நாற்று என்பது தாவரங்களில், அவற்றின் விதைகளிலிருக்கும், முளையத்திலிருந்து, முளைத்தல் என்னும் செயல்முறை மூலம், வெளியே வரும் இளம் தாவரமாகும். நாற்றின் விருத்தியானது முளைத்தலில் ஆரம்பிக்கும். நாற்றானது மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டிருக்கும். அவையாவன: முளைவேர் (radicle), வித்திலைக் கீழ்த்தண்டு (hypocotyl), வித்திலை (cotyledons).

ஒருவித்திலை (இடம்), இருவித்திலை (வலம்) தாவரத்தின் நாற்றுக்கள்

பூக்கும் தாவரங்களின் இரு பெரும் பிரிவுகளான ஒரு வித்திலைத் தாவரம், இரு வித்திலைத் தாவரம் ஆகியனவற்றின் நாற்றுக்கள் அமைப்பில் வேறுபாட்டைக் காட்டும். ஒரு வித்திலைத் தாவரங்களின் நாற்றில் ஒரேயொரு நீண்ட கத்தி போன்ற அமைப்பைக் கொண்ட வித்திலையும், இரு வித்திலைத் தாவரங்களின் நாற்றில் இரண்டு வட்டமான வித்திலைகளும் உருவாகும். வித்துமூடியிலித் தாவரங்கள் பலவேறுபட்ட நாற்றுக்களைக் கொண்டிருக்கும். உதாரணமாக பைன் தாவரத்தின் நாற்றில் எட்டு நீண்ட வித்திலைகள் உருவாகும். ஒரு சில பூக்கும் தாவரங்கள் வித்திலைகள் எதுவுமற்றதாகவும் இருக்கும். அவை வித்திலையற்ற தாவரம் எனப்படும்.

தாவர நாற்றுக்கள் விசேட பராமரிப்புகளுடன் வளர்க்கப்படும் இடம் நாற்றுமேடை (Nursery) எனப்படும்.

முளைத்தலும், ஆரம்ப நாற்று விருத்தி நிலையும்

தொகு

முளைத்தலின்போது, தாவர வித்தின் பாதுகாப்பான கவசத்தை அல்லது உறையை விட்டு, முதலில் முளை வேரும், அதைத் தொடர்ந்து வித்திலைகளும் இளம் தாவரமாக வெளி வரும். பொதுவாக கல அல்லது உயிரணு விரிவாக்கம் மூலம் முளை வேரானது புவியீர்ப்பை நோக்கியும், வித்திலைக் கீழ்த்தண்டானது புவியீர்ப்புக்கு எதிர்த் திசையை நோக்கியும் வளர ஆரம்பிக்கும். அப்படி வளர்கையில் வித்திலை நிலத்திற்கு மேலாக தள்ளப்பட்டு வெளியே வரும்.

ஒருவித்திலை, இருவித்திலைத் தாவரங்களினதும், வித்துமூடியிலித் தாவரங்களினதும் நாற்றுக்கள் வேறுபட்ட தோற்றங்களைக் கொண்டிருக்கும். முளைத்தல் செயல்முறையிலும் வேறுபாடுகள் உண்டு.

பிந்திய விருத்திநிலை

தொகு

ஆரம்பத்தில் விதையில் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலானது தாவரத்தின் விருத்திக்கு பயன்படும். நாற்Ril இலைகள் விருத்தியடைந்து, அவை ஒளியைப் பெற்று, ஒளிச்சேர்க்கை செய்ய ஆரம்பிக்கையில், சேமிப்பில் தங்கியிராது, தனக்குத் தேவையான ஆற்றலைத் தானே உருவாக்கிக் கொள்ளும். நாற்றின் பிந்திய விருத்திநிலையில், உச்சிப்பிரியிழையம் கலப்பிரிவுக்கு உட்பட்டு வளர ஆரம்பிக்கையில், உண்மையான வேர், தண்டு என்பன விருத்தியடைய ஆரம்பிக்கும். உண்மையான இலைகள் ஒவ்வொரு தாவர வகைக்கும் ஏற்ற தனித்துவமான இலை வடிவத்தைக் கொண்டு உருவாகும். இவை யாவும் விருத்தியடைய ஆரம்பித்த பின்னர் வித்திலைகள் தாவரத்திலிருந்து விடுபட்டு விழுந்து விடும்.

நோய், தீங்குயிர் தாக்கம்

தொகு

நாற்றுக்கள், வளர்ந்த தாவரங்களைவிட தீங்குயிர், நோய்த் தாக்கங்களுக்குட்படும்போது, அவற்றினால் இலகுவில் பாதிப்படையக் கூடியனவாக இருப்பதுடன், பாதிப்பின்போது அவற்றின் இறப்பு வீதமும் அதிகமாக இருக்கின்றது[1].

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Buczacki, S. and Harris, K., Pests, Diseases & Disorders of Garden Plants, HarperCollins, 1998, p115 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-220063-5

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாற்று&oldid=3417171" இலிருந்து மீள்விக்கப்பட்டது