப்பீடு ஆகும். கருத்துக் கணிப்புக்கள், பல்வேறு கேள்விகளைக் கேட்டு கிடைக்கும் பதில்களின் அடிப்படையில் மக்கள் கருத்தை நூற்றுவீதமாகவோ (விழுக்காடு) அல்லது நம்பக இடைவெளிகளாகவோ தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்படுகின்றன. தேர்தல்களில் யார் அல்லது எந்தக் கட்சி வெல்லக்கூடும் அல்லது அவர்களுக்கு மக்களிடையே எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதை முன்கூட்டியே மதிப்பிடுவதற்குப் பெரும்பாலும் கருத்துக் கணிப்புப் பயன்படுகின்றது.
வரலாறு
தொகுகருத்துக்கணிப்பு எனக் கூறத்தக்க முதல் எடுத்துக்காட்டு 1824ல் ஆன்ட்ரூ சாக்சன், சான் குயின்சி ஆடம்சு ஆகியோரிடையே இடம்பெற்ற அமெரிக்க சனாதிபதித் தேர்தலின் போது பென்சில்வேனியாவில் எடுக்கப்பட்ட ஒரு கணிப்பு ஆகும். எதிர்வு கூறியபடியே பென்சில்வேனியாவிலும், முழு அமெரிக்காவிலும் சாக்சன் வெற்றி பெற்றதால், இவ்வாறான கருத்துக் கணிப்புகள் புகழ் பெறத் தொடங்கின. ஆனாலும், இவை நகரம் போன்ற உள்ளூர் அலகுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருந்தன. 1916ல் லிட்டரரி டைஜஸ்டு நாடுதழுவிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி அமெரிக்க சனாதிபதித் தேர்தலில், வூட்ரோ வில்சனின் வெற்றியைச் சரியாக எதிர்வு கூறியது. மில்லியன் கணக்கில் அஞ்சல் அட்டைகளை அனுப்பிப் பதிலுடன் திரும்பி வருபவற்றை எண்ணிக் கணக்கிடுவதன் மூலம் 1920ல் வாரென் ஆர்டிங், 1924ல் கால்வின் கூலிட்ச், 1928ல் ஏர்பர்ட் ஊவர், 1932ல் பிராங்க்லின் ரூசுவெல்ட் ஆகியோரின் வெற்றிகளையும் டைஜஸ்ட் சரியாக எதிர்வு கூறியது.
1036ல் டைஜஸ்ட் எடுத்துக்கொண்ட "மாதிரி", 2.3 மில்லியன் மக்களைக் கொண்ட மிகப்பெரிய மாதிரியாக இருந்தபோதும், இவர்களில் பெரும்பாலோர் வசதிபடைத்த அமெரிக்கர்களாக இருந்தனர். வசதிபடைத்த அமெரிக்கர்கள் பொதுவாகக் குடியரசுக் கட்சியின் அனுதாபிகளாக இருந்தனர். இந்தப் பக்கச் சார்பு நிலையை டைஜஸ்ட் அறிந்திருக்கவில்லை. தேர்தலுக்கு ஒரு கிழமைக்கு முன்னர் வெளியான அவர்களது கருத்துக் கணிப்பு ரூசுவெட்டை விட அவருடன் போட்டியிட்ட ஆல்ஃப் லான்டனுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கூறியது. அதேவேளை ஜார்ஜ் கலப் என்பார் இன்னொரு கணிப்பை நடத்தினார். புவியியல் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறிய ஆனால் அறிவியல் அடிப்படையிலான மாதிரிகளுடன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ரூசுவெல்ட்டின் பெரும் வெற்றியை எதிர்வு கூறியது. இதன் பின்னர் தி லிட்டரரி டைஜஸ்ட்டின் விற்பனை சரிந்துவிட்டது. ஆனால், கருத்துக் கணிப்பு வளர்ச்சி பெறலாயிற்று.
எல்மோ ரோப்பர் என்பார் அறிவியல் அடிப்படையில் கருத்துக்கணிப்பு நடத்திய இன்னொரு அமெரிக்க முன்னோடி ஆவார்.[1] இவர் 1936, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் பிராங்க்ளின் டி ரூசுவெல்ட்டின் வெற்றியை மூன்று முறை சரியாக எதிர்வு கூறியிருந்தார். லூயிசு ஆரிசு என்பார் 1947ல் எல்மோ ரோப்பரின் நிறுவனத்தில் சேர்ந்து கருத்துக் கணிப்புத் துறையில் நுழைந்தார். பின்னர் இவர் அதே நிறுவனத்தில் பங்காளரும் ஆனார்.
செப்டெம்பர் 1938ல் கலப்பைச் சந்தித்த ஜான் இசுட்டொட்செல் என்பார் முதல் ஐரோப்பிய கருத்துக் கணிப்பு நிறுவனத்தைப் பிரான்சில் நிறுவினார். இவர் 1939ல் அரசியல் கருத்துக் கணிப்புகளை நடத்தத் தொடங்கினார். கலப் தனது நிறுவனத்தின் கிளை ஒன்றை ஐக்கிய இராச்சியத்தில் நிறுவி, 1945ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில், வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையிலான பழமைவாதக் கட்சியே வெற்றி பெறும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், கலப் தொழிற் கட்சியின் வெற்றியைச் சரியாக எதிர்வு கூறினார்.
1930களின் தொடக்கத்தில், விளம்பரத்துறை பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கலாயிற்று. பெரும் பொருளாதார நெருக்கடியால் வணிக நிறுவனங்கள் விளம்பரச் செலவைக் கணிசமாகக் குறைத்தன. அத்துடன், பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான அரசின் திட்டங்களும் விளம்பரத்தின் பெறுமதியையும், தேவையையும் குறைத்தன. 1930களின் இறுதியில் விளம்பர நிறுவனங்கள் தம்மீதான விமர்சனங்களுக்கு எதிரான வெற்றிகரமான தாக்குதல்களைத் தொடுத்தனர். அவர்கள் அறிவியல் அடிப்படையிலான மக்கள் கருத்துக்கணிப்பைக் கண்டுபிடித்து அதைத் தமது சொந்தச் சந்தை ஆய்வுக்கும், அரசியலை விளங்கிக்கொள்வதற்குமான முக்கிய கருவி ஆக்கியதன் மூலமும், நுகர்வோர் இறைமை என்னும் கருத்துருவுக்கு மறுவாழ்வளித்தனர். "கலப்"பும், ஏராளமான விளம்பர வல்லுனர்களும் இதற்கான வழிகாட்டிகளாக அமைந்தனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Cantril, Hadley; Strunk, Mildred (1951). "Public Opinion, 1935-1946". Princeton University Press. p. vii.