கருமுட்டை தூண்டும் இயக்குநீர்
கருமுட்டை தூண்டும் இயக்குநீர் (Follicle-stimulating hormone, FSH) ஒரு கொனடோடிரோபின் (Gonadotrophin) வகை இயக்குநீராகும். இது மனிதரிலும், ஏனைய விலங்குகளிலும் அகஞ்சுரக்கும் சுரப்பியால் (நாளமில்லாச் சுரப்பி) யால் சுரக்கப்படுகின்றது. இது முன் கபச்சுரப்பியின், இனப்பெருக்க அலகுகளைத் தோற்றுவிக்கும் தொழிற்பாட்டைக் கொண்ட பகுதியால் சுரக்கப்படுகின்றது. ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புக்களின் வளர்ச்சி, விருத்தி, பருவமடைதல் போன்றவற்றிலும், இனப்பெருக்க செயற்பாடுகளிலும் பங்கு கொள்கின்றது.
மனிதனின் FSH என்பது ஒரு சிறிய கிளைகோபுரதம் ஆகும். பெண்களில், இது செயல்படும் உறுப்பு, சூலகங்களாகும். இது சூலகத்தில் கருமுட்டைகள் உருவாக்கம் வளர்ச்சியைத் தூண்டுகின்றது. ஆண்களில் விதைப்பைகளில் (விந்தகங்களில்) செயல்பட்டு, விந்தக நுண்குழல்களில் உள்ள விந்தணு உற்பத்தி செய்யும் புறவணியிழைய அடுக்கைத் தூண்டுகிறது. இதனால் விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. எஸ்டிரோஜன் சுரப்பையும் தூண்டுகிறது.