மகரந்தச் சேர்க்கை

(மகரந்தச்சேர்க்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மகரந்தச்சேர்க்கை (pollination) என்பது, கருக்கட்டல் செயல்முறைக்காகவும், பாலியல் இனப்பெருக்கத்திற்காகவும் மகரந்தத்தூள்கள் ஒரு தாவரத்தில் இருந்து இன்னொன்றுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான ஒரு வழிமுறை ஆகும். மகரந்தத்தூள் ஆண் பாலணுக்களையும், சூல்கள் பெண் பாலணுக்களையும் கொண்டுள்ளன. வித்துமூடியிலித் தாவரங்களில் மகரந்தத் தூள்கள் நேரடியாகவே சூல்கள் மீது இடப்படுகின்றன. வித்துத் தாவரங்களின் பூக்களில் உள்ள சூல்முடியே சூல் வித்திலைகளின் ஏற்கும் பகுதியாகும். வித்துமூடியிலிச் சூல்களில் ஏற்கும் பகுதி சூல்துளை எனப்படுகின்றது. பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்கத்தில், மகரந்தச் சேர்க்கை ஒரு முக்கிய படி ஆகும். இவ்வகை இனப்பெருக்கத்தின் மூலம் மரபியல் பல்வகைமைத் தன்மை கொண்ட தாவரங்கள் உருவாகின்றன.

பூக்களிலிருந்து தேனீ மகரந்தத்தூள்களை எடுக்கும் காட்சி

மகரந்தச் சேர்க்கை பற்றிய ஆய்வு தாவரவியல், தோட்டக்கலை, பூச்சியியல், சூழலியல் போன்ற பல்வேறு துறைகளை ஒன்றிணைக்கின்றது. மகரந்தச் சேர்க்கையை, பூக்களுக்கும், மகரந்தக்காவிகளுக்கும் இடையிலான இடைவினையாகக் கொண்டு முதலில் ஆய்வு செய்தவர் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறித்தியன் கொன்றாட் இசுப்பிரெங்கெல் என்பவராவார். மகரந்தச் சேர்க்கையின் விளைவான கருக்கட்டல் மூலம் உருவாகும் "காய்த்தல்" தோட்டக்கலையிலும், வேளாண்மையிலும் முக்கியமான ஒன்றாகும்.

வகைகள்

தொகு

மகரந்தச் சேர்க்கைக்கான காவி/ஊடகம்

தொகு

மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்குத் தேவையான ஊடகத்தை அல்லது காவியைப் பொறுத்து, இது வகைப்படுத்தப்படலாம்.

உயிருள்ள ஊடகம்

தொகு

அனேகமாக, கிட்டத்தட்ட 80% மான மகரந்தச் சேர்க்கைக்கு ஓர் உயிருள்ள காவி அல்லது உயிரினம் பயன்படுவதாக நம்பப்படுகின்றது. அதாவது ஆண் பாலணுக்களான மகரந்த மணிகளை, பெண் பாலணுக்களான சூல் வித்திலைகளுக்குக் கொண்டு செல்வதில் வேறொரு உயிரினம் பயன்படுகின்றது. அப்படியான காவிகளைக் கவர பூக்கள் விசேடமான இயல்புகளைக் கொண்டுள்ளன. காவிகளைக் கவரும் விதமாக அவை அழகான கவர்ச்சிகரமான பூவிதழ்களைக் கொண்டிருக்கும். நறுமணம், மற்றும் அவற்றிற்கான உணவான தேன் என்பவற்றைக் கொண்டிருக்கும். பூக்களில் உணவுண்ணும்போது, அல்லது இனவிருத்திக்கான செயலில் ஈடுபடும்போது, அல்லது எதிரிகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இடமாக பூவைப் பயன்படுத்தும்போது, இவை பூக்களில் மகரந்தச் சேர்க்கை நிகழ உதவுகின்றன.

இயற்கையில் கிட்டத்தட்ட 200,000 வகையான விலங்கு மகரந்தக்காவிகள் இருக்கின்றன. அவற்றில் அனேகமானவை பூச்சியினங்களாகும்[1]. எறும்பு, வண்டு, தேனீ, குளவி (wasp), பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி (moth), இருசிறகிப் பூச்சிகள் என்பன காவிகளாகத் தொழிற்படும் பூச்சி இனங்கள் ஆகும். பறவைகளும், வெளவாலும் மகரந்தச் சேர்க்கையில் காவியாகத் தொழிற்படும் சில முதுகெலும்பிகளாகும். மனிதர்களும் மகரந்தச் சேர்க்கையில் உதவுகின்றனர். பூக்களைத் தொடும்போது அவர்கள் தம்மை அறியாமலே கூட மகரந்தத்தைக் காவ முடியும். சில சமயம் தெரிந்தே, செயற்கையான மகரந்தச் சேர்க்கை முறையில் செயல்பட முடியும்.

உயிரற்ற ஊடகம்

தொகு

வேறு எந்தவொரு உயிரினத்தின் துணையுமின்றி மகரந்தச் சேர்க்கை நடைபெறலாம். 10% மான பூக்கும் தாவரங்களில் மட்டுமே வேறு விலங்குகளின் உதவியின்றி மகரந்தச் சேர்க்கை நிகழ்வதாக அறியப்படுகின்றது[1]. பொதுவாக இவ்வகையான மகரந்தச் சேர்க்கை காற்றின் துணையுடன் நிகழும். புற்கள், ஊசியிலை மரங்கள் (conifers), இலையுதிர்க்கும் மரங்கள் போன்றன காற்றின் அசைவினால் மகரந்த மாற்றீட்டைப் பெறுகின்றன. நீர்வாழ் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையில் நீர் உதவுகின்றது. நீரினுள் வெளியேறும் மகரந்தமானது, பெண் பாலணுவில் பெறப்பட்டு கருக்கட்டலுக்கு உட்படும். வித்துமூடியிலித் தாவரங்களில் காற்றினால் நிகழும் மகரந்தச் சேர்க்கை மட்டுமே நிகழும். உயிரற்ற ஊடகத்தால் நிகழக்கூடிய 20% மகரந்தச் சேர்க்கயில் 98% காற்றினாலும், 2% நீரினாலும் நிகழும்.

மகரந்தச் சேர்க்கையின் பொறிமுறை

தொகு

தாவரங்களில் மகரந்தச் சேர்க்கையானது முக்கியமாக இரு வகை பொறிமுறையில் நிகழும். அவையாவன தன் மகரந்தச் சேர்க்கை, அயன் மகரந்தச் சேர்க்கையாகும். இயற்கையிலேயே இந்தப் பொறிமுறைகள் நிக்ழவதாயினும், மனிதரால் இதனை கட்டுப்படுத்தி, விரும்பிய பொறிமுறையில் செயற்கையாக மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்த முடியும்.

தன் மகரந்தச் சேர்க்கை

தொகு

ஒரு பூவிலுள்ள மகரந்தம் அதே பூவிலுள்ள அல்லது அதே தாவரத்திலுள்ள வேறொரு பூவிலுள்ள சூல்வித்துடன் மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாயின் அது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும்[2]. தன் மகரந்தச் சேர்க்கை நிகழும் தாவரங்களில், பொதுவாக, ஒரே பூவில் மகரந்தக்கேசரமும் (stamen), சூல்வித்திலையும் (carpel) காணப்படும். இது பொதுவாக தற்கருக்கட்டலுக்குட்படும் தாவரங்களைக் கொண்ட இனமாக இருக்கும். மகரந்தக் கேசரத்தில் இருக்கும் மகரந்தம், நேரடியாகவே சூல்வித்திலையில் இருக்கும் ஒட்டும் தன்மை கொண்ட சூல்முடி (அல்லது குறி அல்லது சூல்மூடி) (Stigma) யில் தொடர்பு கொண்டு, தொடர்ந்த கருக்கட்டல் செயல்முறையில் ஈடுபடும். சில அவரை இனத் தாவரங்கள், புல் வகைத் தாவரங்கள், ஓர்கிட் வகைத் தாவரங்கள் இவ்வாறான தன் மகரந்தச் சேர்க்கை செய்யும் தாவரங்களாக இருக்கும். இவற்றின் பூக்கள் சில சமயம் பூவிதழ்களாக் மூடப்பட்ட ஆண், பெண் பாலுறுப்புகளைக் கொண்டிருக்கும்.

தொடர்ந்து தன் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படும் தாவர இனங்களில் வேறுபாடுகள் தோன்றுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவும், அவை வீரியம் குறைந்தவையாகவும் வர நேரிடலாம்.

அயல் மகரந்தச் சேர்க்கை

தொகு

ஒரு தாவரத்தில் இருக்கும் சூல்வித்தானது, வேறொரு தாவரத்தில் இருந்து பெறப்படும் மகரந்தத்தால் கருக்கட்டப்படுமாயின் அது அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும். இந்த பொறிமுறைக்கு ஒரு பூவிலிருந்து, இன்னொரு பூவுக்கு மகரந்தம் எடுத்துச் செல்லப்பட வேண்டுமாதலால் காவிகளின் தேவை அவசியமாகின்றது. அனேகமான தாவரங்கள் அயன் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுவதனால் தாவர மரபியல் வேறுபாடுடைய இனங்கள் உருவாக முடிகின்றது. இவ்வகையான தாவரங்களில் பெண் பூக்கள் ஒரு தனியனிலும், ஆண் பூக்கள் வேறொரு தனியனிலும் இருப்பதுண்டு. ஒரே தாவரத்தில் இரு பகுதிகளும் இருக்குமாயின், சில சமயம், சூல்வித்து முதிர்ச்சியடைந்து மகரந்தத்தை ஏற்கும் தன்மையடைய முன்பாகவே மகரந்தம் முதிர்ச்சியுற்று விழுந்து விடுவதுண்டு. உருவவியல் காரணிகளும் தன் மகரந்தச் சேர்க்கையை நடைபெற விடாமல் தடுக்கக் கூடும். சூல்முடியானது மகரந்தக்கேசரத்தின் உயரத்தை விட அதிகமாக இருப்பின், மகரந்தச் சேர்க்கைக்கு, வேறொரு காரணியின் தேவை ஏற்பட்டு, அதன் காரணமாக அயன் மகரந்தச் சேர்க்கை நிகழும் வாய்ப்பு அதிகரிக்கும். அயல் மகரந்தசேர்க்கை நடைபெற புறக்காரணிகளான விலங்குகள், பூச்சிகள், காற்று, நீர் ஆகியவை உதவுகிறன்றன.

வகைகள்
  1. காற்று வழி--- அனிமோஃபிலி
  2. விலங்கு வழி--- சூஃபிலி
  3. பூச்சி வழி--- என்டமோஃபிலி
  4. பறவை வழி--- ஆர்னித்தோஃபிலி
  5. நீரின் வழி---- ஹைட்ரோஃபிலி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 US Forest Department: Pollinator Factsheet
  2. Cronk, J. K.; Fennessy, M. Siobhan (2001). Wetland plants: biology and ecology. Boca Raton, Fla.: Lewis Publishers. p. 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56670-372-7. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகரந்தச்_சேர்க்கை&oldid=3849241" இலிருந்து மீள்விக்கப்பட்டது