இனப்பெருக்கம்
பெற்றோர் உயிரினத்தில் இருந்து, புதிய உயிரினங்கள் தனியன்களாக உருவாகும் உயிரியல் செயல்முறை இனப்பெருக்கம் எனப்படும். இனபெருக்கம் என்பது உயிரினங்களின் அடிப்படை சிறப்பியல்புகளில் ஒன்று. இதன்மூலம் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நுண்ணுயிர்கள், பூச்சிகள், தாவரங்கள், விலங்குகள், எனப் பல்வேறு வகையான உயிரினங்கள் இருந்தும், அவைகளின் இனப்பெருக்க நடைமுறைகள் வெவ்வேறாகத் தோன்றுகின்றன. ஆனால் பொதுவாக, அவை கலவிமுறை இனப்பெருக்கம் மற்றும் கலவியற்ற இனப்பெருக்கம் என இருவகைப்படும்.
பாலிலா (அ) கலவியற்ற இனப்பெருக்க முறையில் ஒரு உயிரினம் மற்றொன்றின் பங்களிப்பு இல்லாமல் சார்பற்று இனப்பெருக்கம் செய்ய இயலும். பாலிலா இனப்பெருக்கத்தில் ஒரு செல் உயிரிகளுக்கென்று வரையறைகள் கிடையாது.ஓர் உயிரினத்தின் ஒத்த படியாக்கமானது பாலிலா இனப்பெருக்கத்தின் வடிவமாகும். உயிரினங்களின் பாலிலா இனப்பெருக்கத்தில் மரபொத்த அல்லது ஒரே மாதிரியாக சேய்கள் படியெடுக்கப் படுகின்றன. பாலினப் பெருக்கத்தின் பரிணாம வளர்ச்சியானது உயிரியலாளர்களுக்கு இன்றும் புதிராகவே உள்ளது. பாலினப் பெருக்கத்தின் இருமடித்தொகையில் (Two-Fold Cost) 50% மட்டுமே உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.[1] இவற்றின் மரபுப்பரிமாற்றமும் பாதியளவே (50%) உள்ளது.[2] ஏனெனில் ஆண் பாலினம் சேய்களை நேரடியாக உற்பத்தி செய்வதில்லை. இதனால் எண்ணிக்கையும் பாதியளவாகவே உள்ளது.
பாலினப்பெருக்கத்தில் இரு உயிரிகளின் பாலணுக்களின் (Gamete) இடைவிளைவு தேவைப்படுகின்றது. ஒரு இயல்பான உயிரணுவின், குன்றல் பகுப்பு மூலம் உருவாக்கப்படும் பாதியளவு நிறப்புரிகளையே (Chromosome) இப்பாலணுக்கள் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட இனத்தின் ஆண் பாலணு, பெண் பாலணுவுடன் கருவுறுதலினால் கருவணுவை உருவாக்கும். இதனால் சேய் பெற்றொர்களின் மரபுப் பண்புகளைப் பெறுகின்றது.
பாலிலா (அ) கலவியற்ற இனப்பெருக்கம்:
தொகுஇருபாலரின் பாலணுக்களின் சேர்க்கையின்றி, மரபுப்பரிமாற்றமில்லாமல் தனிப்பட்ட முறையில் பெருகும் முறை பாலிலா (அ) கலவியற்ற இனப்பெருக்கம் ஆகும். பெரும்பாலான ஓர் உயிரணுக் கொண்ட (unicellular) உயிரினங்கள், பாக்டீரியா, பூஞ்சை வகைகள், மற்றும் சில தாவரங்கள் இவ்வாறாக இனப்பெருக்கம் செய்கின்றன.
கலவியற்ற இனப்பெருக்கம் பொதுவாக ஆறு வகைப்படும்.
உயிரணுப் பிளவு
தொகுஉயிரணுப்பிளவின் முக்கியமானது இருக்கூற்றுப் பிளவாகும். இப்பிளவில் பெற்றோரிடமிருந்து இரு சேய் உயிரினங்கள் உருவாகின்றன. நிலைக்கருவிலிகள்(ஆர்க்கியா,பாக்டீரியா), இவ்வாறான இருகூற்றுப்பிளவு முறையிலேயே இனப்பெருக்கம் செய்கின்றன. சான்றாக சில மெய்க்கருவுயிரிகள் (அதிநுண்ணுயிரி, ஓர் உயிரணுக் கொண்ட பூஞ்சைகள்) ஆகியவை இம்மாதிரியான பண்பொத்த இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றுள் பெரும்பாலனாவை பாலினப்பெருக்கம் மேற்கொள்ளும் திறன் பெற்றவை.
சில உயிரினங்களின், கலவியற்ற இனப்பெருக்கத்தில், ஓர் உயிரியிலிருந்து பிறந்த அனைத்து உயிரிகளுமே, மூல உயிரியின் மரபணுக்களைக் கொண்டே பிறக்கும். இவ்வகையில் புதிய மரபுப் பொருட்களின் சேர்க்கை இல்லாததால், இதனை ஒருவகை படியெடுப்பு என்றே கூறலாம். பல பாக்டீரியாக்கள், உயிரணுப்பிளவு மூலம் நகல்களாகின்றன. சில பாக்டீரியாக்களில் வெளியில் இருந்து மரபணுக்கள் உட்செலுத்தப்படுவதன் மூலம், மரபணுத்தொகை விரிவாக்கம் செய்யப்படுவதாலோ அல்லது மாற்றம் செய்யப்படுவதாலோ கலவியற்ற இனப்பெருக்கத்திலிருந்து சிறிது வேறுபட்ட இனப்பெருக்கம் நிகழ்கின்றது. இங்கு உயிரணுவில் இருக்கும் டி.என்.ஏ. நகர்வு மூலம் உயிரணுப் பரிமாற்றம் நிகழ்கின்றது. பல பாக்டீரியாக்களுக்கிடையே உயிரணுப் பரிமாற்றம் நடக்கும் போதும், இவ்வகை பெருக்கம் இருபாலரின் பாலணு இல்லாததனால், கலவியற்ற இனப்பெருக்கமாகவே கருதப்படுகிறது. இங்கு புதியதாகத் தோன்றும் பாக்டீரியாக்கள், பல பாக்டீரியாக்களின் உயிரணுக்களால் ஆனவை, நகல்கள் அல்ல.[3] உயிரணுப் பரிமாற்றத்தின் பின் மீண்டும் உயிரணுப் பிளவின் மூலம் தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன.
அரும்பு விடுதல் இனப்பெருக்கம்
தொகுசில உயிரணுக்கள் அரும்புவிட்டு பெருகுகின்றன (எ.கா. ஈஸ்ட்). தாயிடமிருந்து சேய் உயிரணு கிளைத்தல் மூலம் பெருகுகின்றன. சேய் உயிரி தாயை விட சிறியதாய் இருக்கும். அரும்புவிடும் இனப்பெருக்கம் பல்லுயிரணு விலங்குகளிலும் காணப்படுகிறது (எ.கா. ஹைட்ரா). முதிர்ந்த இச்சேய்கள் அரும்புவிட்டு தாய் உயிரினத்திலிருந்து முறிந்து விடுகின்றன.
உள்ளிருந்து அரும்பு விடுதலும் பாலிலா இனப்பெருக்கம் ஆகும். அதாவது உள்ளிருந்து அரும்பு விடல் சில ஒட்டுண்ணிகளில் காணப்படுகிறது (எ.கா. டோக்ஸோபிளாஸ்மா கோண்டீ. இது பெரும்பாலும் சில மாறுபாட்டுடன் காணப்படுகிறது. தாயிடமிருந்து அரும்புவிட்டு இரு சேய்கள் (அ) பல சேய்கள் கிழித்து வெளிவருகின்றன.
பதியமுறை இனப்பெருக்கம்
தொகுதாவரங்களில் நுண்வித்திகள், விதைகளில்லாப் பெருக்கம், பதியமுறை இனம்பெருக்கம் எனப்படும். பதியம் வைத்தல் மூலம் இவ்வினப்பெருக்கம் செய்யப்படுகிறது. தாவரப்பகுதிகளான இலைகள், தண்டுகள், தண்டுக் கிழங்குகள் / நிலத்தடித் தண்டுகள், அடித்தள தளிர்கள், கிழங்குகள், வேர்த்தண்டுக்கிழங்குகள், நிலம்படர் ஓடுதண்டுகள், குமிழ்த் தண்டுகள் மற்றும் மொட்டுகள் போன்றவை பதிய முறையில் இனப்பெருக்கம் செய்ய உதவும் உறுப்புகளாகும்.
நுண்வித்திமுறை இனப்பெருக்கம்
தொகுஸ்போரோஜெனிசிஸ் (அ) நுண்வித்தி முறை இனப்பெருக்கம் என்பது ஸ்போர்கள் (நுண்வித்திகள்) மூலம் இனப்பெருக்கம் செய்தலாகும். பெரும்பாலான மெய்க்கருவுயிரிகளின் (தாவரங்கள், பாசிகள், பூஞ்சைகள்) இயல்பான வாழ்க்கைச் சுழற்சியில் இவ்வகையான இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
செயலற்ற நுண்வித்திகள் இத்தகைய இனப்பெருக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படுகின்றன. சில பாசி, பூஞ்சைகளில் இந்நுண்வித்திகள் சாதகமான சூழலில் வளர ஆரம்பிக்கின்றன. பெரும்பாலான மெய்க்கருவுயிரிகளின் நுண்வித்திகள் கலப்பிரிவுகளினால் ஒருமடியநிலையிலும், சிலவற்றில் கல இணைவுகளினால் இருமடியநிலையிலும் உள்ளன.
பாசிகள், தாவரங்களில் ஒடுக்கற்பிரிவு மூலம் இருமடியநிலையிலிருந்து ஒருமடியநிலை நுண்வித்துகள் உற்பத்தியாகின்றன. எனினும் கருக்கட்டல் நிகழாததால் இது கலவியற்ற இனப்பெருக்கமாகவே கருதப்படுகிறது. மேலும் பூஞ்சைகள், சில வகைப்பாசிகளில் இழையுருப்பிரிவின் மூலம் மடியநிலை மாற்றாமின்றி முழுமையான நுண்வித்துருவாக்கம் நிகழ்கிறது. இந்நுண்வித்துகள் பரவலடைந்து புதிய தனியன்களாக வளர்ச்சியடைகின்றன.
துண்டாதல்முறை இனப்பெருக்கம்
தொகுபெற்றோர்களிடமிருந்து ஒருபகுதி துண்டாதல் முறையினால் சேய்களாக உருவாக்கப்படுகின்றன. துண்டாகிப் பிரியும் ஒவ்வொரு சிறு பகுதியும் தனியன்களாக வளர்ச்சியடைகின்றன. இவை பெற்றோரின் படியெடுப்புகளாகும்.
துண்டாதல் முறை திட்டமிடப்பட்டோ (அ) திட்டமிடப்படாமலோ, இயற்கைக் காரணிகள், ஊன் உண்ணிகளிடமிருந்து தற்காத்து இனத்தைப் பெருக்கிகொள்ளவும் பின்பற்றியிருக்கவியலும். பெற்றோரிடமிருந்து உடலத்தின் சிறு பகுதி (அ) உறுப்பு எளிதில் உடைந்து பிரிந்து தக்க சூழலில் புதிய உயிரினமாக மீளமைகின்றன.
நீளிழை சயனோபாக்டீரியாக்கள், பசைக்காளான்கள், லைகன்கள்(பூஞ்சைப்பாசிகள்), தாவரங்கள், பஞ்சுயிரிகள், உடற்குழியுடைய புழுக்கள், வளையப் புழுக்கள் மற்றும் நட்சத்திர மீன் போன்ற விலங்குகள் துண்டாதல் முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன.
பால் கலப்பில்லாதமுறை இனப்பெருக்கம்
தொகுஆண் பாலணுத்தொடர்பின்றி பால்கலப்பில்லாத முறையில் நிகழும் இனப்பெருக்கம், கன்னிப்பிறப்பு, கலப்பில்லா வித்தாக்கம் போன்றவை ஆகும்.
கன்னிப்பிறப்பு
தொகுபார்த்தனோஜெனிசிஸ் (அ) கன்னிப்பிறப்பு எனப்படுவது ஆண் பாலணுவுடன் கருக்கட்டல் நிகழாமலேயே பெண் பாலணு முளையாக விருத்திக்குட்பட்டு சேயை உருவாக்குதலாகும். பல்கல உயிரினங்களில், முதுகெலும்பிலிகளான சிலவகை சமூகவாழ் பூச்சியினங்கள் (எறும்புகள், தேனீக்கள் போன்றவை, முதுகெலும்பிகளான சிலவகையான மீன்கள், ஊர்வன[4], அரிய சில பறவைகள்[5] போன்றவை கன்னிப்பிறப்பு எனும் வகையான கலவியற்ற இனப்பெருக்கம் செய்கின்றன. ஆண் புணரி அணுக்கள் இல்லாமல் கரு உருவாகும்முறை என்பதால் கன்னிப்பிறப்பு எனப்படுகின்றது. கொமொடொ டிராகன் கன்னிப்பிறப்பு மூலம் பெருகக்கூடியவை எனக் கண்டறிந்துள்ளனர்[6].
கலப்பில்லா வித்தாக்கம்
தொகுஅபோமிக்சிஸ் (அ) கலப்பில்லா வித்தாக்கம் எனப்படுவது கருக்கட்டல் நிகழாமலேயே புதிய இருமடியநிலை நுண்வித்திகள் உருவாக்குதலாகும். [[பன்னம்}பன்னத்திலிம்]], சிலவகை பூக்கும் தாவரங்களில் இவ்வகை இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
- பாலணுசார் கலப்பில்லா வித்தாக்கம் : ஒடுக்கற்பிரிவு முழுமையடையாத நிலையில் உருவான இருமடியநிலையிலுள்ள கருக்கட்டாத சூல் முட்டையிலிருந்து முளையம் உருவாதல்.
- மையக்கல முளையாக்கம் : முளையப்பையச் சூழ்ந்துள்ள இருமடியநிலையிலுள்ள கருக்கட்டாத நிலையில் மையக்கல இழையத்திலிருந்து முளையம் உருவாதல் ஆகும். சில ஆரஞ்சு, நாரத்தைத் தாவரங்களில் இவ்வகை மையக்கல முளையாக்கம் நிகழ்கிறது.
பாலினப் பெருக்கம் (அ) கலவிமுறை இனப்பெருக்கம்
தொகுஆண், பெண் புணரி உயிரணுக்கள் உருவாகி அவற்றுக்கிடையிலான இணைவின் முலம் இனப்பெருக்கம் நிகழ்ந்து, உயிரினம் பெருக்கம் அடைவதாகும்.
கலப்புச் சினையுறல்
தொகுஇரு பெற்றோரின் பாலணுக் கலப்பின் மூலம் சேய் உற்பத்தியாகும் முறை அல்லொகேமி (அ) கலப்புச்சினையுறல் ஆகும். ஒரு தாவரத்தின் மகரந்தம், வேறொரு தாவரத்தின் சூலகத்துடன் அயல் மகரந்தச்சேர்க்கை செய்தல் இவ்வகையாகும்[7]
தன்னினக் கலப்பு
தொகுதன்னினத்தினுள்ளேயே கலப்பினம் மேற்கொள்ளுதல், சான்றாக இருபாலினத் தாவரங்களின் பூக்களில் மகரந்தம், சூலகம் கொண்டு ஒரே தாவரத்தில் தனக்குள்ளேயே இனப்பெருக்கமடையச் செய்தல் ஆகும். இத்தாவரங்களில் தன்மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.
கலப்பிரிவு
தொகுகுன்றல் பிரிவு, குன்றாப் பிரிவு போன்றவை கலப்பிரிவின் வகைகளாகும். இச்செயல்முறை இனப்பெருக்கத்தின் போது நிறப்புரிகளில் சிலவகை குறிப்பிடத்தகுந்த மாற்றத்தினை உருவாக்குகின்றன.
மறைமுகப் பிரிவு (அ) குன்றா பிரிவு
தொகுஇழையுருப்பிரிவு முறையில் இயல்பான உயிரணுக்களின் எண்ணிக்கையிலிருந்து ஒன்றையொன்று ஒத்த ஒரே மாதிரியான இரு உயிரணுக்கள் தோன்றுவதுடன், ஒவ்வொரு உயிரணுவிலும் காணப்படும் நிறப்புரிகளும், அதனைச்சார்ந்த மரபியல் உள்ளடக்கமும் பெற்றோரின் உயிரணுவை ஒத்ததாகக் இருக்கும்.
ஒடுங்கற்பிரிவு (அ) குன்றல் பிரிவு
தொகுஒரு உயிரணுவில் உள்ள பல நிறப்புரிகள் பாதியாக உடைகின்ற நிகழ்வு ஒடுக்கப்பிரிவின் செயல்பாடு ஆகும். ஒடுக்கற்பிரிவு முக்கியமாக கலவி இனப்பெருக்கத்திற்கு இன்றியமையாததாக உள்ளது. எனவே பாலியல் ரீதியாக மீண்டும் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மெய்க்கருவுயிரிகளிலும் (ஒரு உயிரணு உயிரினங்கள் உட்பட) இம்முறையில் நிகழ்கிறது.
ஓரினப் பெருக்கம்
தொகுஆண் மற்றும் பெண் இருபாலினப்பகுப்பின்றி ஒரே இனத்திலிருந்து அதன் சேய்களை உருவாக்குதல் ஓரினப்பெருக்கம் ஆகும். இது ஆணின் அண்டத்திலோ, பெண்ணின் விந்தகத்திலோ அதற்குள்ளேயே நிகழலாம்[8]. சப்பானிய அறிஞர்கள் கோழிகளில் பெண் விந்தணுக்களை உற்பத்தி செய்துள்ளனர். இதன் மூலம் ஒரே இனத்தில் பாலினப்பெருக்கம் செய்ய இயலும். மரபணுக்களில் சில மாற்றங்களைச் செய்து இரு எலிகளின் கரு முட்டையினின்று ஒரு பெண் சேயை உருவாக்கியுள்ளனர். [9]
பாலின மற்றும் பாலிலா இனப்பெருக்க மாறுபாடுகள்
தொகுசிலவகை உயிரினங்களின் சூழலுக்குத் தகுந்தாற் போல் அரிய வகையில் பாலின, பாலிலா இனப்பெருக்கத்தினை மாற்றாக மேற்கொள்கின்றன. சான்றாக வட்டுயிரிகள் (ரோடிஃபெர்ஸ்), சில வகைப்பூச்சி இனங்கள் (செடிப்பேன்கள்)
மேற்கோள்கள்
தொகு- ↑ Ridley M (2004) Evolution, 3rd edition. Blackwell Publishing, p. 314.
- ↑ John Maynard Smith The Evolution of Sex 1978.
- ↑ Narra HP, Ochman H (2006). "Of what use is sex to bacteria?". Current Biology 16: R705–710. doi:10.1016/j.cub.2006.08.024. பப்மெட்:16950097.
- ↑ Halliday, Tim R. (1986). Reptiles & Amphibians. Torstar Books. pp. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-920269-81-8.
{{cite book}}
:|pages=
has extra text (help); Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Savage, Thomas F. (September 12, 2005). "A Guide to the Recognition of Parthenogenesis in Incubated Turkey Eggs". Oregon State University. பார்க்கப்பட்ட நாள் 2006-10-11.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Parthenogenesis in Komodo dragons"Watts PC, et al. . Nature 444, p1021, 2006.
- ↑ "கலப்புச்சினையுறல்". பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2017.
- ↑ "Timeline of same-sex procreation scientific developments". samesexprocreation.com.
- ↑ "Japanese scientists produce mice without using sperm". Washington Post (Sarasota Herald-Tribune). April 22, 2004. https://news.google.com/newspapers?id=nUIgAAAAIBAJ&sjid=wYQEAAAAIBAJ&pg=6950,1352704&dq=japanese+scientists+combine+two+mouse+eggs+to+produce+daughter+mice&hl=en.