நோய்க்காரணி
நோய்க்காரணி (Pathogen) அல்லது தொற்றுநோய்க்காரணி அல்லது கிருமி எனப்படுவது, வேறொரு உயிரினத்தின் உள்ளே சென்று, அங்கே வாழ்ந்து, அவ்வுயிரினத்தின் சாதாரண இயக்கத்தை பாதிக்கவல்ல, அல்லது மாற்றவல்ல, அல்லது உபாதைகளைத் தோற்றுவிக்கவல்ல ஒரு உயிரியல் காரணியாகும்[1][2]. ஒரு நோய்க்காரணியானது பல்வேறுபட்ட வழிமுறைகளில் தான் வாழும் விருந்துவழங்கி அல்லது ஓம்புயிரின் அல்லது விருந்து வழங்கியின் (host) உள்ளே சென்று, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும்.
பொதுவான பல நோய்க்காரணிகளுக்கு எதிராக இயற்கையாகவே இயங்கி தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக, உடலில் பலவகையான பாதுகாப்பு தொழில் முறைகள் காணப்படும். மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை (immune system), மற்றும் உடலிற்கு ஊறுவிளைவிக்கும் நோய்க்காரணிகளுக்கு எதிராக தொழிற்படவல்ல, சாதாரணமாக உடலில் காணப்படும் தாவரவளம் (normal flora) போன்றன பாதுகாப்பை ஏற்படுத்தவல்லன. ஆனாலும், இப்பாதுகாப்பையும் மீறி, வீரியமுள்ள நோய்க்காரணிகள் நோய்களை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கையில், நோய் உண்டாதல் தவிர்க்க முடியாமல் போகின்றது. நோய் எதிர்ப்பாற்றல் முறைமையும், உடலுக்கு உபயோகமான பாக்டீரியாக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளாகும்போது, இந்த நோய்க்காரணிகளுக்கு அந்நிலமை சாதகமாக மாறி, அவை தமது ஓம்புயிரில் உட்சென்று, பல்கிப் பெருகி, நோயை ஏற்படுத்த முடிகின்றது. எய்ட்சு அல்லது நோயெதிர்ப்பாற்றல் குறைபாட்டு நோயை ஏற்படுத்தும் எச்.ஐ.வீ (HIV) வைரசினால், அல்லது, வேறு உடலூறு விளைவிக்கும் கிருமிக்கெதிராக பாவிக்கப்படும் கிருமியெதிர்ப்பிகள் அல்லது நுண்ணியிர்கொல்லிகள் சாதாரண உடலுக்கு நன்மைபயக்கும் பாக்டீரியாக்களையும் கொல்வதனால் இந்நிலை தோன்றலாம்.
உயிராபத்தில்லாத சாதாரண நோய்களை தரும் நோய்க்காரணிகள் (உ.ம்: சாதாரண தடிமலை (common cold) ஏற்படுத்தும் வைரசு) முதல், உலகளவில் அதி வேகமாக பரவி, மக்கள் சனத்தொகையில் கணிசமான அளவு இறப்பை ஏற்படுத்தும் அபாயமான நோய்க்காரணிகள் வரை நமது சூழலில் காணப்படுகின்றன. தற்கால சூழலில், எச்.ஐ.வீ (HIV) வைரசானது, உலகளவில் பல மில்லியன் மக்களில் தொற்றை ஏற்படுத்தி, எய்ட்சு நோயை உருவாக்கி, இன்ஃபுளுவென்சா வைரசுடன் சேர்ந்து, மக்கள் இறப்புக்கு காரணமாகும், அபாயகரமான ஒரு நோய்க்காரணியாகும்.
தடுப்பூசி (vaccination), கிருமியெதிர்ப்பி (antibiotics), பங்கசு எதிர்ப்பி அல்லது பூஞ்சையெதிர்ப்பி (fungicides) பாவனைகளால், மருத்துவ முன்னேற்றமானது பல நோய்க்காரணிகளின் தொற்றையும், அவற்றால் உருவாகும் நோய்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போதிலும், மேலும் புதிய நோய்க்காரணிகளின் அறிமுகத்தாலும், ஏற்கனவே காணப்படும் நோய்க்காரணிகளில் ஏற்படும் தெரிவான மாற்றங்களால், அவை மருந்துகளுக்கெதிரான எதிர்ப்புத் தன்மையைக் காட்டும் புதிய வகைகளை உருவாக்கிக் கொள்வதாலும், நோய்க்காரணிகளால் மனித இனத்திற்கு இருக்கும் ஆபத்து தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. நல்ல உணவுப் பழக்க வழக்கத்தை கொண்டிருத்தல், தகுந்த உடல் சுகாதாரம் பேணல், நல்ல குடிநீர்ப் பாவனை போன்ற சில செயற்பாடுகளால் நோய்க்காரணிகளின் தாக்கத்தை ஓரளவு குறைத்து வைத்திருக்க முடியும்.
வகைகள்
தொகுநோய்க்காரணிகளின் உருவ அமைப்பு, மற்றும் அவை தாம் வாழும் ஓம்புயிரில் ஏற்படுத்தும் தாக்கம் என்பவற்றைக் கொண்டு நோய்க்காரணிகள் வகைப்படுத்தப்படலாம்.
தீநுண்மத்தின் புரத உறையினால் மூடப்பட்ட டீ.என்.ஏ (DNA) அல்லது ஆர்.என்.ஏ (RNA) மூலக்க்கூறுகளைக் கொண்ட, தாம் வாழும் உயிரினத்தின் உடலினுள் மட்டுமே பல்கிப் பெருகும் தன்மை கொண்ட உயிரினமாகும். பொதுவாக இவை 20-300 nm நீளமுள்ள உயிரினங்களாகும். Adenoviridae, Picornaviridae, Herpesviridae, Hepadnaviridae, Flaviviridae, Retroviridae, Orthomyxoviridae, Paramyxoviridae, Papovaviridae, Rhabdoviridae, Togaviridae குடும்ப உறுப்பினர்களாகிய வைரசுக்களே பொதுவான நோயுருவாக்கும் வைரசுக்களாக இருக்கின்றன. இவை உருவாக்கும் குறிப்பிடும்படியான தொற்றுநோய்கள் பெரியம்மை (smallpox), சின்னம்மை அல்லது கொப்பளிப்பான் (chickenpox), தட்டம்மை அல்லது சின்னமுத்து (measles), கூவைக்கட்டு (mumps) போன்றன. அபாயகரமான நோயான எய்ட்சு நோய்க்காரணி, பல்வேறு வகையான இன்ஃபுளுவென்சா காய்ச்சலைத் தரும் நோய்க்காரணிகளும் வைரசுக்களே ஆகும்.
பாக்டீரியாக்கள் கருமென்சவ்வற்ற கருவைக் கொண்ட, எளிய கல அமைப்பையுடைய நுண்ணியிர்கள் ஆகும். பொதுவாக 1-5 µm நீளமுடையவை.
அதிகமான பாக்டீரியாக்கள் நோயிருவாக்காதவையாகவும், ஆபத்தற்றவையாகவும், நன்மை பயப்பனவாகவும் இருந்தபோதிலும், சில பாக்டீரியாக்கள் நோய்க்காரணிகளாகத் தொழிற்பட்டு தொற்றுநோயை ஏற்படுத்துகின்றன. உலகில் மிகவும் பொதுவானதும், அதிகளவில் காணப்படுவதுமான பாக்டீரியவால் உருவாகும் நோய் காசநோய் ஆகும். இந்நோயானது, Mycobacterium tuberculosis என்னும் பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்றுநோய் ஆகும். Streptococcus, Pseudomonas போன்ற பாக்டீரியாக்களால், நுரையீரல் அழற்சி அல்லது நியூமோனியா (Pneumonia) வும், Shigella, Campylobacter, Salmonella போன்ற பாக்டீரியாக்களால் சில உணவிலிருந்து உருவாகும் தொற்றுநோய்களும் வருகின்றன. இவை தவிர, ஏர்ப்புநோய் (tetanus), தொழுநோய் (leprosy), தைபொய்ட் காய்ச்சல் (typhoid fever), குக்கல் (diphtheria), சிபிலிசு (syphilis) எனப்படும் பாலியல் நோய் போன்றனவும் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுநோய்கள் ஆகும். பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்த கிருமியெதிர்ப்பிகள் அல்லது நுண்ணுயிர்கொல்லிகள் பாவிக்கப்படுகின்றன. ஆனாலும் அவற்றிற்கெதிராக புதிய வகை பக்டீரியாக்கள் உருவாவது பெரும் பிரச்சனையை தருகிறது (உ.ம்: காசநோய்க்கு பாவிக்கப்படும் மருந்துகளை எதிர்க்கும் தன்மை கொண்ட (Multi Drug Resistance) M.tuberculosis வகை தோன்றியிருப்பதால் காசநோய்க் கட்டுப்பாடு போதியளவில் செயற்படுத்த முடியாமல் உள்ளது.
பூஞ்சை
தொகுபொதுவாக பூஞ்சைகள் விதைகளைக் (spores) கொண்டிருக்கும். அவ்விதைகளின் நீளம் பொதுவாக 1-40 µm ஆக இருக்கும். பூஞ்சை அல்லது பங்கசு தொற்றுநோய்கள் பொதுவாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையானது மிகவும் தளர்ந்த நிலமையில் இருக்கும்போதே ஏற்படுகின்றன. பூஞ்சையின் உயிரணுக்கள் அல்லது கலங்கள், தாம் வாழும் ஓம்புயிரின் உயிரணுக்களை ஒத்திருப்பதால், அவற்றின் உயிரணுக்களை அழிக்க கிருமியெதிர்ப்பிகளைப் பாவிக்க முடியாது. பூஞ்சையெதிர்ப்பி பாவிக்கப்படலாம்.
Prions
தொகுநியூக்கிளிக் அமிலங்களைக் கொண்டிராத தொற்றுநோய்க்காரணிகள் Prions என அழைக்கப்படும். Prion தொற்றினால் ஏற்படும், புரதமூலக் கூறுகளின் தொழிற்பாட்டுக் குறைவே நோய்க்கு காரணமாகின்றது. இவ்வகை நோய்களாவன scrapie, bovine spongiform encephalopathy (mad cow disease), Creutzfeldt–Jakob disease [3].
புரோட்டோசோவா
தொகுபுரோட்டோசோவா தொகுதியைச் சேர்ந்த, பிளாஸ்மோடியம் (Plasmodium) என்னும் பேரினப் பிரிவிலடங்கும் உயிரினமானது மலேரியா தொற்றுநோயை மனிதரில் உருவாக்குகிறது. அனோபிலசு வகையைச் சார்ந்த பெண் நுளம்புகளே இந்த பிளாஸ்மோடியம் உயிரினத்தை ஒருவரிலிருந்து, இன்னொருவருக்கு காவிச் செல்கின்றது. இந் நோய்க்காவியை அழிப்பதன் மூலம் அல்லது கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்ப்பரவலைத் தடுக்க முடியும். இந்நோய்க்கெதிராக, தடுப்பு மருந்துகள் பாவனையும் நடைமுறையில் உள்ளது.
பல ஒட்டுண்ணிப் புழுக்கள் இவ்வகையான நோய்க்காரணிகளாக இருக்கின்றன. வட்டப்புழு (roundworm), நாடாப்புழு (tapeworm), கொக்கிப்புழு (hookworm) போன்றன அவற்றில் சில. தொற்றுக்குட்பட்ட உயிரினத்தின் கழிவுகளால் அசுத்தப்படுத்தப்பட்ட மண்ணிலிருந்து, வெறும் காலுடன் நடந்து செல்லும் ஒருவருக்கு அல்லது அசுத்தப்படுத்தப்பட்ட நீரிலிருந்து நீந்தும் ஒருவருக்கு கொக்கிப்புழு தொற்றலாம். தொற்றும் புழுவானது ஒரு சில வினாடிகளிலேயே தோலினூடாக உடலினுள் சென்று, பின்னர் நுரையீரலுக்கு கடத்தப்படும். பின்னர் அங்கிருந்து இருமும்போது வெளிநோக்கி வந்து மீண்டும் விழுங்கப்படுவதால், உணவுக்கால்வாய் தொகுதியினுள் பிரவேசித்து, குடலை அடைந்து, அங்கு இனப்பெருக்கம் செய்து வாழ்ந்தபடியே, தான் வாழும் ஓம்புயிருக்கு ஊறு விளைவிக்கும். அவை இடும் முட்டைகள் மீண்டும் தொற்றுக்குட்பட்டிருக்கும் உயிரினத்தின் கழிவுடன் வெளியேற்றப்பட்டு தன் வாழ்க்கை வட்டத்தை தொடரும். நாடாப்புழு, வட்டப்புழு போன்றவற்றின் முட்டைகள் அல்லது குடம்பி நிலைகள் பச்சையாக உண்ணப்படும் அல்லது சரியாக சமைக்காமல் உண்ணப்படும் பன்றி இறைச்சி, சில கடல் உணவு வகைகளின் மூலம் புதிய உயிரினக்களின் உணவுக்கால்வாய்த் தொகுதியூடாக உள்ளே சென்று குடல் பகுதியில் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தபடி, தொற்றுக்குட்பட்ட உயிரினத்திற்கு ஊறு விளைவிக்கும்.
பரவல்
தொகுநோய்க்காரணிகளின் பரவல் உணவு, நீர், காற்று, தொடுகை, பாலியல் தொழிற்பாடுகள் மற்றும் நோய்க்காவிகள் மூலமாக நடைபெறுகின்றது. கழிவுநீர்க் கால்வாய்கள் சரியான முறையில் ஒழுங்கமைக்கப்படாமையால், அல்லது அவற்றில் ஏற்படும் சேதங்களால் அவை நன்னீரில் கலப்பதாலோ, பயிர் நிலங்களில் சென்றடைந்து நமது உணவுகளுடன் சேர்வதனாலோ அசுத்தமடையும் உணவு, நீர் போன்றவற்றால், நோய்க்காரணிகள் பரவலாம். காற்றுத் துணிக்கைகளை ஒருவர் இருமும்போதோ, தும்மும்போதோ வெளியேற்றும்போது, அவற்றுடன் வெளியேறும் நோய்க்காரணி காற்றில் கலந்து மற்றவருக்கு தொற்றை ஏற்படுத்தலாம். இவ்வகை தொற்று பொதுவாக சுவாசத் தொகுதி தொடர்பான நோய்களை உருவாக்கும்.
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ http://www.medterms.com/script/main/art[தொடர்பிழந்த இணைப்பு].
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-05. பார்க்கப்பட்ட நாள் 2009-10-30.
- ↑ The prion diseases பரணிடப்பட்டது 2016-04-17 at the வந்தவழி இயந்திரம் STANLEY B. PRUSINER, Scientific American