கருவூர்க் கண்ணம்பாளனார்

கருவூர்க் கண்ணம்பாளனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். கருவூர் இவர் வாழ்ந்த ஊர். இந்தக் கருவூர் இக்காலத்தில் கரூர் என வழங்கப்படுகிறது. கண்ணம்பாளனார் என்பது இவரது பெயர். கண் என்னும் கண்ணோட்ட அம்பைப் பாய்ச்சி மக்களை ஆள்பவர் என்பது இவரது பெயருக்கு உள்ள விளக்கம்.

சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன.
இவற்றில் சொல்லப்படும் செய்திகள்:

புன்னைப் பொன்னேர் நுண்தாது
நெய்தல் நிலத்துக் கானலில் வண்டல் விளையாடிக்கொண்டிருந்த தலைவியின் பின்புறத் தலைப்பின்னலில் தேரில் வந்த தலைவன் தான் தொடுத்த குவளைப்பூவை வைத்துவிட்டு ஏதும் பேசாமல் அவளது மார்பைப் பார்த்துவிட்டுச் சென்றானாம். அதனால் அவனை நினைந்து நினைந்து அவள் மேனி புன்னைப் பூவின் தாது போல் பொன்நிறம் கொண்டதாம். ஊர்மக்கள் அவளது மேனியிலுள்ள பொன்புள்ளிகளையும், புன்னைப்பூந் தாதுகள் உதிர்ந்துகிடக்கும் அவள் வண்டல் விளையாடிய இடத்தையும் பார்த்து அலர் தூற்றுகிறார்களாம் [1]
ஒளிறுவேல் கோதை ஓப்பிக் காக்கும் வஞ்சி
தலைவி கோதை என்னும் சேரமன்னன் காக்கும் வஞ்சிநகரம் போல் வனப்பு மிக்கவளாம். பிரிந்து செல்லும் தலைவன் அந்த அழகைத் துய்க்க விரைவில் மீள்வான். அவன் பிரிவதற்காக வருந்தவேண்டா எனக் கூறித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.[2]
தாம் தொடங்கிய ஆள்வினைப் பிரிந்தோன்
தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் தேடச் செல்லும், வழியில் தன் குட்டிப்போட்ட பெண்புலியின் பசியைப் போக்க யானைமேல் பாய்வதைப் பார்த்து விரைவில் திரும்பிவிடுவான் என்று கூறித் தலைவியைத் தோழி தேற்றுகிறாள்,[3]

அடிக்குறிப்புதொகு

  1. அகநானூறு 180
  2. அகநானூறு 263
  3. நற்றிணை 148