முளையம் (embryo) எனப்படுவது, மெய்க்கருவுயிரி (Eukaryote) உயிரினங்களில், ஆண், பெண் பாலணுக்கள் கருக்கட்டலுக்கு உட்பட்டு உருவாகும் கருவணுவானது, தனது முதலாவது கலப்பிரிவின் பின்னர், பிறப்பு அல்லது குஞ்சு பொரித்தல், அல்லது முளைத்தல் வரை கொண்டிருக்கும் இருமடிய, பல்கல ஆரம்ப விருத்தி நிலையாகும். கருவணுவிலிருந்து முளையம் உருவாகி விருத்தியடைவதனை முளைய விருத்தி என்பர்.

தவளையின் முளையங்கள் (ஒரு தவளைக்குஞ்சும் இருக்கிறது) (Rana rugosa)

மனிதரில் கருக்கட்டலின் பின்னர் 8 வாரங்கள் வரைக்குமே பொதுவாக முளையம் என அழைக்கப்படும். கருக்கட்டலின் அதன் பின்னர் அல்லது முதிர்கரு என அழைக்கப்படுகிறது. முளையத்தைப் பற்றிய படிப்பு முளையவியல் எனப்படும்.

பாலியல் தொடர்பு மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்களில், விந்தானது, சூல்முட்டையுடன் கருக்கட்டிய பின்னர் தோன்றும் கருவணுவானது, இரு பெற்றோரிடமிருந்தும் அரை அரைவாசி டி.என்.ஏ.யைக் கொண்ட இருமடிய உயிரணுவாக இருக்கும். இது பின்னர் இழையுருப்பிரிவு எனப்படும் கலப்பிரிவுக்கு உட்பட்டு பல்கல நிலையில் விருத்தியடையும். இந்த செயல்முறையால் தனியன் உருவாதலுக்கான ஆரம்பநிலையே முளையமாகும்.

மனிதரின் முளையம்

தொகு
 
முளையத்தின் 6 ஆவது கிழமை அல்லது, கருத்தங்கும் காலத்தின் 8 ஆவது கிழமை
 
பலோப்பியன் குழாயில் தவறுதலாக பதிந்த 10mm முளையம், இந்த முளையம் 5 கிழமைகள் வளர்ச்சியுற்றது.

ஒரு பெண் கருவுற்றிருப்பின், அந்தப் பெண்ணுக்கு மாதவிடாய் வருவது நின்றுபோன நாளிலிருந்து கருத்தங்கும் காலம் கணிக்கப்படும். அதாவது இறுதியாக மாதவிடாய் வந்த நாளிலிருந்து நாட்கள் கருத்திற்கெடுக்கப்படும். ஆனால் கருவானது உருவாகி கருப்பையில் தங்கும் நாள், அதாவது கருத்தரிப்பு, உண்மையில் இரு கிழமைகள் பின்னரே நடைபெறும். இதனால் முளையத்தின் வயது, கருத்தங்கும் காலத்திலிருந்து இரு கிழமைகள் பிந்தியே இருக்கும்.

முளைய வளர்ச்சிப் படிநிலைகள்

தொகு
1-3 கிழமை

கருக்கட்டல் நடைபெற்று 5-7 நாட்களில் கருவானது, கருப்பையின் சுவரில் பதியும். தாயின் உடலுக்கும், முளையத்துக்குமான தொப்புட்கொடி உட்பட்ட பிணைப்பு ஏற்படுத்தப்படும். முளையமானது ஒரு நடு அச்சைச் சுற்றி விருத்தியடையும்போது, அந்த அச்சானது முண்ணாணாக விருத்தியாகும். மூளை, முள்ளந்தண்டு வடம் அல்லது முண்ணாண், இதயம், இரையக குடற்பாதை என்பன உருவாகத் தொடங்கும்[1].

4-5 கிழமை

முளையத்திலிருந்து சுரக்கப்படும் வேதியியல் பொருட்கள் பெண்களின் மாதவிடாய் வட்டத்தை நிறுத்தும். மூளைத் தொழிற்பாடு 6ஆம் கிழமை ஆரம்பிக்க இருக்கையில் தொடங்கும் [2]. கிட்டத்தட்ட இந்த நிலையில் இதயதுடிப்பும், குருதி ஓட்டமும் ஆரம்பிக்கும்[1]. உடல் உறுப்புக்கள் தோன்ற ஆரம்பிக்கும். கால்கள், கைகள் இருக்க வேண்டிய இடங்களில் சிறு அரும்புகளாக, அதற்குரிய தோற்றங்கள் ஏற்படும். தலையானது முளையத்தின் அரைவாசி நீளத்தில் இருப்பதுடன், அதன் நிறையின் அரைவாசியைக் கொண்டதாகவும் இருக்கும். இழையங்கள் விருத்தியடையத் தொடங்கி முள்ளந்தண்டும் வேறு சில எலும்புகளும் உருவாகத் தொடங்கும்[1].

6-8 கிழமை

முளையமானது தனது அசைவைத் தொடங்குவதற்கான விருத்தியேற்படும். கண்கள், முடிகள், மேலும் வேறுபட்ட உடல் உறுப்புக்கள் தோன்ற ஆரம்பிக்கும். முக அமைப்புக்களும் தோன்ற ஆரம்பிக்கும்[1].

கருச்சிதைவு

தொகு
 
கருக்கட்டல் நடந்ததிலிருந்து 6 கிழமைகளில் ஏற்பட்ட முழுமையான, தன்னிச்சையான கருச்சிதைவு, அதாவது கருக்கட்டல் காலத்தின் 8 ஆவது கிழமை

கருச்சிதைவு என்பது முளையமோ (கருக்கட்டியதிலிருந்து 8 கிழமைகள்), அல்லது முதிர்கருவோ (கருக்கட்டியதிலிருந்து 8 கிழமைகளிலிருந்து குழந்தை பிறப்புவரை) குழந்தையாக பிறக்க முடியாமல், இடையிலேயே சிதைவுக்குள்ளாவதைக் குறிக்கும். இது இயற்கையாக தன்னிச்சையாக நிகழ்வதாகும்.

சில முளையங்கள் தமது முளைய வாழ்வுக் காலத்தை முடித்து சினைக்கரு என அழைக்கப்படும் நிலை வரும் முன்பே சிதைவுக்குள்ளாகிவிடுகின்றன. ஒரு பெண் தான் கருவுற்றிருப்பதை சரியாக உணர்வதற்கு முன்னரே, கருத்தங்கும் காலத்தின் 6 ஆவது கிழமைக்குள்ளாகவே 25% மான கருச்சிதைவு நடைபெறுவதாக மிக ஆரம்ப நிலையில் கருத்தரிப்பை சோதிக்கும் சோதனைகள் காட்டுகின்றன[3][4]. கருக்கட்டும் காலத்தின் 6 ஆவது கிழமைக்குப் பின்னராக நடைபெறும் கருச்சிதைவு 8% எனக் கணக்கிடப்பட்டுள்ளது[4]. முளையக் காலம் முடிவுற்ற பின்னர் நிகழும் கருச்சிதைவு கிட்டத்தட்ட 2% மாக உள்ளது[5].

நிறப்புரியில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களே பொதுவாக இவ்வகையான தன்னிச்சையான கருச்சிதைவுக்கு காரணமாகின்றது[6]. இது கிட்டத்தட்ட 50% மான ஆரம்ப கருச்சிதைவை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது[7]. வயது கூடிய நிலையில் கருத்தரிப்பு, ஏற்கனவே கருச்சிதைவு நடந்திருத்தல் போன்றனவும் முக்கியமான இடர்க் காரணிகளாகும்[7].

கருக்கலைப்பு

தொகு

சில சமயம் பெற்றோர்கள் தெரிந்தே கருவைச் சிதைப்பதாலோ / அழிப்பதாலோ கூட முளையமானது சிதைவுக்குள்ளாகலாம். அப்படியாயின் அது கருக்கலைப்பு எனக் கூறப்படும். பொதுவாக முளைய நிலையிலேயே கருக்கலைப்பு செய்யப்படுகிறது. 2006 ஆம் ஆண்டில் இங்கிலாந்து, வேல்ஸ் பகுதியில் 68% மான கருக்கலைப்பு முளையை நிலை முடியும் தறுவாயில், அதாவது 8 கிழமைகளில் செய்யப்படுவதாக அறியப்படுகிறது[8]. அறுவைச் சிகிச்சை முல்லமாகவோ, அல்லது அறுவைச் சிகிச்சை இல்லாத சில முறைகளாலோ இது செய்யப்படுகிறது. உறிஞ்சி எடுத்தல் முறையால் செய்யும் கருக்கலைப்பே மிகவும் பொதுவான அறுவைச் சிகிச்சை முறையாகும்[9].

வாழும்திறன்

தொகு

மனித முளையமானது கருப்பையை விட்டு வெளியே தானாக வாழும் தனமையற்றதாகவே இருப்பதனால் வாழும்திறனற்றதாகவே கருதப்படுகிறது. தற்போதைய தொழிநுட்ப முறைகள் ஒரு பெண்ணினுள் கருக்கட்டப்பட்ட முளையத்தை, வேறொரு பெண்ணின் கருப்பைக்குள் மாற்றுவதற்கு உதவுவதுடன்[10], வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் (In virto Fertilisation - IVF) 2-3 நாட்கள் முளையமானது கருப்பைக்கு வெளியே உயிர் வாழவும் உதவுகின்றது[1][2] பரணிடப்பட்டது 2010-08-03 at the வந்தவழி இயந்திரம்.

தாவர முளையம்

தொகு
 
முளையத்தைக் கொண்ட Ginkgo வித்தின் உள்புறத் தோற்றம்

தாவரங்களில் முளையமானது விதையின் ஒரு பகுதியாகும். இது தண்டு, இலை, வேர் போன்ற அனைத்து தாவரப் பகுதிகளுக்குமான இழையத்தின் முன்னோடியாக இருக்கும். முளைத்தல் என்னும் முளைய விருத்தியின்போது, இந்த தாவர பகுதிகளின் உருவாக்கம் நடைபெறும். இவ்வாறு உருவாகும் உயிரினம் நாற்று என அழைக்கப்படும்.

ஆராய்ச்சி

தொகு

நோய்களைக் குணப்படுத்தும் நோக்கில் மனித முளையமானது ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டு வருகிறது. முதல்நிலை உயிரணு ஆராய்ச்சி (Stem cell research), இனப்பெருக்க படியெடுப்பு (reproductive cloning), மூலவுயிர் பொறியியல் (germline engineering) என்பன சில முக்கிய ஆராய்ச்சி நிலைகளாகும். இங்கு முளையமானது பயன்படுத்தப்படுவதால், இவ்வகையான ஆராய்ச்சிகள் நல்லதுதானா என்பதுபற்றி விவாதங்கள் நடந்து கொண்டேயுள்ளன.[11][12][13]

படத்தொகுப்பு

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
 1. 1.0 1.1 1.2 1.3 NIH Medical Encyclopedia http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/002398.htm
 2. Gazzaniga, Mike S.The Ethical Brain "not until the end of week 5 and into week 6 (usually around forty to forty-three days) does the first electrical brain activity begin to occur."
 3. Wilcox AJ, Baird DD, Weinberg CR (1999). "Time of implantation of the conceptus and loss of pregnancy.". New England Journal of Medicine 340 (23): 1796–1799. doi:10.1056/NEJM199906103402304. பப்மெட்:10362823. 
 4. 4.0 4.1 Wang X, Chen C, Wang L, Chen D, Guang W, French J (2003). "Conception, early pregnancy loss, and time to clinical pregnancy: a population-based prospective study.". Fertil Steril 79 (3): 577–84. doi:10.1016/S0015-0282(02)04694-0. பப்மெட்:12620443. 
 5. Rodeck, Charles; Whittle, Martin. Fetal Medicine: Basic Science and Clinical Practice பரணிடப்பட்டது 2016-03-02 at the வந்தவழி இயந்திரம் (Elsevier Health Sciences 1999), p. 835.
 6. Stöppler, Melissa Conrad. "Miscarriage (Spontaneous Abortion)". MedicineNet.com. பார்க்கப்பட்ட நாள் 2009-04-07. {{cite web}}: Unknown parameter |coauthors= ignored (help)
 7. 7.0 7.1 Jauniaux, E. (1999). "Early pregnancy loss". In Martin J. Whittle and C. H. Rodeck (ed.). Fetal medicine: basic science and clinical practice. Edinburgh: Churchill Livingstone. p. 837. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-443-05357-X. இணையக் கணினி நூலக மைய எண் 42792567. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
 8. Department of Health (2007). "Abortion statistics, England and Wales: 2006". Archived from the original on 2010-12-06. பார்க்கப்பட்ட நாள் 2007-10-12. 68% were at under 10 weeks
 9. Healthwise (2004). "Manual and vacuum aspiration for abortion". WebMD. பார்க்கப்பட்ட நாள் 2008-12-05.
 10. Rumbold, Graham. Ethics in nursing practice[தொடர்பிழந்த இணைப்பு], p. 120 (Elsevier Health Sciences 1999).
 11. Freedman, Jeri. "America Debates Stem Cell Research." New York, NY: The Rosen Publishing Group, 2008.
 12. Sandel, Michael J. "The Case Against Perfection." Michael J. Sandel, 2007.
 13. Zavos, Panayiotis. “Reproductive Cloning is Moral.” Ed. James Woodward. The Ethics of Human Cloning: At Issue. Farmington Hills, MI: Greenhaven, 2005. 14–24.

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Embryology
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முளையம்&oldid=3655669" இலிருந்து மீள்விக்கப்பட்டது