முதிர்நிலை (பூச்சி)
உயிரியலில் முதிர்நிலை (Imago) எனப்படுவது, பூச்சிகளில் காணப்படும் உருமாற்ற செயல்முறையில் உருவாகும் வெவ்வேறு விருத்தி நிலைகளில், இறுதியான விருத்தி நிலையாகும். முழுமையான உருமாற்றத்துக்கு உட்படும் உயிரிகளில் கூட்டுப்புழுவிலிருந்து வெளியேறும் இறுதி விருத்தி நிலையாகவும், முழுமையற்ற உருமாற்றத்துக்கு உட்படும் உயிரிகளில் கடைசியான தோலுரித்தல் (Ecdysis/Moulting) நிகழும்போது அணங்குப்பூச்சி நிலையிலிருந்து வெளிவரும் இறுதி விருத்தி நிலையாகவும் அமையும்.
இந்த முதிர்நிலையே இனப்பெருக்க உறுப்புக்களைக் கொண்ட பருவமானதாக இருப்பதனாலும், சிறகுள்ள பூச்சிகளில் சிறகுகள் முழுமையாக விருத்தியடைந்த நிலையில் காணப்படுவதனாலும், இந்த நிலையே குறிப்பிட்ட உயிரியின் முழுமையாக முதிர்ந்த நிலையாகக் கருதப்படும். சில உயிரிகளில் இறுதியான முதிர்நிலைக்கு வருவதற்கு முன்னராக, சிறகுகள் விருத்தியடைந்தும், இனப்பெருக்க உறுப்புக்கள் விருத்தியடையாமலும் இருக்கும் ஒரு துணை முதிர்நிலைப் பருவமும் காணப்படுவதுண்டு.