சூல் (தாவர சூல்) (Ovule) என்பது வித்துத் தாவரங்களில், பெண் இனப்பெருக்க உயிரணுக்களாக உருவாகும் ஒரு அமைப்பாகும். இவையே இனப்பெருக்க செயல்முறையின்போது, மகரந்தத்தில் உள்ள ஆண் பாலணுக்களுடன் இணைந்து கருக்கட்டல் நடைபெற்ற பின்னர், வித்தாக உருவாகின்றது.

பூவொன்றின் உள்ளே சூல்கள் காணப்படும் இடம்

பூக்கும் தாவரங்களில் இந்த சூல்கள் பூக்களின் உள்ளே காணப்படும் சூலகம் என்னும் பகுதியினுள்ளே அமைந்திருக்கும். சூலகத்தினுள்ளே, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சூல்கள் காணப்படலாம். அவை சூலகத்திலுள்ள சூல்வித்தகத்துடன் சூல் காம்பு (Funiculus) என்னும் ஒரு காம்பு போன்ற பகுதியினால் (விலங்குகளில் உள்ள தொப்புள்கொடிக்கு இணையான அமைப்பு) இணைக்கப்பட்டிருக்கும். கருக்கட்டலின் பின்னர் உருவாகும் கருவணுவே, பின்னர் வித்தாக விருத்தியடையும். வித்தைச் சூழ்ந்திருக்கும் சூலகத்தின் ஏனைய பகுதிகள் பழமாக விருத்தியடையும்.

வித்துமூடியிலித் தாவரங்களில், இந்த சூல்கள் மூடப்படாத நிலையில் காணப்படும்.

வெவ்வேறு தாவரங்களில் இவற்றை வெவ்வேறு வடிவங்களில் காணலாம்.

சூலின் பகுதிகளும், விருத்தியும்தொகு

 
சூலின் அமைப்பு 1: மூலவுருப்பையகம் 2: சூவித்தடி 3: சூல்காம்பு 4: raphe
 
தாவர சூல் அமைப்பு: வித்துமூடியிலியின் சூல் (இடப்புறம்), சூலகத்தின் உள்ளே இருக்கும் பூக்கும் தாவரத்தின் சூல் (வலப்புறம்)
 
en:Botanical Museum Greifswald இல் வைக்கப்பட்டுள்ள வெவ்வேறு சூல் மாதிரிகள்

சூலானது உட்புறமாக மாவித்திக் குழியம் (megasporocyte) என்னும் பகுதியையும், அதனைச் சூழ்ந்திருக்கும் மூலவுருப்பையகம் (nucellus) என்னும் பகுதியையும், வெளிப்புறமாக ஒரு உறை போன்று பாதுகாப்பிற்காக அமைந்த சூலுறை (integument) என்ற பகுதியையும் கொண்ட ஒரு அமைப்பாகும். சூலின் நுனிப் பகுதியில் விந்து உட்செல்வதற்காக சூல்துளை (micropyle) எனப்படும் ஒரு துளை காணப்படும். இந்தத் துளைக்கு எதிர்ப் புறத்தில், மூலவுருப்பையகமானது சூலுறையுடன் இணையும் பகுதி சூல்வித்தடி (chalaza) என அழைக்கப்படும். சூலுறையானது வித்துமூடியிலித் தாவரங்களில் ஒரு படலமாகவும், பூக்கும் தாவரங்களில் இரு படலங்களாகவும் காணப்படும். மேலும் பூக்கும் தாவரங்களில இருக்கும் சூல்கள், சூல் காம்பு (Funiculus) என்னும் ஒரு காம்பு போன்ற பகுதியினால் சூலகச் சுவரில் பிணைக்கப்பட்டிருக்கும். கலன் இழையம் மூலம் எடுத்து வரப்படும் சூலுக்குத் தேவையான ஊட்டச்சத்தானது, சூல்காம்பு மூலமாகச் சென்று சூலுறையை ஊடறுத்துச் சென்று, சூவித்தடி மூலமாக மூலவுருப்பையகத்தை அடையும்.

சூலில் உள்ள இழையமானது ஆரம்பத்தில் இருமடிய நிலையில் காணப்படும். பின்னர் சூலின் உட்புறமாக இருக்கும் மாவித்திக் குழிய உயிரணுவில் ஏற்படும் ஒடுக்கற்பிரிவு எனப்படும் கலப்பிரிவு செயல்முறை மூலம், ஒருமடிய மாவித்தி (Megaspores) எனப்படும் சூல்முட்டை உயிரணுக்களை உருவாக்கும். இந்த ஒருமடிய உயிரணுக்கள் விந்து உயிரணுக்களுடன் ஏற்படும் கருக்கட்டலின் பின்னர், மீண்டும் இருமடிய கருவணுக்களை உருவாக்கும். பின்னர் இழையுருப்பிரிவு எனப்படும் கலப்பிரிவு செயல்முறையினால் அது அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கான முளையமாக விருத்தியடையும். பூக்கும் தாவரங்களில், இரண்டாவது உயிரணு ஒன்று, மாவித்திக்குழியத்தில் இருக்கும் வேறொரு கருவுடன் இணைந்து பல்மடிய நிலையிலுள்ள வித்தகவிழையத்தை உருவாக்கும். இங்கு இந்த பல்மடியமானது பொதுவாக மும்மடியமாகக் காணப்படும். இந்த வித்தகவிழையம் இளம் முளையத்திற்குத் தேவையான ஊட்டச்சத்தை சேமித்து வழங்கும் இடமாக அமைந்திருக்கும்.

சூலகத்தினுள் சூல்களின் அமைவிடம்தொகு

வித்து மூடியிலிகளில், இலைகள் அல்லது கூம்புகளின் மேற்பரப்பில் உள்ள செதில்களுடன் இணைக்கப்பட்ட நிலையில் சூல்கள் காணப்படும்.

பூக்கும் தாவரங்களில், பூக்களின் உள்ளே இருக்கும் சூலகத்தின் உள்ளே இந்த சூல்கள் காணப்படும். ஒரு சூலகத்தினுள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட சூல்கள் காணப்படலாம். சூலகமானது விருத்தியின்போது, பழமாக மாற்றமடைகின்றது. சூலானது வெவ்வேறு தாவரங்களில், வெவ்வேறு வகையில் சூலகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.[1][2][3][4]

நுனிக்குரிய சூலிணைப்பு (Apical Placentation)தொகு

இதில் சூலகத்தின் நுனிப் பகுதியில் உள்ள சூல்வித்தகத்தில் சூல்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

அச்சுக்குரிய சூலிணைப்பு (Axile Placentation)தொகு

சூலகமானது ஆரைக்குரிய விதத்தில் பிரிக்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட சூலக அறைகளைக் கொண்டிருக்கும். சூலகத்தில் அறைகள் இணைக்கப்பட்டிருக்கும் இடத்தில் மையமாக இருக்கும் சூல்வித்தகத்தில், சூல்கள் வெவ்வேறு அறைகளினுள் பிணைக்கப்பட்டிருக்கும். எ.கா. Hibiscus, கிச்சிலி, தக்காளி பேரினம்

அடிக்குரிய சூலிணைப்பு (Basal Placentation)தொகு

இங்கு சூலானது சூலகத்தின் அடியிலுள்ள சூல்வித்தகத்தில் பிணைக்கப்பட்டிருக்கும். எ.கா. Sonchus, Helianthus, Compositae

பிணைப்பற்ற-மைய சூலிணைப்பு (Free-Central Placentation)தொகு

ஆரைப்பிரிப்புகள் அழிந்து, மைய அச்சில் பிணைக்கப்பட்ட சூல்களைக் கொண்டிருக்கும். எ.கா. Stellaria, Dianthus


விளிம்புக்குரிய சூலிணைப்பு (Marginal Placentation)தொகு

இங்கு சூலகத்தின் பக்கச் சுவரில் நீளமாக அமைந்துள்ள சூல்வித்தகத்தில் சூல்கள் இணைக்கப்பட்டிருக்கும். எ.கா. Pisum

சுவருக்குரிய சூலிணைப்பு (Parietal Placentation)தொகு

பிரிக்கப்படாத ஒரு அறையுள்ள நிலையிலோ, அல்லது பிரிக்கப்பட்ட அறைகளைக் கொண்ட நிலையிலோ சூலகத்தின் உட்சுவரில் சூல்கள் பிணைக்கப்பட்டிருக்கும். எ.கா. Brassica


சிலசமயம் சூல்வித்தகம் மையத்திலிருந்து அறையினுள் உள்நோக்கி நீண்டு அதில் சூல்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

மேலோட்டமான சூலிணைப்பு (Superficial Placentation)தொகு

இது அச்சுக்குரிய சூலிணைப்பு போன்றது. ஆனால், சூல்வித்தகம் மையத்திலிருந்து அறையினுள் உள்நோக்கி நீண்டு அதில் சூல்கள் இணைக்கப்பட்டிருக்கும். எ.கா. Nymphaea

இவற்றுடன், இவ்வகைகளில் ஒன்றுடன் மற்றொன்று இணைந்தபடியான வகைகளும் உண்டு.

  • அச்சு-சுவருக்குரிய சூலிணைப்பு (Parietal-Axile Placentation)
  • அடுக்கு-அச்சுக்குரிய சூலிணைப்பு (Laminar- axile Placentation)
  • நுனி-அச்சுக்குரிய சூலிணைப்பு (Apical-Axile Placentation)

சூல்களின் வகைகள்தொகு

 
சூலின் வகைகள்

சூல் வளர்ந்து கொண்டிருக்கும்போது, அதன் அமைப்பில் பல கோணங்களில் வளைவுகளை ஏற்படுவதன் மூலம் அதன் சூல்துளை மற்றும் சூல்காம்பு அமையும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு ஆறு வகையாக அறியப்பட்டு பின்வருமாறு பெயரிடப்பட்டுள்ளது.[5]

நேர்த்திருப்பமுள்ள சூல் (Orthotropous ovule)தொகு

இந்த வகையில், சூல்துளை மற்றும் சூல்காம்பு ஆகிய இரண்டும் ஒரே நேர் கோட்டில் அமையும் விதத்தில் இருக்கும். குறிப்பாக பாலிகோனேசி, பைபெரேசி போன்ற குடும்ப தாவரங்களில் இந்த வகை சூலானது காணப்படுகின்றது.

கவிழ்ந்திருக்கின்ற சூல் (Anatropous ovule)தொகு

இந்த வகையில் சூல்துளையானது, சூல் காம்பிற்கு மிக அருகாமையில் அமையும் விதத்தில், சூலின் உடலம் வளைந்து தலைகீழாகக் கவிழ்ந்து காணப்படும். குறிப்பாக கேமோபெட்டல்லே குடும்ப தாவரங்களில் இந்த வகை சூலானது காணப்படுகின்றது.

பகுதி-கவிழ்ந்திருக்கும் சூல் (Hemi-anatropous ovule)தொகு

இந்தவகையில் மூலவுருப்பையகத்திற்கும், சூலுறைக்கும் நேர் செங்குத்தாக சூல் காம்பு அமையும் விதத்தில் சூலின் உடலம் வளைந்து திரும்பிவாறு காணப்படும். எனவே சூல் உடலம் கிடைமட்டமாக அமைந்து காணப்படும். குறிப்பாக மால்பிஜியேசி மற்றும் பிரிமுலேசி குடும்ப தாவரங்களில் இந்த வகை சூலானது காணப்படுகின்றது.

வளைந்த திருப்பமுள்ள சூல் (Campylotropous ovule)தொகு

இந்த வகை சூலின் உடலம் சிறிதே வளைந்து சூல்துளை மட்டும் தலைகீழாக அமைந்த காணப்படும். சூலின் அடிபகுதி இடம் மாறுவதில்லை. ஆகையால் இந்தவகையில் சூல்துளை, சூல் காம்பிற்கு அருகாமையில் வந்தமைவதில்லை. இந்தவகை சூல்கள் கப்பாரிடேசி, லெகுமினோசி மற்றும் கீனபோடியேசி குடும்ப தாவரங்களில் காணப்படுகின்றது.

பாதி கவிழ்ந்த சூல் (Amphitropous ovule)தொகு

இவ்வகையில் சூலின் அடிப்பகுதி இடம்பெயராதவாறு சூல் வளைகிறது, ஆனால் சூல் உடலமானது குதிரை லாடம் போன்ற வடிவில் அமையும் விதத்தில் சூலின் உடலம் வளைந்து சூல்துளை, சூல் காம்பிற்கு அருகாமையில் வந்தமைகிறது. இந்தவகை சூல்கள் அலிஸ்மேசி மற்றும் புட்டமேசி குடும்ப தாவரங்களில் காணப்படுகின்றது.

சுருள்வடிவச் சூல் (Circinotropous ovule)தொகு

இந்த வகை சூலானது தலைகீழாகக் கவிழ்ந்து, பின் சூல் காம்பு மட்டும் மேலும் தொடர்ந்து வளர்வதால், சூல்துளை மீண்டும் மேல்நோக்கி அமையும் விதத்தில் சூல் ஒரே சுற்றாகச் சுற்றி வளைந்தவாறு வளர்கிறது. கேக்டேசி குடும்ப தாவரங்களில் மட்டும் இவ்வகை காணப்படுகின்றது.

மேற்கோள்கள்தொகு

  1. "Placentation". ENCYCLOPÆDIA BRITANNICA. 11 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. "PLACENTATION IN ANGIOSPERMIC PLANTS". 11 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Top 6 Types of Placentation (With Diagram)". 11 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது. Text " Plants " ignored (உதவி)
  4. "Describe the various types of placentations". 2018-08-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Ovule". Biology Dictionary. 11 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.

உசாத்துணைகள்தொகு

1.ஆஞ்ஜியோஸ்பெர்ம்களின் கருவியல், வி.கே. பப்ளிசிங் ஹவுசஸ், சென்னை.
2.ISC Biology Book-II For Class-XII, Author: Dr. P.S. Verma,s. Chand Publishing.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூல்&oldid=3555357" இருந்து மீள்விக்கப்பட்டது