வாழ்க்கை வட்டம் (உயிரியல்)
உயிரியலில், வாழ்க்கை வட்டம் எனப்படுவது, இனத்தின் உறுப்பினர்கள், தமது விருத்தி நிலைகளில் குறிப்பிட்ட ஒரு நிலையில் இருந்து, தொடர்ந்து வரும் தலைமுறையின் அதே நிலையினை அடையும்வரை, அவற்றில் நிகழும் தொடர்ச்சியான மாற்றங்களைக் குறிக்கும்[1]. வாழ்க்கை வட்டத்தில் ஒரு சந்ததியிலிருந்து, அடுத்த சந்ததி தோன்றுவது இனப்பெருக்கம் மூலமாக நடைபெறும். இந்த இனப்பெருக்க முறையானது கலவிமுறை இனப்பெருக்கமாகவோ அல்லது கலவியில்முறை இனப்பெருக்கமாகவோ அமையலாம்.
சில உயிரினங்களின் வாழ்க்கை வட்டமானது ஒன்றுக்கு மேற்பட்ட சந்ததியைக் கொண்டிருக்கும். அவ்வாறாயின், அவற்றில் ஒரு சந்ததி கலவிமுறை இனப்பெருக்கம் செய்யும் சந்ததியாகவும், அடுத்த சந்ததி கலவியில்முறை இனப்பெருக்கம் செய்யும் சந்ததியாகவும் இருக்கலாம். இது மாறிமாறி வரும் தலைமுறை (alternation of generation) வழியான இனப்பெருக்கமாகும். பூச்சிகளில் வாழ்க்கை வட்டமானது, அதன் ஒரு சந்ததிக்குள்ளேயே, விருத்தியின்போது உருவாகும் தொடர்ச்சியான வேறுபட்ட விருத்தி நிலைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
வாழ்க்கை வட்டத்தின் வகைகள்
தொகுஉயிரினங்களின் தனியன்களின் மடியநிலையைக் கொண்டு வாழ்க்கை வட்டத்தை வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கலாம்.
ஒருமடிய வாழ்க்கை வட்டம் (Haplontic)
தொகுபாக்டீரியா, அதிநுண்ணுயிரி போன்ற எளிய உயிரினங்களில் வாழ்க்கை வட்டம் மிகவும் எளிமையானதாக இருக்கும். ஒரு தனியனானது இழையுருப்பிரிவை ஒத்த சாதாரண உயிரணுப்பிளவை (Fission) உள்ளடக்கிய கலப்பிரிவு மூலம், அடுத்த சந்ததியைத் தோற்றுவிக்கின்றது. ஒரு சந்ததியிலேயே வாழ்க்கை வட்டம் முடிவடைகின்றது. இந்த உயிரினங்கள் ஒருமடிய நிலையிலேயே இருப்பதனால், இது ஒருமடிய வாழ்க்கை வட்டம் எனப்படுகின்றது.
இவ்வகையான ஒருமடிய தனி உயிரணு கொண்ட உயிரினங்களில் நிகழும் ஒருமடிய வாழ்க்கை வட்டம் போலன்றி, வேறு சில உயிரினங்களில் ஒருமடிய புணரிகள் இணைந்து உருவாகும் இருமடிய கருவணு (நுகம்) தனியனாக விருத்தியடையாமல், மீண்டும் ஒடுக்கற்பிரிவுக்கு உட்பட்டு ஒருமடிய உயிரணுக்களை உருவாக்கி, அவ்வுயிரணுக்கள் இழையுருப்பிரிவு மூலம் பல உயிரணுக்கள் கொண்ட தனியன்களை உருவாக்கும். எனவே இங்கே தனியன்கள் ஒருமடிய நிலையிலேயே இருப்பதனால், அதுவும் ஒருமடிய வாழ்க்கை வட்டமாகும்.
எடுத்துக்காட்டுகள்:
- அநேகமான பூஞ்சைகள்
- சில பச்சைப் பாசிகள்
- பல மூத்தவிலங்குகள்
இருமடிய வாழ்க்கை வட்டம் (Diplontic)
தொகுவிலங்குகளில், ஆண், பெண் பாலணுக்கள் (sex cells/ gametes) அல்லது பால் உயிரணுக்கள் இணைந்து ஒரு கருவணுவை/நுகத்தை உருவாக்கி, அது பின்னர் தனியன்களாக விருத்தியடையும். அந்த தனியன்கள் இனப்பெருக்கம் செய்யக் கூடிய நிலைக்கு முதிர்ச்சி அடைந்த பின்னர், மீண்டும் பாலணுக்களை உருவாக்கும். அந்நிலையில் பாலணுக்கள் இணைவினால் இரண்டாம் சந்ததி உருவாகும். இங்கே முதிர்நிலையிலுள்ள தனியன்கள் இருமடிய நிலையிலேயே இருக்கும். அவை ஒருமடிய பாலணுக்களை உருவாக்கினாலும், அந்த பாலணுக்கள் இணைந்து தோன்றும் இருமடிய தனியனே அடுத்த சந்ததியாக உருவாகும். இதனால் இந்த வாழ்க்கை வட்டம் இருமடிய வாழ்க்கை வட்டம் எனப்படும். இங்கே உருவாகும் பாலணுக்கள் ஒருகல அமைப்புடையவையாக இருக்கும்.
மனிதனிலும் இருமடிய ஆண், பெண் தனியன்களில் முறையே ஒடுக்கற்பிரிவு மூலம், விந்து, சூல்முட்டை எனப்படும் ஒருகல புணரிகள்/பாலணுக்கள் உருவாகும். அவை ஒருமடிய நிலையில் காணப்படும். அவ்விரண்டும் கலவியின்போது கருக்கட்டலுக்கு உட்பட்டு இணைந்து, இருமடிய கருவணு அல்லது நுகம் (zygote) உருவாகும். பின்னர் பெண்ணின் உடலினுள் இருக்கும் கருப்பையினுளேயே பதிந்திருந்து, கருத்தரிப்புக் காலத்தில், முளைய விருத்தியின் மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கருவாக விருத்தியடையும். பின் குழந்தை பிறப்பு மூலம், பெண்ணின் உடலில் இருந்து வெளியேறி குழந்தையாக வளர்ச்சியுறும். வளர்ச்சி நிலையில் இனப்பெருக்க முதிர்ச்சியடைந்ததும் மீண்டும் பாலணுக்கள் உருவாகும்.
எடுத்துக்காட்டுகள்:
- விலங்குகள்
- சில பழுப்புப் பாசிகள்
- மதுவம் போன்ற சில பூஞ்சைகள்
ஒரு, இரு மடிய வாழ்க்கை வட்டம் (Haplodiplontic)
தொகுவிலங்குகளில் போலன்றி, பொதுவாக தாவரங்களில் ஒருமடிய நிலையிலிருக்கும் புணரிகள் பலகல அமைப்புடையதாக இருக்கும். ஒரு வாழ்க்கை வட்டத்திலேயே ஒருமடிய சந்ததி, இருமடிய சந்ததி ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும். ஒரு வாழ்க்கை வட்டத்தில் இரு வகையான சந்ததிகளையும் கொண்டிருப்பதனால் இது ஒரு, இரு மடிய வாழ்க்கை வட்டம் எனப்படுகின்றது.
பன்ன தாவரங்களில், ஒருமடிய நுண்வித்திகளில் (spores) இருந்து, புணரித்தாவர (gametophyte) சந்ததி உருவாகும். ஆண், பெண் தாவரங்கள் தனித்தனியாகவும் இருக்கலாம். அவற்றிலிருந்து இழையுருப்பிரிவினால் ஒருமடிய புணரிகள் உருவாகும். அந்த புணரிகள் இணைந்து இருமடிய கருவணு தோன்றும். கருவணுவானது விருத்தியடைந்து இருமடிய வித்தித்தாவரமாக (sporophyte) உருவாகும். இவற்றிலிருந்து ஒடுக்கற்பிரிவு மூலம் மீண்டும் ஒருமடிய நுண்வித்திகள் உருவாகும். அவற்றிலிருந்து புணரித்தாவரம் வளர்ச்சியடையும்.
உயர் தாவரங்களில், ஒருமடிய நிலையிலிருக்கும் சூல்வித்தும் (ovule), மகரந்தமும் இணைந்து கருக்கட்டல் நடைபெற்று, இருமடிய நுகம்/கருவணு உருவாகும். நுகம் விருத்தியடைந்து வித்து எனப் பெயர் பெறும். நுகமும் அதனைச் சுற்றியுள்ள வேறு இழையங்களும் சேர்ந்து, வித்தும், அதனைச் சுற்றியிருக்கும் பழமுமாக விருத்தியுறும். பின்னர் இந்த வித்து முளைத்தல் மூலம் அடுத்த சந்ததி தாவரத்தை உருவாக்கும். இங்கே முதிர்ச்சியுற்ற தாவரம் இருமடிய நிலையில் இருக்கும். அவற்றிலிருந்து பெறப்படும் புணரிகளும் பலகலம் கொண்ட ஒருமடிய சந்ததி போன்று இருக்கும்.
எடுத்துக்காட்டுகள்:
- அநேகமான தாவரங்கள்
- சில பூஞ்சைகள்
பூச்சிகளில் வாழ்க்கை வட்டம்
தொகுபூச்சி இனங்கள் தமது வாழ்க்கை வட்டத்தில், உடற்கூற்றியல், உடலியங்கியல் ஆகியவற்றில் முற்றாக வேறுபாடு கொண்ட, வெவ்வேறு விருத்தி நிலைகளைக் கொண்டிருக்கும். முழுமையான உருமாற்றம் நிகழும் பூச்சிகளில் முட்டை, குடம்பி, கூட்டுப்புழு, முதிர்நிலை எனப்படும் முக்கியமான நான்கு விருத்தி நிலைகள் காணப்படும். முழுமையற்ற உருமாற்றம் நிகழும் பூச்சிகளில் உருவத்தில் ஒத்த, ஆனால் விருத்தி நிலைகளிலும், அளவிலும் வேறுபட்ட வெவ்வேறு வளர்நிலைகள் (instar) காணப்படும். இவை மேலும் சில துணைவிருத்தி நிலைகளைக் கொண்டிருக்கக் கூடும். இங்கேயும் ஒருமடிய முட்டை கருக்கட்டலுக்கு உட்படும்போது இருமடிய விருத்திநிலை தோன்றும். எனவே கருக்கட்டப்பட்ட முட்டை இருமடிய நிலையிலும், கருக்கட்டாத முட்டை, ஆண் புணரி ஒருமடிய நிலையிலும் காணப்படும். கருக்கட்டப்பட்ட முட்டையிலிருந்து விருத்தியடையும், குடம்பி, கூட்டுப்புழு, முதிர்நிலைகள் இருமடியமாகவே இருக்கும்.
எறும்பு, தேனீ, கறையான், குளவி போன்ற சில பூச்சியினங்களில் தனியன்கள் ஒருமடிய, இருமடிய நிலைகள் இரண்டையும் கொண்டவையாக இருக்கும். அது பல்லுருத்தோற்றத்தால் ஏற்படும் சாதியமைப்பு முறையெனப்படும். இருமடிய கருக்கட்டப்பட்ட முட்டையிலிருந்து, முதிர்நிலை உருவாகும் அதேவேளை, ஒருமடிய கருக்கட்டாத முட்டையிலிருந்தும் முதிர்நிலை விருத்தியடைவதே, இவ்வகையான பல்லுருத்தோற்றம் ஏற்படக் காரணமாகின்றது. இவ்வகையான ஒருமடிய தனியன்களும், இருமடிய தனியன்களும் உருவத்திலும், தொழிற்பாட்டிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன.
வாழ்க்கை வட்டம் பற்றிய அறிவின் முக்கியத்துவம்
தொகுஒவ்வொரு உயிரினத்திற்கும் குறிப்பிட்ட வாழ்க்கை வட்டம் உள்ளது. சில உயிரினங்கள், வாழ்க்கை வட்டத்தின் வெவ்வேறு விருத்தி நிலைகளில், வெவ்வேறு வாழிடங்களையோ, வெவ்வேறு தொழிற்பாடுகளையோ கொண்டிருக்கும். நோய்க்காரணிகள், நோய்க்காவிகள் போன்றவற்றின் வாழ்க்கை வட்டத்தை அறிந்து வைத்திருப்பதனால், அவற்றை இலகுவாக அழிக்கக் கூடிய வாழிடங்கள், அல்லது விருத்தி நிலைகளைத் தெரிந்து, அவற்றை அழிப்பதனால், நோயிலிருந்து பாதுகாப்பைப் பெறலாம். நோய்க்காரணிகள் குறிப்பிட்ட சில விருத்தி நிலையிலேயே நோய்த்தொற்று ஏற்படுத்தும் தன்மை கொண்டனவாக இருக்கலாம். மேலும் அவை தொற்றுநோயை ஏற்படுத்தும் கால எல்லையும், அந்த விருத்திநிலையில் அந்த உயிரினம் இருக்கும் காலத்திற்கேற்ப மாறுபடலாம். இப்படியான தகவல்களை அறிந்திருப்பதன் மூலம், அவ்வகை தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பைப் பெறவோ, தகுந்த சிகிச்சை அழிக்கவோ, தொற்றுநோய் பரவலைத் தடுக்கவோ முடியும். இதனால் கொள்ளைநோய் (epidemic), உலகம்பரவுநோய் (pandemic) போன்ற நிலைகளைத் தவிர்க்கலாம்.
வெவ்வேறு உயிரினங்களின் வாழ்க்கை வட்டம்
தொகு-
பன்ன தாவரத்தின் வாழ்க்கை வட்டம்
-
பூக்கும் தாவரத்தின் வாழ்க்கை வட்டம்
-
கியூலக்ஸ் நுளம்பின் வாழ்க்கை வட்டம்
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புக்கள்
தொகு- பன்னத்தின் வாழ்க்கை வட்டம்
- பட்டாம்பூச்சியின் வாழ்க்கை வட்டம்
- அவரையின் வாழ்க்கை வட்டம்
- பூக்கும் தாவரங்களின் வாழ்க்கை வட்டம்
- பட்டுப்புழு வாழ்க்கைச்சுழற்சி பரணிடப்பட்டது 2012-11-08 at Archive.today
- *பட்டாம்பூச்சியின் வாழ்க்கை வட்டம்